
எனக்கு அறிவு வெளிச்சத்தை பாய்ச்சிய மூத்த ஆசான் அமரர் திரு.பெ.சு.மணி அவர்கள் பிறந்த நாள் இன்று. (02.11.1933)
கல்லூரி பட்டமோ ஆய்வேடு எழுதும் பயிற்சியே பெறாத இவரது பல நூல்கள் இளம் ஆய்வாளர்களின் மெதடாலாஜி வழிமுறைக்கு துல்லியமாக பயன்படுகின்றன.
பல்கலைக்கழக படிப்பு படித்து பட்டம் பெறுபவர்களுக்கே அறிவு இருக்கும் என்று நம்பும் உலகில் பத்தாம் வகுப்பு தாண்டாத இவருடைய ஆய்வுப்பொருண்மைகள் பல முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு வழிவகுத்த பன்முக ஆய்வாளர் இவர்.
முறைசாரா ஆய்வாளாராக பயணித்தாலும் பெரும் பேராசிரியர்கள் செய்யாத வேலைகளை ஆர்ப்பாட்டாமில்லாமல் செய்து முடித்தவர்.
சமய சமரச சன்மார்க்க நெறியை போற்றிய வள்ளலார் திருவுருவப்படத்தினை தனது பணி செய்யும் இருக்கைக்கு முன்பாக சுவற்றில் மாட்டி வணங்கி வரும் அக்ரஹாரத்து அதிசய பிறவி இவர்.
பெரியவர் வ.உ.சி.யின் பரிசுத்தமான தியாகத்தை இந்த தமிழ்நாடு உள்ளபடி உணரவில்லையே என்று ஏங்கிய பெருமகனார் இவர்.
நீதிக்கட்சியின் திராவிடன் இதழ்களையும், கார்ல் மார்க்ஸ் இலக்கிய இதயம் மூலம் தமிழ் உலகில் மறக்கப்பட்ட அயோத்திதாசரையும் ஆய்வுலகுக்கு மீட்டெடுத்து கொடுத்தவர்.
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையின் போது தூங்கமுடியாமல் தவித்த பல இரவுகளை என்னிடம் பகிர்ந்து கொண்டவர்.
வெ.சாமிநாத சர்மாவின் ஆசியுடன் ஆய்வு வாரிசாக அறியப்பட்டாலும் ம.பொ.சி.யை மானசீகமான குருவாக ஏற்றுக் கொண்டவர்.
தனது ஆய்வுகள் மூலம் தனது வயதுக்கு ஏற்ற 87 ம் வயதில் அமரரான போது 80 நூல்களினை வயதுக்கொன்றாக ஆய்வுக்குரிய நூல்களினை மட்டுமே படைத்தவர்.
பாரதியியல் ஆய்வு நூல்கள் 18, இராமகிருஷ்ண இயக்க ஆய்வு நூல்கள் 11, வ.வே.சு.அய்யர் நூல்கள் 7, ம.பொ.சி.நூல்கள் 5, வாழ்க்கை வரலாற்று நூல்கள் 10, இலக்கிய ஆய்வு நூல்கள் 6, பிற நூல்கள் 20 என விரிகிறது இவரது ஆய்வுப் புலங்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதிகள், அரசியல் ஆளுமைகள், சுதந்திர போராட்ட வீரர்கள், சமயச் சான்றோர்கள் ஆகியன குறித்த நடமாடும் பல்கலைகழக தகவல் ஆய்வுக் கலைக் களஞ்சியம் இவர்.
ஒன்றும் அறியாத களிமண்ணாக இருந்த எளியோனாகிய என்னை ஆய்வுலகில் பரிமளிக்க தேவையான அறிவு வெளிச்சத்தை காட்டி என்னை நெறிப்படுத்திய ஆசான் இவர்.
இன்று 89 ம் அகவை. உங்களை நெஞ்சில் இருத்தி தங்களது பிறந்த நாளில் உங்களைப் போற்றி வணங்குகிறேன்.
