எஸ்ஸார்சி
ஐ டியில் வேலை பார்க்கும் அவன் பெண்பார்ப்பதற்கு வந்திருக்கிறான். அவனோடு அவன் தாயும் தந்தையும் வந்திருக்கிறார்கள். அவர்களைப் ’ பெண் பார்ப்பதற்கு வாருங்கள்’ என்று பெண் வீட்டார் அழைக்கவே அவர்கள் மூவரும் வந்திருக்கிறார்கள்.
இந்த பெண் பார்க்கும் சமாச்சாரம் எல்லாம் கர்நாடக விஷயம் இதுவோ நவீன காலம்.. ஆனாலும் காதலித்து ஒருவர் திருமணம் முடிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. கல்யாணத்திற்கு காத்திருக்கும் மாப்பிள்ளைப் பையன்கள் எல்லோராலும் காதல் சமாச்சாரம் சாத்தியப்படுவதில்லை. அதற்கு ஒரு மனோ வலிமை என்று மட்டுமில்லை கூடவே முகராசியும் வேண்டும். அனேகமாக அந்த மனோவலிமை பராக்கிரமங்கள் எப்படியோ இங்கு பெண்களுக்கு ச்சற்று கூடுதலாக இருப்பதை அனுபவித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்..
பத்துப் பெண் வீட்டார்களை கை பேசியில் தொடர்புகொள்ள அவர்களில் ஐந்து பேர் பிள்ளை வீட்டாரோடு பேசிவிட்டாலே பிள்ளை வீட்டார் பெரிய அதிஷ்டசாலி. அவர்களுக்கு முதல் ராங்க் தரவேண்டும். பெண்ணைக் கல்யாணத்துக்கு என்று வைத்து இருப்பவர்கள் மட்டும்தான் எதனையும் கறாராகத் தீர்மானம் செய்வார்கள் .பிள்ளையைப்பெற்றவர்கள் ரிசிவிங் எண்டில்தான்…
வரதட்சிணை க்கொடுமை அது இது எல்லாம் மலைஏறி வெகுகாலம் ஆயிற்று. முதிர்கன்னி கண்ணீர் விடும் கவிதைகள் எல்லாம் எழுதினால் இனிப் போணி ஆகாது. அங்கங்கு மாப்பிள்ளைகள் கல்யாணத்துக்குப் பெண் கிடைக்காமல் வயது நாற்பது தாண்டி தலை நரைத்து சொட்டை விழுந்து பரிதாபமாக வீதியைச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழகமோ புதுச்சேரியோ சட்டசபைத் தேர்தலின் போது பொதுவுடமைக் கட்சி க்காரர்கள் பிரசாரத்திற்கு வீதி நாடகங்கள் போடுவார்கள்.அது ஒரு காலம். அதனில் மாப்பிள்ளைக்கடை என்று ஒரு நிஜ நாடகம் உண்டு.. அதனை அனேக முறை போட்டிருப்பார்கள். நொண்டி மாப்[பிள்ளை தொடங்கி பென்சனுள்ள அரசு உத்யோகம், விடுப்பு பிரதானமாகிய ஆசிரியர் உத்யோகம் கரன்சி நோட்டு எண்ணி எண்ணிப் பார்க்கும் வங்கி உத்யோகம், ஜபர்ஸ்தாய்ப்பார்க்கும் கலெக்டர் உத்யோகம் வரை மாப்பிள்ளை தினுசுகள். மாப்பிள்ளையை ரகம் ரகமாய் ஏலம் விடுவார்கள்.. பெண்ணைப்பெற்ற ஏழைத்தந்தை ஒரு மாப்பிள்ளையையும் விலைக்கு வாங்கமுடியாமல் நொந்து நூலாகி அதே மாப்பிள்ளைக்கடையில் ஒரு ஓரமாய் மஞ்சள் பையோடு நின்றுகொண்டிருப்பார். வாழும் சமூகம், கலாசாரம் இங்கே எத்தனை க்கேவலமாய்போனது என்பதனை ஒரு தலைவர் விளக்கியபடி வீர உரைஆற்றிக் க்கொண்டிருப்பார். இந்த மாப்பிள்ளைக்கடை சமாச்சாரம் எல்லாம் இனி இங்கே வேலைக்கே ஆகாது..
