கம்பன் கவியமுதம்—61/ வளவ. துரையன்

ஊடலில் உதை

குதைவரிச் சிலைநுதல் கொவ்வை வாய்ச்சியர்
பதவுகைத் தொழில்கொடு பழிப்பி லாதன
ததைமலர்த் தாமரை அன்ன தாளினால்
உதைபடச் சிவப்பன உரவுத் தோள்களே [142]
[குதை=அம்பின் ஓர் உறுப்பு; சிலை=வில்; பதவு=மிருதுவான; பழிப்பு=குற்றம்; ததை= நெருங்கிய; தாள்கள்=பாதங்கள்]

குதை என்பது அம்பின் ஓர் உறுப்பாகும். நாணில் பொருந்தும் இடமாக இருக்கலாம். அப்படிப்பட்ட குதை என்னும் ஓர் உறுப்பை உடைய கட்டமைந்த வில்லைப் போன்ற நெற்றியையும் கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயையும் உடைய மகளிர் இருக்கிறார்கள். அவர்கள் தத்தம் ஆடவர்களுடன் ஊடுவதுண்டு. அந்த ஊடற்காலத்தில் அவர்களுடைய மென்மையான கையினால் செம்பஞ்சுக்குழம்பு ஊட்டப்பெற்ற குற்றமில்லாத தாமரை போன்ற பாதங்களினால் ஆடவரை உதைப்பதும் உண்டு. அப்படி உதைபட்டதால் அந்த ஆடவரின் தோள்கள் செம்பஞ்சுக்குழம்பு பெற்று செந்நிறம் அடைந்து விட்டனவாம்.
இப்பாடல் ஆடவருக்கும் மகளிருக்கும் நடக்கும் ஊடல் நாடகத்தைக் காட்டுகிறது.