சாவு -3/க. நா. சு.

இருப்பவர்களை அந்தந்த தேசத்துச் சர்க்கார்
கணக்கெடுக்கிறது. இறந்தவர்களைக்
கணக்கெடுப்பதில்லை. ஏனோ தெரியவில்லை.
இத்தனைப்பேர் செத்திருப்பார்கள் என்று
நான் எண்ணவில்லை என்று ஒரு கவி
எழுதினான். செத்தவர் உலகில் ஜனத் தொகை
பெருகிவிட்டால் என்ன செய்வார்கள்
என்று எனக்குத் தெரியவில்லை.
குடும்பக் கட்டுப்பாடு செய்வார்களோ?
அதற்கு ஒரு இலாகா, மந்திரி,
பிரச்சாரகர் எல்லாம் தேவைப்படுமே
இத்தனைப்பேர் செத்துத் தொலைந்தால்
அந்த உலகில் இடங்காணாதே
என்கிற தர்ம சிந்தனை மனிதனுக்கு வேண்டாமோ?