வண்ணதாசன் பதிவு

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு ஜன்னல் வழியே பார்க்கிறேன்.
பின் வீட்டு மாமரம் முழுவதும், உச்சி முதல் உள்ளங்கால் வரை, தாமிர இலைகள் துளிர்த்துக் கிடக்கின்றன. அது இன்னும் அடர்த்தியடைந்து, செம்பு வண்ணம் அடையும் போது, அந்த மரத்தை இரு கைகளும் உயர்த்தி வணங்க வேண்டும். அரசந்துளிர்களும் மாந்துளிர்களும் என் வணக்கத்திற்கு உரியவை என நினைக்கிறேன்.

திரும்பத் திரும்ப, வாய்க்கும் போதெல்லாம் ஜன்னல் வழியாகப் பார்த்தபடி இருக்கிறேன். ஏன் அவற்றை அசைக்கும் அளவுக்குக் கூட இந்த உலகில் காற்றில்லை? ஏன் அவை வெயிலில் உறைந்து போய்விட்டன?

சுற்றுச் சுவருக்கு மேலே மாந்தளிர்களும், சுற்றுச் சுவருக்குக் கீழே அதன் நிழல்தளிர்களும் விழுந்துகொண்டு இருக்கும் இந்த உச்சிப் பகல் என்னவோ செய்கிறது.

எதற்குத் துளிரும் நிழலும் தெரிகிறது? துளிர் மட்டும் போதாதா? நிழல் மட்டும் போதாதா?

எனக்கு எதற்கு இரண்டும்?