ஆதரவற்றவன்/சஞ்சயன்

ஆதரவற்றோர் இல்லம்
அரைப் பக்க விளம்பரம்..
உம்மோடு தீபாவளி
நாங்களும் கொண்டாட காசோலை
வரைவோலை
உடனடி பரிவர்த்தனை
பணம் அனுப்பி உதவுமாறு..

நல்லெண்ணம்
நல்லவாய்ப்பு..

கொண்டாடும் மனநிலைதான் இருக்காது
முதியோர்க்கு பெண்களுக்கும் ..
குழந்தைகள்தான் குதூகலிப்பர்
வேர்அறியாக்
குழந்தைகளின் காப்பகமே
தேர்ந்தெடுத்தேன்..

நன்கொடை நாற்பதாயிரம்..
பத்துச் சிறார்களின்
புத்தாடை பட்டாசு
அறுசுவை விருந்துணவு..

காசோலை எழுதும் முன்னர்
கலந்துரையாடல் செய்தேன்
காஞ்சிபுரம் புடவை
கண்ணாலே மேய்ந்தபின் மென்பட்டும்
இல்லாமல்போய் கலங்காரியில்
முடித்துக்கொண்ட
மனைவியின் தியாகம்..

செல்லமாய் கழுத்தை நெறித்துக்
காதில் ஓதிய
செல்லமகளின்
செல்போன் விண்ணப்பம் இல்லை உத்தரவு..
ஐந்து குழந்தைகளுக்கு இருபதாயிரம்
தானே ஆகும்

சின்னவனின் பட்டாசு பட்ஜெட்..
சிவகாசியை விலை பேசும்
இரு மாத போனஸ் கேட்டு இருமினாள்
வேலைக்காரி..
ஒரு குழந்தையின்
தீபாவளிச் செலவாக
நாலாயிரம் அனுப்பலாமா

வாசலில் வழக்கமாய்க்
கூப்பிடும் ஒரு குரல்..
ஐயா தர்ம பிரபு
நாலு ரூபாய் போட்டேன்..