இலக்கிய இன்பம் 62/கோவை எழிலன்

வயிரப்படையான்

கம்பன் தன் இராமகாதையில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இராவணனின் பெருமைகளைப் பாடத் தவறுவதில்லை. வாய்ப்பு கிடைக்காத இந்த இடத்திலும் கூட அவன் இராவணனின் சிறப்பைப் பாடுவது இப்பாடலின் சிறப்பு.

இராமன் கானகத்தில் சரபங்க முனிவரைக் காண வருகிறான். அவன் வருவதற்கு முன் அம்முனிவரைக் காண இந்திரன் வருகிறான். அங்கு இந்திரனின் சிறப்பை விளக்கும் கம்பன் இராவணன் மேல் செலுத்தப் பட்டும் பழுதடையாத வச்சிரப் படையை உடையவன் என இந்திரனின் வச்சிராயுதத்தை வர்ணிக்கிறான்.

இந்திரனின் வச்சிராயுதத்தால் இராவணனுக்கு ஒன்றும் ஆக வில்லை என்று கூறாமல் இராவணனால் வச்சிரப் படைக்கு ஒன்றும் ஆகவில்லை என்றும் அது நெல்லின் முனை அளவிற்குக் கூட சேதமடையாமலும் ஒளி குன்றாமலும் இருந்தது என்று கூறுவது அழகான நயமாக இருக்கிறது

”வெல்வான் நசையால், விசையால், விடு நாள்,
எல்வான் சுடர் மாலை இராவணன்மேல்,
நெல்வாலும் அறாத, நிறம் பிறழா,
வல் வாய் மடியா, வயிரப் படையான்