காகித நிலவு/எம் டி முத்துக்குமாரசாமி


ஸ்டுட்கார்ட் ந்கரில் எனக்கு தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் வரவேற்பாளர் எனக்கு ஏழாவது மாடியில் உள்ள தோட்டத்தைப் பார்த்த அறை வேண்டுமா அல்லது ஐந்தாவது மாடியிலுள்ள தெருவை நோக்கிய அறை வேண்டுமா என்று கேட்டார். நான் அவரிடம் நானொரு நிலவு கவனிப்பாளன் எந்த அறையிலிருந்து பார்த்தால் நிலவு தெரியுமோ அந்த அறையை எனக்குக்கொடுங்கள் என்று கேட்டேன். அவர் எனக்கு ஐந்தாவது மாடி அறையைத் தந்தார். என் அறையின் ஜன்னல் திரைச்சீலையை விலக்கியதுதான் தாமதம் தெரு, தெருவின் இரு பக்கங்களிலும் உயர்ந்திருந்த அடுக்ககங்கள், அதை விட உயரமான மலையுச்சி திராட்சைத் தோட்டங்கள் அதன் மேல் தொங்கும் நிலவு எனக் காட்சி விரிந்தது. மறு நாள் அந்த வரவேற்பாளர் நிலவு உங்களுக்குத் தெரிகிறதா நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேட்டார். ஓ அது ஒரு காகித நிலவு என சலித்துக்கொண்டேன். எங்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பெண் வா ஒரு காபி அருந்தலாம் என என்னைக்கூப்பிட்டார். அவர் நடுத்தர வயது பெண்மணியாக உயரமாக இருந்தார். நான் நண்பர் ஜேபி அவருடைய ஹோட்டலிலிருந்து வருவதற்காகக் காத்திருந்தேன். இன்னும் நேரமிருந்தது. நாங்கள் காபி அருந்த உட்கார்ந்தோம். நான் ஏன் ஸ்டுட்கார்ட் நிலவை காகித நிலவு என்றழைத்தேன் எனக் கேட்க அவர் ஆர்வமாய் இருந்தார். நான் Nat King Cole-இன் பாடல் “it is only a paper moon” பாடலைக் கேட்டிருக்கிறீர்களா அதில் அது காகித நிலவு அதை எங்கே வேண்டுமானாலும் மாட்டலாம் என ஒரு வரி வரும்; அந்தப் பாடலைப் பற்றி முராகமி தன் நாவல் IQ 84இல் கூட எழுதியிருக்கிறார். இங்கே ஸ்டுட்கார்ட் கட்டிடங்கள் எல்லாம் ஒழுங்காய் பிரம்மாண்டமாய் காங்க்ரீட் வனங்களின் பகுதி போல இருக்கின்றன. இதன் நடுவே நிலவு காகித நிலவு போலவே இருக்கிறது என்றேன். அவர் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் உயர் நிதி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாய் பணியாற்றுவதாய் சொன்னார். அவருக்கும் ஃபிராங்க்ஃப்ர்ட்டின் நிலவு காகித நிலவு போலத்தான் தோன்றியதாம் ஆனால் அவருக்கு அதை விவரிக்க சரியான வார்த்தை கிடைக்கவில்லையாம். நீ அதைச் சொல்ல சரியான வார்த்தை கண்டுபிடித்துவிட்டாய் என்றார். அவர் அன்றே ஃபிராங்க்ஃபர்ட் செல்ல இருந்தார் இல்லையென்றால் நாம் கொஞ்சம் ஒன்றாகச் சுற்றிக்கொண்டிருக்கலாம் என்றார். எங்காவது எப்போதாவது என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டோம். அன்றிரவு காகித நிலவு மேலும் தேய்ந்திருந்தது.