கவிதை பாடிய கழுதை /அனங்கன்

நான் ஒரு கழுதை ஆனதுபோல்
கனவு கண்டேன்…
கனவெல்லாம் இல்லை உண்மைதான்
என்ற உங்கள் அகக்குரல்
நையாண்டி புரிகிறது.

போகட்டும் விடுங்கள்….
பிரச்சனை என்றவென்றால்
ஒரு கவிஞர் ரொம்பநாளாய்
சேர்த்துவைத்த கவிதை
நூலையெல்லாம் நான் தின்றுவிடுகிறேன்….
பிறகுகென்ன கவிதையாய்க் கத்துகிறேன்.

அவரது கவிதையை எனது குரலில்
கேட்கப்பிடிக்காத கவிஞர்
தடிகொண்டுவிரட்ட…
எட்டிஉதைக்கிறேன்…

“ஐய்யய்யோ” என்ற குரல் கேட்க….
திடுக்கிட்டு எழுந்தால் மனைவி
கட்டிலுக்கு கீழே கிடக்கிறாள்…

கனவென்று எவ்வளவு கெஞ்சியும்
அவள் நம்பவில்லை…
இடுப்புவலியென்று படுத்துவிட்டாள்
பிறகென்ன சமையலெல்லாம் நான்தான்.