விசுவாசம்/ அதிரன்

மூன்று மாதம் ஆயிற்று
அம்மாவின் மறைவிலிருந்து
மெல் மெல்ல மீண்டு வருகிறான்
குமார்
இன்று காலையில்
பூர்வீக வீட்டில் குடியிருப்பவரிடம் இருந்து
ஒரு தொலைபேசி அழைப்பு
சம்பரதாய நல விசாரிப்புகளை தொடர்ந்து
வேறு என்ன விசேஷம்?? என்ற கேள்விக்கு
“ஒண்ணுமில்லிங்க தினமும் சரியா மத்தியானம் 12 மணிக்கு அடுக்களை ஜன்னல்ல வந்து ஒரு காக்கா கத்திகிட்டேயிருக்கு
சோறு வைச்சாலும் சாப்பிடாமால் வீட்டுக்குள் உத்து உத்து பார்கிறது
அதுதான் ஏன்னு தெரியல
மற்றபடி ஒரு பிரச்சனையில்லை
என்று …… அவர் சொல்லி கொண்டிருக்கையில்
மீண்டும் அம்மாவின் நினைவுகள்
துளிர் விட
தொண்டையில் ஏதோ விக்கியது
பதில் எதுவும் சொல்ல முடியாமல்
போனை துண்டித்தபோது
“சாப்பிட வரிங்களா??”
என்று அவன் மனைவி அழைத்துக் கொண்டிருந்தாள் .