
பொதுவாக எழுத்தாளர்களின் வாழ்க்கை போராட்டங்கள் மிகுந்ததாகவும், பரிதாபத்துக்குரியதாகவும் இருப்பதே வழக்கம். அந்த வழக்கத்துக்கு மாறாக மிக அற்புதமான வாழ்க்கையை வரமாகப் பெற்று வாழ்ந்தவர் லா.ச.ரா. என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட லால்குடி சப்தரிஷி ராமாமிருதம். அன்பான மனைவி, அன்பான குழந்தைகள், நல்ல வேலை, 91 வயது வரை வாழ்ந்த நிறைவான ஆரோக்கியமான வாழ்க்கை. மட்டுமல்லாமல் அவருடைய எழுத்துக்கு எல்லோருமே வசமாகியிருந்தார்கள். எல்லா தரப்பினராலும் வாசிக்கப்பட்டவராகவும் எல்லோராலும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார் லா.ச.ரா. இவ்வளவுக்கும் அவருடைய எழுத்துக்கள் யாவும் இலக்கியச் சிறுபத்திரிகைகளில் வெளிவந்தவை அல்ல; ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வந்தவை.
சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் எழுத்தாளர்கள் என்பதால் பொதுவாக எழுத்தாளர்களுக்கு அவர்களின் குடும்பத்தில் அங்கீகாரம் கிடைக்காது. ஆனால் லா.ச.ரா.வின் எழுத்தை அவரது குடும்பமும் கொண்டாடியது. என்னுடைய முதல் வாசகன் என் புதல்வன் சப்தரிஷிதான் என்று சொல்லியிருக்கிறார் லா.ச.ரா. முதுமையில் அவருக்குக் கண்ணில் பிரச்னை ஏற்பட்டு சில காலம் எழுத முடியாமல் போனபோது அவர் புதல்வர் சப்தரிஷிதான் லா.ச.ரா. சொல்வதை எழுதியிருக்கிறார். சமயங்களில் நள்ளிரவில் கூட விழித்து சப்தரிஷி என்று அழைப்பாராம் லா.ச.ரா. உடனே சப்தரிஷி காகிதத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு போய் தந்தை சொல்வதை எழுதியிருக்கிறார். இந்த பாக்கியம் வேறு யாருக்கும் கிடைப்பது அரிது. அதேபோல் 91 வயது வரையிலும் எழுதிக் கொண்டிருந்தார் லா.ச.ரா. உடலுக்கு முதுமை வந்திருந்தாலும் அவருடைய எழுத்து எப்போதும் போலவே இருந்தது.
என்னுடைய பள்ளிக்கூட நாட்களிலேயே நான் லா.ச.ரா.வின் எழுத்துக்கு அடிமையாகிக் கிடந்தேன். அறுபதுகளின் இறுதியிலிருந்து இன்றுவரை அதேதான் நிலை. நான் அப்போது பதின்பருவத்தில் இருந்தேன். லா.ச.ரா.வின் கதைகளைப் படித்து நானும் என்னையொத்த இளைஞர்களும் பித்துப் பிடித்தவர்களாக இருந்தோம். யாருக்குப் பெண் குழந்தை பிறந்தாலும் ஜனனி என்றே பெயர் வைப்போம். என் தம்பி ஜனனி என்றே புனைப்பெயர் வைத்துக் கொண்டான்.
தி.ஜா.வுக்கும் லா.ச.ரா.வுக்கும் என்ன பொருத்தம் என்றால், பாரதிக்குப் பிறகான தமிழை இவர்கள் இருவரையும் போல் அழகு படுத்தியவர்கள் வேறு யாரும் இலர். பிரெஞ்சு மொழியை ஜான் ஜெனே எவ்வாறு செழுமைப்படுத்தினாரோ அப்படிச் செய்தார்கள் தி.ஜா.வும் லா.ச.ரா.வும். ஜாக் தெரிதா (Jacques Derrida) 1974-ல் Glas என்ற ஒரு சிறிய புத்தகத்தை எழுதினார். அதில் அவர் ஹெகலின் தத்துவத்தையும் ஜெனேயின் எழுத்தையும் ஒப்பிட்டார். வடிவத்திலும் மிக வித்தியாசமான நூல் அது. ஒரே பக்கம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இடது பக்கம் ஹெகல்; வலது பக்கம் ஜெனே. (படம் கீழே) இதேபோல் லா.ச.ரா.வையும் வேதங்களையும் – குறிப்பாக அதர்வ வேதம் – ஒப்பிட்டு ஒரு நூல் எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை. அதை ஒப்பீடு என்று கூட சொல்லக்கூடாது. வரலாற்றின் இரண்டு வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட இரண்டு வித பிரதிகளுக்குள் செல்லும் பயணம்.
என்னுடைய அறிதல் முறையை (perception) நான் அசோகமித்திரனிடமிருந்தும் மொழியை தி.ஜா., லா.ச.ரா. இருவரிடமிருந்தும் எடுத்துக் கொண்டேன் என்று சொல்ல முடிகிறது. மொழி எவ்வளவு முக்கியம் என்று இன்றைய எழுத்தாளர்களின் பலகீனமான பிரதிகளைப் பார்த்தால் தெரிகிறது. அவர்கள் அனைவரும் தங்கள் மொழியை வளப்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் அவர்கள் கற்க வேண்டியது தி.ஜா., லா.ச.ரா.
முகநூல் பதிவு : ஆர.கந்தசாமி
