கவிஞர் தாமரை பேட்டி

கே: திரைப் படத்தில் நீங்கள் முதலில் யார்மூலம் பாடல்கள் எழுத ஆரம்பித்தீர்கள்?

ப: நான் திரைப்படப் பாடலாசிரியர் ஆவதற்கான முயற்சியை இரண்டு கட்டங்களாகச் செய்தேன். முதன்முதலாக 94ஆம் ஆண்டு வேலையை விட்டு வந்து இளையராஜா, தேவா போன்றவர்களைச் சந்தித்து வாய்ப்புக் கேட்டேன். கிடைக்கவில்லை. ஊருக்குத் திரும்பிப் போய்விட்டேன். அதன் பிறகு கதை, கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். முதலில் போட்டிக் கதைகள் எழுதினேன். எந்தப் பத்திரிகையில் போட்டி அறிவிக்கப்பட்டாலும், அதில் என் கதையோ, கவிதையோ கண்டிப்பாகப் பங்குபெறும். என்னை எனக்கும், மற்றவர்களுக்கும் நிரூபிக்க இது பயன்பட்டது. பரிசாக வந்த தொகை மிகவும் பயன்பட்டது. நல்ல இலக்கியப் பரிசுகள் எனக்குக் கிடைத்தன. அதன்மூலம் என்னைப் பிறருக்கு அடையாளம் தெரிய ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 15 பரிசுகள் கிடைத்தன. பரிசுகள் வாங்குவதற்காக அடிக்கடி சென்னை வருவேன். குமுதம்-ஏர் இந்தியா சேர்ந்து நடத்திய கவிதைப் போட்டியில் ‘தொலைந்து போனேன்’ என்ற என் கவிதை பரிசு பெற்றது. பரிசாக சிங்கப்பூர் செல்ல எனக்கு இலவச டிக்கட் கிடைத்தது. அப்போது சுஜாதா அவர்கள் குமுதம் இதழின் ஆசிரியராக இருந்தார். அந்தப் பரிசு என்னை எல்லோருக்கும் தெரிய வைத்தது. 1996ல் நான் சிங்கப்பூர் போனேன். என்னுடைய அனுபவங்கள் விரிவடைந்தன. அதன் பிறகுதான் சென்னையிலே நிரந்தரமாக வந்து தங்க முடிவு செய்தேன்.
இரண்டாம் கட்டமாக நான் மீண்டும் வாய்ப்புத் தேடியபோது, என்னுடைய பிரசுரமான கதைகள், பரிசுபெற்ற கவிதைகள், கட்டுரைகள் எல்லாம் முன்பே எல்லோருக்கும் தெரிந்திருந்த காரணத்தால் மிக உதவியாக இருந்தது. சாவி அவர்கள் தம் கைப்பட ‘நான் உங்கள் விசிறி’ என்று கடிதம் எழுதினார். என்னிடம், சாவியில் தொடர்கதை எழுதும்படிக் கேட்டுக்கொண்டார். ‘நேற்றைய மிச்சங்கள்’ என்ற ஒரு தொடர்கதையை சாவிக்காக எழுதி வந்தேன். 21 வாரங்கள் வெளிவந்தது. அதிலும் நான் பிரபலமானேன். இந்த முறை ஒரு இசையமைப்பாளரிடமோ இயக்குனரிடமோ சென்று வாய்ப்புக் கேட்கும் பொழுது எனக்கு ஒரு அடையாளம் இருந்தது. நான் சீமான் அவர்களைச் சந்தித்தேன். அவர் தேவாவின் இசையில் ஒரு பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார். இந்தப் பாடல் ஸ்டூடியோவில் தயாராகிக் கொண்டிருந்த பொழுது விக்ரம் அவர்களின் உதவியாளர் என்னைச் சந்தித்தார். அவர் பாடலைப் பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொன்னதுடன், விக்ரம் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்தார். விக்ரம் அப்போது ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ என்ற படம் செய்து கொண்டிருந்தார். அந்த படத்தில் ஒரு பாடலுக்கு வாய்ப்புக் கொடுத்தார். ‘மல்லிகைப் பூவே, மல்லிகைப் பூவே’ என்ற அந்தப் பாடல் மிகுந்த வெற்றி அடைந்தது. படமும் பெரிய வெற்றி பெற்றது.
அதன் பிறகு எனக்கு வாய்ப்புக்கள் வர ஆரம்பித்தன. ஆனாலும், ஒவ்வொரு வாய்ப்பை அடையவும், என்னை நிரூபிக்கவும் மிகவும் கடினமாக இருந்தது. பெண் கவிஞர் என்பதால், ஒவ்வொரு புது இயக்குனரிடம் போகும்போதும் எனக்கு அங்கீகாரம் கிடைப்பது கடினமாக இருந்தது. என்னால் கையாள முடியுமா என்ற ஒரு கேள்விக்குறி ஒவ்வொரு முறையும் வருகிறது. அதனால் என்னை மீண்டும், மீண்டும் நிரூபிக்க வேண்டி இருக்கிறது. என்னிடம் பாடல்காட்சியை விவரிக்க அவர்களுக்குத் தயக்கம் இருக்கும். நானும் சில கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகிறேன். நிபந்தனைகள் போடுவேன். அதாவது, தூய தமிழ்ப்பாடல்கள் தான் எழுதுவேன், மோசமான இரட்டை அர்த்தப் பாடல்கள் எழுத மாட்டேன், ஆங்கிலம் கலக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்லி விடுவேன். இதன் காரணமாக நான் சுமார் ஒரு நூறு வாய்ப்புக்களுக்கு மேல் இழந்திருக்கிறேன். ஆனால் அது எனக்கு நன்மையே செய்தது. எனக்குக் கிடைத்த வாய்ப்புக்கள் நல்ல தரமான இயக்குனர்களிடம் கிடைத்தது. நான் தரமான பாடல்களுடனே ஆரம்பித்தேன். இப்படித்தான் கௌதமைச் சந்தித்தேன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அவர் பாடல்கள் கொடுத்தார்.
2002ம் ஆண்டில் ‘காக்க காக்க’ என்ற படத்துக்குப் பாடல் எழுதினேன். படம் பெரிய வெற்றி கண்டது. சூர்யாவுக்கு அது அடுத்த கட்டம். கெளதமுக்கு அந்தப் படம் நல்ல பெயர் வாங்கித் தந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் நல்ல இசை அமைப்பாளராக உருவானார். எனக்கும் அந்தப் படத்திற்குப் பிறகு பெயர் நிரந்தரமானது. ‘வேட்டையாடு விளையாடு’, ‘கண்டநாள் முதல்’ போன்ற படங்களில் முழுப்படத்துக்கும் நானே பாடல்கள் எழுதினேன். இந்த வரிசையில் ‘வாரணம் ஆயிரம்’ ஒரு பெரிய வெற்றி.

  • பாகீரதி சேஷய்யன்

நன்றி; தென்றல்