இனிக்கும் தமிழ் – 151/டி வி ராதாகிருஷ்ணன்

சித்தர் பாடல் ஒன்று

பிறவா வரம்

இருப்பையூரில் வாழும் சிவனே, நான் எத்தனை முறை தான் பிறப்பேன்? என்னை பெற்று பெற்று தாயார்களும் உடல் சலித்து விட்டார்கள். ஒவ்வொரு பிறவியிலும் உண்மையை தேடி தேடி கால் சலித்து விட்டேன். ஒவ்வொரு முறையும் என் தலை எழுத்தை எழுதி எழுதி பிரமனும் கை சலித்து விட்டான். போதுமப்பா…மீண்டும் ஒரு கருப்பையில் வரமால் என்னை காப்பாற்று….

பாடல்

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே – நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையிலே வாராமற் கா’

பொருள்

மாதா – அன்னையரும்
உடல் சலித்தாள் -என்னை பெற்று பெற்று உடல் சலித்து விட்டார்கள்
வல்வினையேன் – கொடிய வினையை உடைய நான்
கால்சலித்தேன்-கால் சலித்து விட்டேன்
வேதாவும்- வேதத்திற்கு அதிபதியான பிரம்மனும்
கைசலித்து விட்டானே – என் தலை எழுத்தை எழுதி எழுதி கை சலித்து விட்டான்
நாதா -நாதனே
இருப்பையூர் – இருப்பையூர் என்ற ஊரில்
வாழ்சிவனே = வாழ்கின்ற சிவனே
இன்னுமோர் அன்னை -மீண்டும் ஒரு அன்னை
கருப்பையிலே – கருப் பையிலே
வாராமற் கா – வாராமல் என்னை காப்பாயாக
என பிறவா வரம் வேண்டுகிறார்

-