
தெப்பக்குளமான தெரு
பெயர் நிரூபணம்
பெயர்ப்பலகை
பொய்யுரையாது
வண்ணம் பாதி ஆழ்ந்த
………..குளத்தெரு
விற்றல் பொறியான
அஞ்சலகர்
குடை விற்கும் ஆர்டர்
வருவதற்குள்
பணி ஓய்வுத் திருநாள்
வரவேண்டும் சார்
என் காதோரம்
கிசுகிசுத்தார்!
மழையில் முழுதும்
நனைந்த எலுமிச்சைக் கோணியில்
தானும் ஓரம் அமர்ந்து
பசி நனைக்கும்
நடைபாதை கமலம்
பூக்கட்டும் ஆட்டத்தில்
கைக்கு எட்டும் தூர
ஆவி டீ ஆற விடும்.
ஆறுமுக அண்ணன்
வானொலிப் பெட்டியில்
மழை மழை என உருகும்
ஏதோவொரு
இருகுரல் டூயட்
பாட்டில் எங்கோ ஓரிடத்தில்
சண்டூர் ஒலிக்கும்
சன்ன இசை!
மழைக்கு சுரம் பிடிக்கும்
இசைக்குறும்பன்
கொட்டம் !
எங்கேயோ விரையும்
நீர்ப்பீய்ச்சி கார்
முட்டளவு நீரில்
துணி காக்கும்
மகளிர் சமர்
ஒரு கை விரிகுடை பற்ற
மறு கை காய்கறிப்பை
பற்றிய
தோள் அழுத்தும்
அலுவலகப் பை சுமக்கும்
நித்த நித்த
தெருவீதி நடக்கும்
களைத்த நடையோடும்
வீடு கூடேகும் உழைக்கும் மகளிர்
பார வண்டி பரந்தாமன்
தெருத்தெருவாய்
குரல் கூவி
கூடை கீரை விற்கும்
கண்ணம்மா
அன்றன்றைய அம்பானி
ஆட்டோ கோவிந்தன்
எல்லோருக்கும் பெய்யும் மழை.
எல்லோருள்ளும் பொசியும் பசிக்கனல் !
நீரில் நனையா
நெருப்புச் சுடா
உருவறு மாயப்புள்!
