நீ ரசிக்க../கோ.முத்துசுவாமி

நீரசிக்க நானெழுத வேண்டும் நண்பா!
நிகழ்சுமையின் நகலெடுக்க கவிதை வேண்டாம்;
பூரசிக்கப் பொன்வண்டு; புனல் ரசிக்கப்
புகுந்தாடும் சிறுமீன்கள்! நுனிப்புல் தன்மேல்
ஓ! ரசிக்கப் பனித்துளியை வாங்கித் தாங்கும்!
ஓங்கார ஒலிரசிக்க காற்றும் சுற்றும்!
வா! ரசிக்க எனவழைக்கும் வாழ்க்கை! இஃதை
வளர்தமிழில் நீரசிக்க வடிப்பேன் நண்பா!

கிளைரசிக்கும் தன்மேலமர் கிளியை, சிட்டுக்
குருவியை வெண் புறாவையினும் புட்கள் தம்மை!
துளைரசிக்கும் உதடுகளில் குவியும் காற்றின்
துல்லியத்தை, குழலிசையாய் அலை பரப்பும்!
களைரசிக்கும் தான்வளரும் கழனி நெல்லை!
கழனிநீரில் தப்புமீனை ரசிக்கும் கொக்கு!
தளைரசிக்கும் தான்செய்யும் தடங்கல்! ஆயின்
தடையின்றி தமிழ்ரசிக்கத் தருவேன் நண்பா!

பொன்ரசிக்கும் தனிலாகும் நகையை; அந்தப்
பொன்னகையைப் பெண்ணணிய ரசிப்பான் ஆண்! கண்
முன்ரசிக்கும் அநுபவமும் மொழிவக் கேட்டு
மனம்ரசிக்கும் அநுபவமும் வேறு வேறாம்!
என்ரசிக்க இடர்மிகுந்த வாழ்வில், என்பாய்?
இடர்நீக்கி இனியவற்றை எண்ணிப் பார்நீ!
உன்ரசனைக் குட்படுமிவ் வுலகம்; அஃதில்
ஒன்றைச்சொல்! நீரசிக்க கவிதை சொல்வேன்!
**** *** ***