ஒரு நூல் வெளியீட்டு விழாவில் ஜெயமோகன்/சுரேஷ் கண்ணன்

ஒரு நூல் வெளியீட்டு விழாவில் ஜெயமோகன் தூங்குவது போல் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘ஹெஹெ..’ என்று சிரிப்பொலிகள் சில நாட்களுக்கு முன்பு எழுந்ததை உள்ளூற ஒரு புன்னகையுடன் கவனித்துக் கொண்டேன்.
பேச்சாளரை மனம் குவித்து கவனிப்பதற்கு கூட சிலர் கண்களை மூடிக் கொள்வதுண்டு. அப்படியே சற்று கண் அசந்து விட்டால்தான் என்ன? புகைப்படம் உறைந்த தருணம் கூட அப்படி அமைந்திருக்கலாம். இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.
*
ஆனால் சில சமூகவலைத்தள மக்களுக்கு அதுவல்ல பிரச்சினை. ஜெயமோகன் என்றதுமே நெருப்பை மிதித்தது போல் பதற வேண்டும். ‘ஹெஹெ’ என்று எள்ளி நகையாட வேண்டும். வசையை, வன்மத்தைக் கக்கி விட வேண்டும். பல சமயங்களில் இத்தனை வசையை ஜெயமோகன் எப்படி ஜீரணித்துக் கொள்கிறார் என்று கூட எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
இதை வாசித்துக் கொண்டிருக்கும் போதே ‘இவன் ஜெயமோகன் ஆள்….இப்படித்தான் பேசுவான்’ என்று சிலருக்கு மனக்குரல் ஒலித்துக் கொண்டிருக்கலாம். நான் சிறந்த எழுத்தாளர்கள் அனைவருக்குமே வாசகன். சிறந்த எழுத்து எதையுமே திறந்த மனநிலையுடன் வாசிக்க தயாராக இருப்பவன். பல தரப்புகளையும் கவனிக்க விரும்புவன். எனவே கற்பை நிரூபித்துக் கொண்டிருப்பது என் வேலையல்ல.
*
நான் சொல்ல வருவது இதுதான். அது ஜெயமோகனோ, மைக் மோகனோ ஒருவரின் அரசியலோடு, பார்வையோடு, கொள்கைகளோடு, கருத்துக்களோடு முற்றிலும் மாறுபடுவதற்கு இன்னொருவருக்கு சகல உரிமையும் இருக்கிறது. சம்பந்தப்பட்டவர் எழுதுவதை முற்றிலுமாக மறுக்கலாம். அதை எழுதலாம் அல்லது சில புள்ளிகளோடு உடன்படலாம். விவாதிக்கலாம்.
மாறாக சம்பந்தப்பட்டவரின் பெயரைப் பார்த்த அடுத்த கணமே வெறுப்பை, வசையை, மலினமான சிரிப்பை உதிர்ப்பதற்கு தயாராக இருக்கக்கூடாது. இதுவொரு மோசமான, முதிர்ச்சியற்ற கலாசாரம். மறுபடியும் சொல்கிறேன். ஜெயமோகன் என்றல்ல, எவருக்குமே இது பொருந்தும்.
சில்லுண்டிகளை விடுங்க்ள. சில மூத்த எழுத்தாளர்கள் கூட இத்தகைய கலாசாரத்தைப் பின்பற்றுவதால், சமூகவலைத்தளத்தில் வரும் இளைய வாசகர்களுக்கு ‘ஓ.. இந்தாளைத் திட்டினால் கவனம் கூடுமோ’ என்று நினைத்து ‘ஜெயமோகனா.. நான் பார்த்து வளர்ந்த பய’ என்கிற ரேஞ்சிற்கு ஜோதியில் ஐக்கியமாகி விடுகிறார்கள். அது கூட பரவாயில்லை. அங்கிருந்து நகர்ந்து வாசிப்பிற்குள் செல்கிறார்களா என்றால் கூட. அந்த வம்பிலேயே தேங்கி அதில் சுகம் காண்கிறார்கள்.
*
சம்பந்தப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து வழக்கம் போல் யாரோ ஒரு ‘வாசகர்’ ஜெயமோகனின் தளத்தில் கேள்வி கேட்டதற்கு ஒரு நீண்ட பதிலை, இன்றைய பதிவில் அவர் எழுதியிருந்தார்.
‘ஒரு சாதாரண கிண்டலுக்கா இத்தனை பெரிய ஆணி?” என்று நினைத்துதான் வாசிக்க ஆரம்பித்தேன்.
ஆனால் அந்தப் பதிவினுள் பல உபயோகமான விஷயங்கள் இருந்தன. வெற்று காழ்ப்புகள் எவ்வாறு நம்மை குறுகிய சிந்தனைகளில் தள்ளி முடக்கிப் போடுகின்றன என்பதை விரிவாக எழுதியிருந்தார் ஜெ.
*
இதில் குறிப்பாக ஒரு விஷயம் என்னை அதிகமாக கவர்ந்தது. அது தூக்கம் தொடர்பானது. எனக்கு நாள்பூராவும் தூக்கக் கலக்கமும் அசதியுமாகவுமே இருக்கும். எப்போது வேண்டுமானாலும் உறங்குவதற்கு தயாராக இருப்பேன். சற்று தூங்கி எழுந்தால் சார்ஜ் போட்ட பாட்டரி போல சிறிது நேரத்திற்குத்தான் தாங்குமே ஒழிய, மறுபடியும் அசதி கவ்விக் கொள்ளும்.
எனக்கு சுவாச ஒவ்வாமை உள்ளது. எனவே மூச்சுப் பிரச்சினையும். இரவில் ஏழு மணி நேரங்களுக்கும் மேலாகத் தூங்கியும் ஏன் அடுத்த கணமே அசதியாக இருக்கிறது என்பதை பல முறை யோசி்த்திருக்கிறேன். அதற்கும் என் சுவாசப் பிரச்சினைக்கும் தொடர்பிருக்கலாம் என்று ஐயப்பட்டிருக்கிறேன்.
அதாவது ஆழமான தூக்கம் இல்லாததுதான் காரணம். மேலும் தூங்கும் போது என் வாய் திறந்திருக்கும் என்று யூகிக்கிறேன். ஏனெனில் சட்டென்று விழிப்பு வரும் போது வாய் காய்ந்திருக்கும். உடனே வாயில் நீர் கொப்பளித்து சற்று தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும்.
*
என்னுடைய இந்தத் தனிப்பட்ட பிரச்சினை தொடர்பாகவும் இந்தப் பதிவில் சில விஷயங்களைக் கண்டேன். எனக்கு உபயோகமாக இருந்தது. எனவே இங்கு பகிர்கிறேன். முன்தீர்மான வெறுப்புகளைக் கழற்றி விட்டு வாசித்துப் பாருங்கள்.
2 Comments