சரி விஷயத்துக்கு வருவோம்.
‘’ எம் பொண்ணு மாப்[பிள்ளையோட ஒரு ஐந்து நிமிஷம் தனியா ப்பேசணும்னு சொல்றா’ இது பெண்ணின் தந்தை மாப்பிள்ளையின் தந்தையிடம் பவ்யமாய்ச் சொல்லி முடிக்கிறார்..
‘ இது எல்லாம் இந்த காலத்துல ரொம்ப சகஜம். பேஷா பேசட்டும்’ பதில் சொன்னார் பிள்ளையின் தந்தை.
பெண்ணும் பையனும் தோட்டத்துப்பக்கமாய் இருக்கும் தென்னை மரத்தின் கீழாக நின்று கொண்டார்கள். அங்கே அவர்களுக்கு நாற்காலிகள் எதுவும் போடப்படவும் இல்லை.
‘ நீங்க பொண்ணு பார்க்கற நிகழ்ச்சி வரைக்கும் வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல்ல.’ அவள் ஆரம்பித்தாள்.
‘’ஏன் ஏன் அப்பிடி சொல்றீங்க’ அவன் கேட்டான்.
‘ நான் வேலைக்குப்போனதும் வீடு கட்டக்கடன் வாங்கியதால் மாதம் முப்பது ஆயிரம் ஈ எம் ஐ கட்டவேண்டும். இது சொன்னதுமே கழண்டுபோன வரன்கள் பல உண்டு..
அம்மாவும் அப்பாவும் என்னோடுதான் இருப்பார்கள் நான்தான் அவர்களைப்பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சொல்வேன். இந்தப்பெண் வேண்டவே வேண்டாம் என்று சிலர் ஓடியேபோனார்கள்.
என் தாயும் தந்தையும் அவர்களால் முடியும் வரைத் தனி ஜாகையில் இருப்பார்கள்.. அவர்கள் செலவுக்கு மாதம் இருபத்தைந்து ஆயிரம் ஆகலாம். நான் தான் அதனைத்தரவேண்டும். இப்படிச்சொன்னதும் பிய்த்துக்கொண்டவர்கள் பலருண்டு.
நீங்கள் மட்டும்தான் இந்த சமாச்சாரங்கள் எதனையும் பொருட்படுத்தவே இல்லை. ஆகத்தான் பெண் பார்க்கும் படலம் வரை வந்து விட்டீர்கள்’
‘சரியாகத்தானே நான் செய்திருக்கிறேன். என் மீது என்ன தவறு’
.’ தவறு என்னிட்ம்தான். நான் என் அலுவலகத்தில் ஒருவரைக்காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணமும் செய்துகொள்வேன்.. என் அப்பாவுக்கு இது விஷயம் எதுவும் தெரியாது’
‘ என்ன சொல்கிறீர்கள் நீங்கள்:. இங்கு வந்தது எங்களுக்கு வெட்டி வேலைதானா’
பதறிப்போய்க்கேட்டான்.
‘ மெதுவாகப்பேசுங்கள். ஆமாம். வெட்டிவேலைதான். வீட்டிற்குப்போய் போன் போட்டு நான் உங்களுக்குப்பதில் சொல்கிறேன் என்று சொல்லி இங்கிருந்து புறப்படுங்கள்.’
‘ என் பெற்றோர்களுக்கு நான் என்ன சமாதானம் சொல்வேன்’
‘ என் தந்தையிடம் சொல்லாத ஒரு உண்மையை உங்களிடம் சொல்லிவிட்டேன். ஒருபொய்சொல்லி உங்களைத் திருமணம் செய்துகொண்டு உங்களுக்கு அநியாயம் செய்ய எனக்கு மனம் ஒப்பவில்லை. நான் மட்டும் என்ன தவறா செய்கிறேன்’ அவள் மெதுவாகப்பேசினாள்.
இருவரும் தனியாகப்பேசுவது முடிந்தது. அவரவர் இடத்துக்குப்போனார்கள்.
