
நந்தவனம் என்று சொல்லப்படுகிற நான்கைந்து நந்தியாவட்டை மரங்கள் மட்டுமே இருக்கின்ற அந்த இடத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்தான் வேம்பு. எட்டு வயதுப் பையன். வல இடதாய்ப் பூக்கூடையை மாட்டிக்கொண்டு ஒவ்வொன்றாய்ப் பறித்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு பூவையும் பிள்ளையாரப்பா’ என்று சொல்லிக்கொண்டே பறித்தான்.
அதிகாலையாயிருப்பதால் பனி பட்டு மரம் லேசாய் வழுக்குவதாலும், இப்போதுதான் அவன் குளித்துவிட்டு வந்தபடியால் லேசாய்க் குளிரின் துவட்டல் இருந்தாலும் உஷாராகவே பறித்தான் வேம்பு.
“பிள்ளையாரப்பா… பிள்ளையாரப்பா… இன்னும் பத்து பிள்ளையாரப்பா சொன்னால் கூடை நிறைந்துவிடும்.
கூடை நிரம்பினால் குஷி வந்துவிடும் வேம்புவுக்கு. பூக்கள் சிதறிவிடாத வகையில் வேகமாக, கூடையை ஆட்டிக்கொண்டே கோவிலுக்கு ஓடுவான்.
இப்போது மரத்திலிருந்து கீழே இறங்க வேகமாய் முயலும்போது பாம்பின் சீற்றம் கேட்க, காலை உள்ளிழுத்துக்கொண்டு பார்த்தான். அந்த விடிகாலை வெளிச்சத்தில் ஒரு பாம்பு பளபளவென்று ஆக்ரோஷமாய் நிற்பது தெரிந்தது.
“பிள்ளையாரப்பா?” என்று கத்தினான் வேம்பு. உடம்பு நடுங்கியது.
“பிள்ளையாரப்பா. உனக்குத்தானே பூ பறிக்கிறேன். பாம்பைப் போகச் சொல்லு.” பயத்தில் மரத்தின் மீது ஏறிக்கொண்டான். கிளை சலசலத்தது.
குளிருக்கு பயந்து மரத்தின் பட்டையில் பதுங்கியிருந்த தவளையொன்று பாய, வெடுக்கென்று அதைக் கவ்வி ஊர்ந்தது பாம்பு.
பாம்பு போனாலும் இரண்டு நிமிஷம் அங்கேயே இருந்தான் வேம்பு.
“பிள்ளையாரப்பா! காப்பாத்து!” என்று கீழே குதித்து, திரும்பிக்கூடப் பார்க்காமல், பூக்கள் சிதறாமல் கோவிலுக்கு ஓடினான்.
கோவில் என்றால் ரொம்பப் பெரியது இல்லை, அரை அடிக்கு, சின்னதாய்ப் பிள்ளையார். பக்கத்தில் மூஞ்சூறு சைஸில் மூஞ்சூறு. அவ்வளவுதான். சின்னதாய்த் தாழவாரத்துடன் மண்டபம். பிள்ளையார் துர்த்திக்கு வீட்டில் வைப்பதைப் போல் சின்னப் பிள்ளையார்.
வேம்புவின் அப்பா, – வேம்பு மாதிரி வேம்பு சிறுவனாயிருந்தபோது ஒரு கிணற்றில் கண்டெடுத்தார் . .வீட்டிலேயே கொஞ்ச நாள் வைத்து பூஜை பண்ணினார். யாரோ வீட்டில் சிலையை வைக்கக்கூடாது, கோவில் கட்டி வைக்கலாம் என்று சொல்ல, ஊர் பெரியவராயிருந்த சண்முகநாத குருக்கள் நிலம் கொடுத்து மண்டபமும் கட்டினார்.
அப்போது அந்தத் தெருவில் இருபது வீடுகளும் நிறைய மனிதர்களும் இருந்தார்கள்.
திடீரென வேம்புவின் அப்பா பிள்ளை யாரிடமே போய்ச் சேர்ந்துவிட சண்முகநாத குருக்களே அந்தக் கோவிலைப் பார்த்துக்கொண்டு பூஜைகள் செய்து வந்தார்.
சண்முகநாத குருக்களின் மகனுக்குச் சென்னை யில் பெரிய வேலை கிடைத்துவிட நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவிட்டு அவரும் சென்னைக்கக் கிளம்பினார். அதனால் சீனிவானிடம் கோவிலை ஒப்படைத்தார். அதற்காக வருடத்துக்கு 500 ரூபாய் பணமும், பல கலம் நெல்லும் அவர் அனுப்பிக்கொண்டிருந்தார்.
பேரன் வேம்புவுடன் கோவில் பணிகளைச் சிரமப்பட்டு செய்து கொண்டிருந்தார் சீனிவாச குருக்கள்.
