ஆய்க்குடி கிராமம்/ராமகிருஷ்ணன் தியாகராஜன் 

சமீபத்தில் அறிமுகமான ஒரு நண்பரின் தாய் 86 வயதை கடந்தவர். கடந்த மாத ஆரம்பத்தில், அவர் என்னிடம் கூறினார்: தீபாவளி முடிந்த மறுநாளிலிருந்து எங்கள் ஊரில் (தென்காசிக்கு அருகிலுள்ள ஆய்க்குடி) பாலசுப்ரமணியஸ்வாமியின் கோயில் திருவிழா துவங்கும். ஒரு வாரத்திற்கு திருவிழா நடைபெறும். இந்தவருடம் நீங்கள் ஏன் வரக்கூடாது?

வருகிறேன் என்று நானும் ஒத்துக்கொண்டேன். எனது நண்பரின் விவரங்களின்படி ஆய்க்குடியை கிராமம் என்றுதான் புரிந்துகொண்டேன். எனது சித்தியின் ஊரைப் போல – திருவாருர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருவேலி (அ) சற்குணேஸ்வரபுரம் – இருக்கும் என்றும் நினைத்துகொண்டேன். ஆனால், ஆய்க்குடி கிராமம் அல்ல. ஒர் பேருராட்சி. (நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் முதன்முதலில் பார்த்த கருவேலி இன்னமும் மிகப்பெரிய மாற்றங்களை அடையாமல் ஒர் அகழ்வாராய்ச்சி சின்னத்தைப் போல கிராமமாகவே இருந்து வருகிறது.)

கோயில் திருவிழா மிகவும் விசேஷமானது என்பது ஆய்க்குடிக்கு சென்றபிறகுதான் எனக்கு விளங்கியது. அத்திருவிழாவில் அந்த ஊர் மக்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்தினருக்கும் அங்கு இடமுள்ளது. சுழற்ச்சிமுறையின்படி அனைவருக்கும் இடம் கொடுக்க்பபட்டுள்ளது.

திருவிழாவின் சமயத்தில் உற்சவர் இருமுறை அந்த ஊரை சுற்றிவருகிறார். ஒவவொரு முறையும் அவருடைய ஊர்வலத்திற்கு சுமார் மூன்று மணியாகிறது. அந்த ஊர்வலத்தில், உற்சவரை தூக்கி செல்லும் பணியில் இருப்பவர்கள் அனைவரும் ஆய்க்குடியில் வசிப்பவர்கள் அல்ல. அவர்கள் தத்தமது பொருளாதார தேவைகளுக்குக்காக

வெவ்வேறு மாநிலங்களில், ஏன் வெளிநாடுகளில் பணிபுரிந்து-கொண்டிருக்கிறார்கள். திருவிழாவிற்காக தஙகளது சொந்தஊரான ஆய்க்குடிக்கு வருகிறார்கள். ஒரு வாரம் இருக்கிறார்கள். திருவிழா முடிந்தப்பிறகு, தங்களது இடங்களுக்கு சென்று விடுகிறார்கள்.

கவனச்சிதறல்களுக்கு இன்றைய வாழ்வில் எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், ஆய்க்குடி மக்கள் அவர்களது ஊர் திருவிழாவில் பங்கேற்கும் விதம் மற்றும் அதை நடத்தும் விதம் மிகவும் சிறப்பானதாகவே உள்ளது.