பெண்ணைப்பெற்ற தந்தை திரி திரி என்று விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். பெண்ணின்தாய் அடுப்படியில் ஏதோகாரியம் செய்துகொண்டு இருந்தார். வீடு அமைதியாக இருந்தது.
‘ நாம புறப்படலாம்’ என்றான் அவன்.
‘ என்னடா ரெண்டு பேரும் தனியா பேசுனிங்க. என்ன ஆச்சு’
‘ இங்க பேச வேண்டாம் நாம வீட்டுல போய் பேசிக்கலாம்’ அவன் பதில் சொன்னான்.
‘ கெளம்பு கெளம்பு’ அவன் விரட்டினான். அவர்கள் மூவரும் அங்கிருந்து புறப்பட்டார்கள். பெண்ணின் தகப்பனார் அதிர்ந்துபோய் நாற்காலியில் சுருண்டு அமர்ந்திருந்தார். அவரின் பெண் அவளின் லேப் டாப்பில் தன் அலுவலக வேலையை த்தொடர்ந்துகொண்டார். தாய் அடுப்படியைவிட்டு வரவே இல்லை.
மூவரும் நடுத்தெருவில் ஒரு ஒரு அடியாய் எடுத்து வைத்து நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள்.
‘ என்னடா ஆச்சு’
‘ ஒண்ணும் இல்லேப்பா’
‘உன் முகமே விபரீதமாய் சேதி சொல்லுதே’ அம்மா பட்டென்று சொன்னாள்..
‘ அவ யாரையோ காதலிக்கிறாளாம். என்கிட்ட சொன்னா’
‘ இது என்ன கஷ்டகாலம். நமக்கு இது என்ன வம்பா. உண்மையைச்சொல்லியிருக்கா. நம்ம கழுத்த அறுக்கலயே. அதுவரைக்கும் அவ நல்ல பொண்ணு’ அவன் தந்தை ஒரு ஒரு வார்த்தையாய்ச்சொன்னார்.
-’ என்னடா இப்பிடி பெரிய பாறாங்கல்லை தூக்கி ப்போடற’’ அவன் அம்மா அழ ஆரம்பித்தாள்.
அவன் மொபைல் போனைக்கையில் எடுத்தான். பெண்ணின் தந்தைக்கு போன் போட்டான். அவன் தந்தை அவனையே நோக்கிக்கொண்டிருந்தார்
‘ நான்தான் பொண்ணு பாக்கவந்த பிள்ளையோட அப்பா பேசுறேன்’ முழுப்பொய்தான் சொன்னான்.
‘ சொல்லுங்க சம்பந்தி’ பெண்ணின் தந்தை பேசினார்.
‘ அந்த பெரிய வார்த்தை வேண்டாம் விஷயம் அப்பிடி இல்ல. மன்னிக்கணும் மன்னிக்கணும் என் பையன் அவன் ஆபிசுல ஒரு பொண்ணோட பழகிகிட்டு இருக்கானாம். அவன் எங்ககிட்ட இது விஷயம் சொல்லவே இல்ல சொல்லி இருந்தா இந்த பொண்ணு பாக்குற வேலயே எங்களுக்கு இல்ல. இதோ அந்தப்பொண்ணு என் வீட்டு வாசல்ல உக்காந்துகிட்டு இருக்கா கூச்சல் போடறா’’’
‘ என்ன சார் இப்பிடி ஒரு குண்ட தூக்கி போடுறீங்க.’ சம்பந்தி சார் ஆனார்.
‘ ஒரே ஒரு முக்கியமான சேதி. உங்க பொண்ணுக்கும் அப்பிடி எதாவது காதல் கீதல்னு இருக்கலாம். அவளுக்குத் தெரியாம அத மொதல்ல உறுதி பண்ணிக்குங்க. இன்னொரு மாப்பிள்ளய அதுக்கப்புறமே பாருங்க’ மொபைலை ஆஃப் செய்துவைத்தான்.
மூவரும் விரக்தியாய் நடந்தனர். ஒரு பேருந்தைப் பிடித்தனர்
