
வட கிழக்கு பருவமழை
சற்றுமுன் துவங்கிவிட்டது என்கிறார்கள்
இன்னும் இங்குவரவில்லை
வாசலில்தான் உட்கார்ந்திருக்கிறேன்
இளவெய்யில் காய்கிறது
மழைக்காலங்களை
நான் விரும்புவதற்கு காரணம்
பிரியமான ஒருவர்
என்கூடவே அமர்ந்திருப்பதுபோல
மழை என்னைச் சுற்றிச் சுற்றி
வந்துகொண்டிருக்கும்
பேச்சுத்துணையின்றி
என் தாடைகள் இறுகிப்போயுள்ளன
மழை வந்தால்
அதனோடு பேசிக்கொண்டிருப்பேன்
மழை நாட்களில்
நான் கொஞ்சம் பொறுப்பற்றவனாவேன்
எல்லோரும் மழையைப் பார்த்துக்கொண்டிருப்பதால்
என் வேலைகளை யாரும்
அடிக்கடி நினைவூட்ட மாட்டார்கள்
மழைக்காலங்களில் குடிக்கும்போது
குடிப்பது தொடர்பான குற்ற உணர்ச்சிகள்
சற்று குறைந்துவிடுகின்றன
குளிரில் அது அனுமதிக்கப்பட்ட ஒன்று
குடைக்குக் கீழே
பாதி நனைந்தபடி செல்லும் பெண்கள்
இந்தக் கொடுமையான உலகத்தை
சற்றே அழகாக்குவார்கள்
மழையின் காரணமாக குழந்தைகளுக்கு
பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கும்போதெல்லாம்
ஏனோ எனக்கும் சந்தோஷமாக இருக்கும்
சற்று மழைவிட்டதும்
காக்கைகள் சிறகுகளை உதறுவதுதான்
எத்தனை அழகு
மழை பெய்யும்போதெல்லாம்
என் மனதில் ஒரு மெல்லிய காமம்
கிளர்ந்துகொண்டே இருக்கும்
நான் மழைச்சத்தத்தின் ஊடே
லேசாக விசில் அடிப்பேன்
மழையைபோலவே
காமம் என்பது உற்சாகம்
ஒரு விடுபடும் மனநிலை
மழைக்காலங்களில்
காலம் நீண்டிருக்கும்
நான் பகலில்
நீண்ட தூரம் தூங்குவேன்
இந்த நகரம் பெரு மழையில்
மூழ்கியபோதுகூட
ஆயிரம் துயரங்கள் நடுவே
நான் மழையை விரும்பினேன்
மழைக்கு
மணற் திட்டுகள் மட்டுமல்ல
சில கல் மனங்களும்கூட
கரையலாம்

நானும் கூடத்தான்
எனக்கும் கூடத்தான்
என் அனுபவத்தை
தாங்கள் எழுதியது எப்படி?