காதல் என்பது/ஜெயராமன் ரகுநாதன்

நானும் லதாவும் அந்த வருஷம் இரண்டாம் முறையாக தாஜ் மகால் போயிருந்தோம். அன்பர்கள் இதில் பெரிசாக ஒன்றும் காதல் கதைகள் எதிர்பார்க்க வேண்டாம். கல்யாணம் ஆகி 39 வருடங்கள் முடிந்த பின்னால் காதல் இருக்கும் இடங்கள் எல்லாம் மாறிவிட்டிருக்கின்றன.
நான் முன்னே நடந்து போகும்போது ஒரு சின்ன பள்ளத்தைப்பார்த்ததும் திரும்பி “பாத்து வா, பள்ளம்” என்பதிலும், ரெஸ்டாரண்டில் வைக்கப்பட்ட தண்ணீரை முதலில் எடுத்துக்குடித்துவிட்டு,” உங்களுக்கு இது வேண்டாம், ரொம்ப ஜில்லுனு இருக்கு” என்பதிலும் காதல் இருப்பதாகத்தான் இப்போது எனக்குப் படுகிறது.
மேலும் இது எங்களின் காதல் வ்யாசம் இல்லை என்பதாலும் விஷயத்துக்கு வந்துவிடுகிறேன்.
“ஷில்ப் கிராம் என்று கேட்டு இங்கே வந்துவிடுங்கள். இதற்கு மேல் கார் அனுமதி இல்லை”
டிரைவர் சொன்னதை சரியாகக்கேட்காதது என் தப்பு.
இந்த ஷில்ப் கிராம் ஏனோ என் மனசில் நிற்கவே இல்லை. ராயசமாக தாஜை விட்டு வெளியே வந்தோம். ஒரு கூட்டம் இடது பக்கம் போக, கூடவே போனோம். வெளியே வந்தால் புழுதிக்கு நடுவில் சாணி வாசத்துடன் குதிரை வண்டிகள். கிச்சாமி கையைக்கடித்த குதிரையின் பேராண்டி போல இருந்த ஒரு குட்டைக்குதிரை வண்டியைத்தேர்ந்தெடுத்து “பார்கிங் ஸ்தலத்துக்குப்போ” என்றால், அவன் படு ஸ்ரத்தையாக் ஈஸ்ட் கேட்டில் கொண்டு வந்து விட்டான்.
அதுவும் பார்க்கிங் தான், ஆனால் பஸ்களுக்கு!
விஷயம் புரியாமல் அங்கும் இங்கும் விஜாரித்து, “ அதெங்கே இங்க இருக்கு! இன்னும் சுத்தி போணும், ஏழு கிலோமீட்டர்” போன்ற அபிபிராயங்களுக்கு நடுவில் அங்கே ஒரு CNG ரிக்ஷா ஏற்பாடு செய்து , டிரைவரிடம் ஃபோன் பேசி (”அங்கெல்லாம் என்னால காரக்கொண்டு வரமுடியாது! டிராஃபிக் ஜாம் அதிகம்! நீங்க CNG பிடிச்சு வந்திடுங்க!”) ஒரு CNG பிடித்தால் அந்தப்பாவி 150 ரூவா குடுங்க என்று அடாவடி! வேறு வழி இல்லாமல் ஏறி உட்கார்ந்தோம்.
இருட்டு ரோடில் பத்து நிமிஷம் ஓட்டினவன் கூடவே வந்து கொண்டிருந்த இன்னொரு CNGyஇடம் ஏதோ ஹிந்தியில் அளவளாவினான். இருவரும் வண்டியை நிறுத்த, என்னிடம் “அதுல போய் ஏறிக்கிங்க!”
இரண்டாம் ஆசாமி வாய் பேசாமல் எங்களை ஏற்றிக்கொள்ள, அந்த CNG சகல வித முனகல்களுடன் நொண்டி நொண்டி அந்தப்பாடாவதி ரோடில் ஊர்ந்தது.
சுற்றிலும் கும்மிருட்டு. நடமாட்டமும் குறைவாக இருக்கவே லதா “நல்லா வந்து மாட்னோம்” பார்வை பார்க்க, நான் தைரியனாக இருப்பது போல நடிக்க முற்பட்டேன். எங்கெல்லாமோ சுத்தி இன்னும் மை ஈஷின கும்மிருட்டு ரோடில் எதற்கோ நிறுத்தினான். அடுத்து ஃபைட் சீன் தான் என்று நான் கை முஷ்டியை இறுக்கிக்கொண்டு நடுக்கத்துடன் காத்திருக்க, இருளில் ஒரு போலீஸ்காரர் தோன்றினார். சடக்கென்று முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டு சலோ என, மறுபடி CNG குதியலாய் ஓடிய….ச்சீ…. நடந்தது.