காலம் யாரை விட்டது? அவருக்கும் கண் பார்வை குறைய, தள்ளாட்டம் துவங்க, குட்டிப் பிள்ளையார் கோவிலைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு. குட்டிப் டையன் வேம்புவின் தலை விழுந்தது. 5 வயதிலிருந்து குருக்களானான் வேம்பு. கஜானனம் முதலான சின்னச் சின்ன ஸ்தோத்திரங்களைச் சொல்லிக்கொடுத்திருந்தார் தாத்தா சீனிவாசன்.
பிள்ளையாருக்குப் பக்கத்தில் பூக்களைக் கொட்டினான் வேம்பு. சரியாய்ப் பூத்தொடுக்க அவனுக்கு வராது. மூணு பூ கட்டினால் ரெண்டு உதிர்ந்துவிடும். கண் நன்றாக இருக்கும்வரை தாத்தா கட்டிக் கொடுத்தார். இப்போது அவரால் முடியவில்லை . அதனால் என்ன? பிள்ளையார் கோபித்துக்கொள்ள மாட்டார் என்பது வேம்புவுக்குத் தெரியும்.
கோவிலிலிருந்த பித்தளைச் செம்பை எடுத்துக்கொண்டு பின்னாலிருந்த குளத்துக்குப் போய்த் தண்ணீர் மொண்டான்.
பிள்ளையாரைக் குளிப்பாட்டி விட்டு அழுந்தத் துடைத்தான். அவனுக்கும் தாத்தா அப்படித்தான் துவட்டுவார். சிவப்புத் துண்டைச் சாத்திவிட்டு, பூக்களைப் பிள்ளையாரின் காலடியில் கொட்டினான். “இந்தா, உனக்கும் ஒண்ணு.” மூஞ்சூறுக்கும் தலையில் ஒரு பூ வைத்தான்.
வீட்டுக்கு ஓடினான். வெண்கலப் பானையில் தாத்தா சாதம் வைத்திருப்பார் என்று அவனுக்குத் தெரியும். நைவேத்தியம்.
பூப் பறிக்கும்போது தான் பாம்பைப் பார்த்ததை பயத்துடன் சொன்னான்.
“ஈஸ்வரா! காலையில் இரை திங்கிற சர்ப்பத்தைப் பார்த்தியாடா. கெட்ட சகுனமாச்சே வேம்பு” என்றார் தாத்தா. கோவிலுக்குப் போய் வந்து நைவேத்தியம் சாதத்தை தாத்தாவும், பேரனும் . போட்டுக்கொண்டு சாப்பிட்டார்கள் அதிகாலையில் சீக்கிரமே எழுந்திருப்பதால் சாப்பிட்டவுடன் தூக்கம் போடுவான் வேம்பு.
வேம்புவிற்கு விழிப்பு வந்தபோது வாசலில் தாத்தா, மணியக்காரர் எல்லாம் ஏதோ பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு. என்னவாயிருக்கும் என்று தெரிந்துகொள்ள அவசரமாய் முகம் கழுவியபோது தாத்தாவின் முகம் சோகமாயிருப்பது போல வேம்புவுக்குப் பட்டது.
“என்ன தாத்தா உம்முனு இருக்கீங்க? எனக்கு நேரமாச்சு. நல்லாத் தூங்கிட்டேன் போலிருக்கு போய்க் குளிச்சிட்டு, பிள்ளையாருக்கு விளக்குப் போட்டுவிட்டு வந்துடறேன்.”
வேம்புவைக் கட்டிக்கொண்டார் தாத்தா, “நாம ஊரை விட்டே போகணும்டா வேம்பு.”
“சும்மா இருங்க குருக்களய்யா! பேரன்கிட்டே இப்படிச் சொன்னால் எப்படி? எல்லாம் நல்லதுக்குத்தான். இது இல்லாவிட்டால் ஏதோ ஒண்ணு. பயப்படாதீங்க” மணியகாரர் ஆறுதல் சொன்னார்.
இடுப்பில் துண்டுடன் ஒன்றும் புரியாமல் கோவிலுக்குப் போனான் வேம்பு.
“ஈஸ்வரா! என்னை இப்படிச் சோதிக்கிறியே? கண்களை இறுக மூடினார் தாத்தா. கோவிலைத் தம்மிடம் ஒப்படைத்துவிட்டு மகனுக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டதால் மெட்ராஸ் சென்ற சண்முகநாத குருக்கள், அதே பையன் பதவி உயர்வில் வெளிநாடு போய்விட சொந்த ஊருக்கே திரும்பி வந்து கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் பண்ணி, தானே பார்த்துக்கொண்டு கடைசி காலத்தைக் கழித்துவிடுவதாகச் சொல்வார் என்று எதிர்பார்க்கவேயில்லை.
கோவிலுக்குப் போய்விட்டு வந்த வேம்புவிடம் நடுங்கியபடி சொன்னார் தாத்தா.
ஓவென்று அழுதான் வேம்பு. அவனால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“நான் இல்லாம எப்படித் தாத்தா பிள்ளை யாருக்கு பூஜை நடக்கும்?”
