வவேசு
”கவிஞனே!
வா வா என்றாய் !
வந்தே விட்டேன்;
இப்போது ஏன்
குடைக்குள் ஒளிகிறாய் ?”
மழை கேட்டது.
”மழையே !
உன் இலக்கு பூமி;
என் தலையல்ல !
அதற்குத்
தடை வேண்டாமென்றுதான்
குடை விரித்துக் கொண்டேன்;
ஏரி குளம் எல்லாம் சென்று நிரப்பு;
அதுதான் உன் பரப்பு.
பூமியின் அரவணைப்பில்
ஊற்று நீராகி
உயிர் காக்கும் அமுதமாய் வா !
அப்போது
கையேந்திக் குடிப்போம்
கை கூப்பி வணங்குவோம்;
இடையில் இந்தக் குடைக்கெல்லாம்
விடை கேட்காதே !
இளவயதில்
குடையென்ன?
ஒன்றுமே இல்லாமல் உன்னில் நனைந்தவன் நான்:
அங்கே பார் சிறுவர் சிறுமியர்
அவர்களில் நான் நனைவதை நினைவில் கொள்;
போகட்டும்
உன் வரவில்
அந்தப் பசிய புல் நுனிகளும் இலை நுனிகளும்
அழகாய் புன்னகைக்கின்றனவே !
அந்த வரவேற்புக்கு ஈடு உண்டா? “ என்றேன்.
மழை திடீரென்று குடையைச் சரித்து
என்னை நனைத்தது;
பிறகு சொன்னது.
“இனி கவிஞர்களிடம்
கேள்வி கேட்க மாட்டேன்”
அன்பு மழையே ! உனக்கு
ஆயிரம் நன்றிகள். நீ தேவன்!
அனைத்தும் அறிந்த அற்புதன் !
உன் வரவு என்றும் நல்வரவு ஆகுக.
