ஆசாரக்கோவை—3/வளவ.துரையன்

பாடல் 3: தவறாது செய்ய வேண்டியவை

தக்கிணை வேள்வி தவம் கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க; உய்யாக்கால்
எப்பாலும் ஆகா கெடும்.

பொருள் :

தவறாமல் விதிப்படி செய்யத்தக்கவை நான்கு :

தக்கிணை – தக்ஷிணை (நாம் அடைந்த பலனுக்கு பிரதியுபகாரமாக அவரவர்க்கு உரிய ஊதியத்தைக் கொடுத்தல்)

வேள்வி – இறைவழிபாடு. (நமக்குக் கிடைத்தவற்றுக்கு நன்றி செலுத்தும் விதமாக இறைவனை வணங்குதல்)

தவம் – புலன்,மனவடக்கம். (உடலையும் மனதையும் நம் வசப்படுத்தும் அதற்காக உடலை வருத்தி நாம் செய்கின்ற விரதம் முதலான ஆன்மீக சாதனை)

கல்வி – குரு வாயிலாக முறையாக லௌகீக ஆன்மீக நூல்களைக் கேட்டல், கற்றல்.

இவற்றை முறையாகச் செய்யாவிட்டால் எவ்விதத்திலும் பயனின்றி வாழ்க்கை வீணாய்ப் போகும்.

காண்க : திருக்குறள் அதிகாரங்கள் – நன்றியில்செல்வம், கடவுள் வாழ்த்து, தவம், கல்வி, கேள்வி.