ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அதிகம் பேர் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்…/அழகியசிங்கர்

பொதுவாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகப் பேர்கள் வர மாட்டார்கள். அதுவும் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். எந்த இடத்திலும் நெரிசல். போக்குவரத்தைத் தாண்டி வரவேண்டும். அதையும் மீறி வருபவர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டுமென்றால் உங்கள் கூட்டம் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பொதுவாக கோயம்புத்தூர் போன்ற இடத்தில் எளிதில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு 50 பேர்கள் கூடி விடுவார்கள் என்று என் நண்பர் ஒருவர் கூறுவார். அது உண்மையா என்பது தெரியாது.

ஆனால் சென்னையில் 50 பேர்களைக் கண்டுபிடிப்பது ரொம்ப சிரமம். அப்படியே 50 பேர்கள் வந்தால் அவர்கள் கூட்டம் முடியும்வரை தங்க வைப்பது இன்னும் சிரமம். நான் கிட்டத்தட்ட 200 கூட்டங்கள் நடத்தி அனுபவப்பட்டவன். இலக்கியக் கூட்டங்கள் நடத்துபவர்களுக்கு நான் சில அறிவுரைகளைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.

  1. ஒரு கூட்டத்தை நடத்த உங்கள் இலக்கு 50 பேர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். 50 பேர்கள் வருவதற்கு நீங்கள் பேசுபவர்களை 45 பேர்களாகவும், பார்வையாளர்களை 5 பேர்களாகவும் மாற்ற வேண்டும். வேற வழி இல்லாமல் 45 பேர்கள் பேச வந்து விடுவார்கள். அவர்கள் ஒவ்வொரும் பேசி முடிக்கும் வரை எல்லோரும் இருப்பார்கள். உங்களுக்கு வெற்றி.
  2. நல்ல உணவகத்தில் இருந்து டிபன் அல்லது சாப்பாடு தருவிப்பதாக இருந்தால், அதற்காகவாவது போனல்போகிறதென்று கூட்டத்திற்கு வந்து விடுவார்கள். அப்படி 50 பேர்கள் வருகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் டிபன் அல்லது சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் போய்விடுவார்கள். ஜாக்கிரதை. நீங்கள் அந்த டிபனை கூட்டம் முடிந்தபிறகு தருவதற்கு வைத்துக்கொள்ள வேண்டும்.
  3. ஆனால் பெரும்பாலோர் கூட்டத்திற்கு வருபவர்கள் கூட்டத்தில் பாதியிலேயே எழுந்து போய்விடுவார்கள். அவர்களை எழுந்து போகாமல் இருப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. கூட்டம் நடக்கும் ஹால் கதவை சாரத்தி தாப்பாள் போட்டு விடுவது. அப்படிச் செய்தால் கூட்டம் முடியும்வரை எல்லோரும் தப்பிக்க முடியாது.
  4. பொதுவாக நீங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்காக கூட்டம் நடத்துவதாக வைத்துக்கொள்ளுங்கள். ஒரே சமயத்தில் 10 பேர்களுக்கு மேல் படைப்பாளிகளின் புத்தகங்களைப் பற்றி பேசுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களைக் கூப்பிட்டு, ஒவ்வொரும் 5 பேர்களாவது கூப்பிட வேண்டும் என்று கட்டாயம் சொல்லி விடுங்கள். கூட்டம் ஹால் முழுவதும் நிரம்பி வழியும்.
  5. கூட்டம் நடத்துபவர்கள் ஒருவரே இருந்தால் ஆபத்து. ஒரு ஐந்தாறு பேர்கள் இருந்தால் நல்லது. இந்த ஐந்தாறு பேர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் இருப்பார்கள். அவர்களை கட்டாயம் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுங்கள். அவர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருக்க வேண்டுமென்றால் கட்டாயம் வந்து விடுவார்கள். ஆனால் வேற வழி இல்லாமல் அவர்கள் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதையும் பார்க்கலாம்.
  6. கூட்டத்தில் அமைதியாய் பேசுபவர்களைக் கவனிக்க, பேசுபவர்களும் கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். பேசுபவர்கள் ஒரு கட்டுரை மாதிரி எழுதி வாசிக்கக் கூடாது. அப்படியே வாசிப்பதாக இருந்தால், பார்வையாளர்களைப் பார்த்து பார்த்து மெதுவாக வாசிக்க வேண்டும். குறிப்பு எடுத்துக்கொண்டு பேசுவது அவசியம். பார்வையாளர்கள் நம்மை விட் அறிவாளிகள் என்று பேசுபவர்கள் நினைத்துக்கொள்ள வேண்டும். நாம் பேசுகிறோம் என்று மமதாய் இருக்கக் கூடாது. பேசுவதில் கொஞ்சமாவது நகைச்சுவை உணர்வு வேண்டும். இலக்கியக் கூட்டம் என்பதால் தீவிரமாய் முகத்தை வைத்துக்கொள்ளக் கூடாது.
  7. கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்கு எல்லோரும் பேசுகிற எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி பேச வேண்டும்.

இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். உங்களுக்கு எதாவது ஐடியா இருந்தால் இத்துடன் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.

2 Comments on “ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அதிகம் பேர் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்…/அழகியசிங்கர்”

  1. கூட்டம் தொடர்ந்து இடைவிடாமல் நடத்தப்பட வேண்டும்.
    அதிகம் இரண்டு மணிநேரத்திற்கு மேல் நடத்தக் கூடாது.
    நூல் வெளியீட்டு விழா எனில் வெளியிடுபவரே நூல் ஆய்வுரை.
    நூல் பெறுபவர் பேசாதவராக இருத்தல் நலம். தலைமை என்பதே வேண்டாம்.
    கூத்தப்பாக்கம் இலக்கியச்சோலைக்கு 25 பேர் நிச்சயம்.
    40 வரைகூட வருவர்.
    கூட்டத்தலைப்புகள் ஒவ்வொரு கூட்டத்துக்கும் வேறுபாடு இருத்தல் நலம்
    வளவனூரில் திருக்குறட்கழகம் சார்பாக 526 கூட்டங்களும், இங்கு கடலூரில் 202-உம் நடத்தி உள்ளேன். குறித்த காலத்தில் தொடங்குவது முக்கியம்.

  2. 2017ல் கோவை புத்தகக் கண்காட்சியில் ஒரு விவாதத்தில் இடம் பெற்று இருந்தேன். நவீன இலக்கியம் முக்கியமா சங்க இலக்கியம் முக்கியமா என்கிற மாதிரி தலைப்பு.

    வழக்கறிஞர் திரு இராமலிங்கம் தலைமை. நான், ஜடாயு மற்றும் பவா.செல்லத்துரை மூவரும் எதிர் எதிரான தலைப்புகளில் பேசினோம். வந்திருந்தவர்களில் நிறையப் பேர் எங்கள் வங்கியைச் சார்ந்தவர்கள்.

    அப்போது நான் கோவையின் மண்டல மேலாளராக இருந்தேன்.

    அதில் நிறையப் பேர் என் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்.

    அதில் முக்கியமாக என்னுடைய துணை மண்டல மேலாளர். அவர் தனது மனைவி மகன்கள் சகிதம் வந்து முதல் வரிசையில் அமர்ந்து இருந்தார்.

    அவரே இத்தனை முஸ்தீபுகளுடன் வந்ததால், நிறையப் பேர் வருகிற நிலை ஏற்பட்டு விட்டது.

    என் துணை மண்டல மேலாளர் ஆந்திர மாநிலத்தை சார்ந்தவர்.‌ஒரு அட்சரம் தமிழ் தெரியாது. எங்களுக்காக வந்தவர்களில் முக்கால் வாசிப்பேருக்கு தமிழ் தெரியாது.

    இதுதான் அதிகார துஷ்பிரயோகம் என்று என் நண்பன் வர்ணித்தான்.

    கூட்டம் கூட்டுவதற்கு முதிர்ந்த அரசியல் வாதிகள் பலருக்கே இதுதான் நிலையென்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?

Comments are closed.