வண்ணான் சால்

பானுமதி.ந

மூங்கில் பிளாச்சுக்களால்

வனைந்து பொன் மஞ்சளில்

அகமும் புறமுமென அமைந்த

அந்த சாலின் உள்ளே அழுக்கு ஆடைகள்

இடைவெளியினூடே சுவாசிக்கும்

அதன் பிடியும் மூடியும் அழகின் உருவம்

எத்தனைத் திணித்தாலும்

ஒரு குலுக்கலில் சிரிக்கும்

உன் மனதில் இருக்கட்டும் ஈரம்

என்னுள் வேண்டாம் என்று

தன் குட்டிக் கால்களால் குடை சாயும்

வீடு மாறுகையில் விட்டுவிட்டு வந்த

அது கால்களை இழுத்து இழுத்து

என்னைப் பார்க்க வந்ததொரு கனவில்

அதில் திணித்த ஈரம் என் கண்களில் கசியும்.