“சட் சட்”டென்று சந்து பொந்துகளில் நுழைந்தான். காடா விளக்கொளியில் எல்லாம் நிழலான சமாச்சாரங்களாகவே தெரிந்தது. அதான் போலீஸ்காரர் இருக்கிறாரே என்ற தைரியம் கொஞ்சம் கூட ஏற்படாத போலீஸ் ஆசாமி. எதானும் அசம்பாவிதம் என்றால் இவர்தான் என் கைகளை பின்னால் இறுக்கிப்பிடித்துக் கொண்டு பாக்கெட்டில் கை விடுவார் என்றே தோன்றிய உருவம்!
திடீரென்று வழியில் அவர் மோஷனில் இறங்கிக்கொள்ள மறூபடி இருட்டு சந்து, CNG குதியாட்டம் நாங்கள் பயப்பிராந்தி! இப்படியான பத்து நிமிடங்களுக்குப்பிறகு திடீரென்று தென்பட்ட விளக்கொளியில் தெரிந்த ஒரு சந்தில் திரும்ப………..
அட! ஷில்ப் க்ராம் பார்க்கிங்!! இனிமேத்தான் வேடிக்கையே!
“ என்னா 150 ரூவா தரே? எம்மாம் சுத்து
சுத்தியிருக்கேன்”
“ அவ்வளவுதானே பேசினேன்!”
“ யார்ட்ட என் கிட்டயா பேசின?”
“ அப்ப நீ ஏன் வண்டி மாத்தின?”
“அப்ப நீ ஏன் என் வண்டில ஏறின?”
சம்பாஷனை ஹிந்தியில்தான், மொழிபெயர்ப்பு என்னுது!
இதற்குப்பிறகு என் தமிழின் வீச்சை அவன் அறியும் வகையில், கோவிந்தராஜ புரம் ஸ்டீபனின் உபயத்தில் நான் ஸ்கூலில் கற்றுக்கொண்ட மொழியின் ஸ்லாக்கியமான சில பிரயோகங்கள் செய்யலானேன். அவனும் ஆக்ராவின் சந்து பொந்து மொழிப்பிரயாகம் செய்தான் என்பது என் சம்சயம், நல்ல வேளை எனக்குப்புரியவில்லை.
எங்களுடைய விவாதம் ஒன்றும் அவ்வளவு இலக்கியத்தரமாக போக வில்லை என்பதால் நான் வெற்றிகரமாக அவன் கேட்டதையே கொடுத்துவிட்டு (250 ரூபாய்!)எங்கள் காரை நோக்கி ஓடிய வீரக்கதையின் மேல் விவரங்களை இன்னொரு சமயம் விஸ்தரமாக எழுதுகிறேன்.
இதை ஏன் எழுதினேன் என்றால், அடுத்த நாள் மதுராவில் த்வாரகீஷ் கோவிலுக்கு இப்படி ஒரு ஸைக்கிள் ரிக்ஷாவில் போக வேண்டி வந்தது. படு ஜாக்கிரதையாக, லதாவின் ஆலோசனைகளைக்கேட்டு அவனிடம் ஐம்பது ரூபாய் பேசிக்கொண்டேன்.
வரைபடம் போடாத குறையாக எங்கே இறக்கி விட வேண்டும் என்பதெல்லாம் பேசி, ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்துப்போட்டுவிட்டுக் கிளம்பினோம்.
அந்த ஒல்லி ரிக்ஷா இளைஞன் மேடு பள்ளம் நிறைந்த மதுரா தெருக்களில் ரிக் ஷா மிதிக்க பட்ட பாடைப்பார்த்தபோது கொஞ்சம் மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும் நேற்றைய அனுபவம் என்னை தேத்தியிருந்தது.
கோவில் பார்த்துவிட்டு வரும் வரை காத்திருந்து மறுபடி அழைத்துப்போன அந்த ஒல்லி ஆசாமி என்னை இறக்கி விட்டபின் நூறு ரூபாய் நோட்டை நீட்டினேன்.
முகமெங்கும் வியர்வையும் முதுகோடு ஒட்டின ஈரச்சட்டையுமாய் இருந்த அவன் ”நீங்க கோவில்லேர்ந்து சீக்கிரம் வந்துட்டீங்க! அதனால நாப்பது ரூவாதான்” என்று பாக்கி அறுபதை கொடுத்தான்.
“சில்லரை வேணாம்! நீயே வெச்சுக்க”
லதா குறுக்கிட்டு சொல்ல, அப்போது நான் அவளைப்பார்த்த பார்வையில் காதல் இருந்தது என்றால் நம்ப மாட்டீர்களா என்ன?

One Comment on “காதல் என்பது/ஜெயராமன் ரகுநாதன்”

Comments are closed.