ஒரு பலூன்காரரின் பகற்பொழுது/ அனங்கன்

அடிக்கும் வெயிலில் வெடித்துத்
தெரிக்குது ஊதிவைத்த பலூன்கள்.
அதற்குப் பயந்தால் பலூன் விற்பது பார்வைக்குத் தெரியாது.

முன்புபோல இல்லை விழாக்களும்…குழந்தைகளும்.
விருப்பங்கள் மாறிக்கொண்டிருக்கும்போது
வாழ்க்கையைத்தான் மாற்றிக்கொள்ள முடியவில்லை.

நவீன வளர்ச்சியில் சீனத்தயாரிப்புகள் வீழ்ச்சியின்
விளிம்பிற்கு இட்டுச்செல்கிறது
காற்றடைத்த பைகளையும்.

காற்றை நிரப்பும் கருவி வேலை
செய்யவில்லை பலநாளாய்….
வெறும்வயிற்றோடு வாயால் ஊதி ஊதி
தாடையெல்லாம் வலிக்கிறது.
நடந்து நடந்து தேயும் கால்கள்
இரவு உறக்கத்தைத் திருடிக்கொள்கிறது.

நாளுக்கு ஒன்றிரண்டு வாங்கும்
குழந்தைகளின் களிப்பான சிரிப்பிற்காய் நாளெல்லாம் தேய்கிறது இலக்கின்றி .

காற்று இறங்கும் பலூன்போல
இற்றுப்போன வாழ்வில்
வண்ணமும் இல்லை…. வசந்தமும் இல்லை.