மழையும் கவிதையும்/ எஸ் வி வி

மழை
எழுதிக் கொண்டிருக்கிறது
கவிதை

மென் சொற்களில்
சிலிர்க்க வைத்தது தூறலில்

அதற்கே ஆரவாரக் கை தட்டல்
வெண் மேகத்திடம் இருந்து

மின்னல் வேக புகைப்படங்களும் அசத்த
ஆனந்தக் கண்ணீர் சொரிய ஆரம்பித்து விட்டது வானம்

நனைந்து ஓடிக் கொண்டிருக்கிறாள்
தெருவோரக் கடைக்காரி

இடிய இருப்பது
அறியாத சுவரின்
விரிசலை உற்றுப்
பார்த்தபடி
பீடி பற்ற வைத்துக் கொள்கிறார்
கொல்லத்துக்காரர் மாரி

கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார்
பாதுகாப்பான குடியிருப்பில்
கோப்பையில் கொதிக்கும்
தேநீர் விடுவிக்கும் ஆவியின் ஊடே
மழையின் கவிதையை
மொழி பெயர்த்துக் கொண்டிருக்கும்
பாவலர் ஒருவர்

      ***