“கோலாகலமா நடக்கப் போறதாண்டா”
“அதெல்லாம் பிள்ளையாருக்குப் பிடிக்காது தாத்தா”
“என்னடா பண்றது வேம்பு?”
“தாத்தா, பிள்ளையாரை விட்டுவிட்டு நான் வரமாட்டேன். நீ சொன்னியே பிள்ளையாரை அப்பா மாதிரின்னு.”
“ஆமாண்டா . அப்பாதான்.”
“அப்பாவை விட்டுவிட்டு நாம மட்டும் எப்படித் தாத்தா வெளியூர் போறது? தப் பில்லையா? அப்பா கோவிச்சுக்க மாட்டாரா தாத்தா ?”
பதில் சொல்ல முடியாமல் தவித்தார் சீனிவாசன், கண்ணீர் வழிந்தது. போனை அணைத்து அறுதல் சொன்னார். மறுநாள் ராவோடுராவாக ஊரை விட்டுக் கிளம்பிவிடலாம் எனத் திட்டம் போட்டார். வேம்புவை ஏதாவது வேத பாடசாலையில் விட்டு, தான் காசி, ராமேஸ்வரம் என்று போய்விடலாம் என்று அபிப்பிராயப்பட்டார்.
மறுநாள் வழக்கத்தைவிட நான்கைந்து முறை கோவிலுக்குப் போய்விட்டு வந்தான் வேம்பு. நந்தியாவட்டை மரத்தடியில் ரொம்ப நேரம் நின்றான். குளத்தங்கரையில் மண்ணைக் களைந்தபடி கையூன்றி உட்கார்ந்து
அழுதான்.
தாத்தா இரவு ஒன்பது மணிக்குக் கிளம்பலாம் என்று பார்த்தார். பகலில் போக வெட்கம் மாதிரி இருந்தது. சாமான்கள், துணிமணிகளைச் சின்னச்சின்ன மூட்டைகளாகக் கட்டினார். மணியக்காரர் கொடுத்த பணம் கையிலிருந்தது. எடை மிகுந்தவற்றைத் தான் தூக்கிக்கொள்ள, சின்ன மூட்டைகளை வேம்பு தூக்கிக்கொண்டான்.
கிளம்புமுன், “பிள்ளையாரைப் பார்த்துவிட்டு வந்துடறேன் தாத்தா” என்று சொல்லிவிட்டுப் போய்வந்தான் வேம்பு. தாத்தாவிற்கு துக்கமாயிருந்தது.
தாத்தாவும் பேரனுமாய்த் தத்தம் சுமைகளைச் சுமந்தபடி அந்த இருட்டில் நடக்கத் தொடங்கினார்கள்.
தாத்தாவுக்கு நடக்கக் களைப்பு ஏற்படா விட்டாலும் பேரனுக்குக் களைப்பாயிருக்குமோ என்று நினைத்து மணிக்கொருதரம் ஓய் வெடுத்தார்.
பொழுது விடிந்தபோது ஏதோ ஓர் ஊரின் குளக்கரையை அடைந்திருந்தார்கள். குளிக்க என்று குளித்தெழுந்தான் வேம்பு. தாத்தா குளிக்க இறங்க, பக்கத்தில் பூமரம் ஏதாவது இருக்கிறதா எனத் தேடிக் கண்டுபிடித்துப் பறிக்கத் தொடங்கினான்.
குளித்தவுடன் பேரனைக் காணாது. வேம்பு! வேம்பு!” என்றார் தாத்தா. குளத்தில் விழுந்துவிட்டானா?
“இதோ இருக்கேன் தாத்தா. பூ பறிச்சிட் டிருக்கேன்.”
“பூ எதுக்குடா பூ? அதான் கோவிலை விட்டுட்டு வந்தாச்சேடா…”
“இல்லையே தாத்தா! கடைசியாகக் கோவிலுக்குப் போகும் போது பிள்ளையாரைக் கும்பிட்டேன். அவர்தான் என்னை விட்டுட்டுப் போறியேடா வேம்புன்னு சொன்னார். நான் இல்லாமல் அவர் என்ன செய்வார்? பாம்பெல்லாம் வேற வருது. அதனாலே நீங்க கொடுத்த மூட்டையிலே வச்சு, பிள்ளையாரை நானே தலையிலே வச்சு தூக்கிக்கிட்டு வந்துட்டேன் தாத்தா.”
தாத்தா அதிர்ந்துபோய்ப் பார்க்க, வேம்பு இறக்கி வைத்திருந்த பொதிகளிலிருந்து விடுபட்டு, பளபளவென அந்த விடிகாலைக் குளத்தங்கரையில், மண் தலையில் புன்னகை தவழும் முகத்துடன் பிள்ளையார் ஜிங்கென்று உட்கார்ந்திருந்தார்.
பூக்களைப் போட்டான் வேம்பு. தாண்டிப்போன யாரோ ஒருவர், குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட்டபடி சென்றார்.
