நாடக மேடையில் “ஜுகல்பந்தி”!/ஜெ.பாஸ்கரன்

05-11-2022 மாலை, நாரதகான சபாவில் ஜுகல்பந்தி அரங்கேறியது. JB க்ரியேஷன்ஸ் தயாரிப்பில், ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ் எஸ் எல் நாணுவின் கதை, வசனம், இயக்கத்தில் காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் கலக்கல் காமெடி கலாட்டாவுடன் 90 நிமிட, இடைவிடாத நகைச்சுவை விருந்து! ஆபாசமில்லாத, இயல்பான வசனங்கள், அலட்டிக்கொள்ளாத ஆனால் தேவையான அளவு உடல் மொழியுடன்கூடிய நடிப்பு, மத்திய தர குடும்பங்களின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், அசட்டுத்தனங்கள், சில மூட நம்பிக்கைகள் எல்லாம் உருவாக்குகின்ற காமெடி சிச்சுவேஷன்களைக் கோர்த்து ஒரு நகைச்சுவை ஜுகல்பந்தியை உருவாக்கியுள்ளார் நாணு. வாழ்த்துகள்!


தெரிந்தோ தெரியாமலோ இப்போது எல்லா படைப்பாளிகளிடமும் (கதைகள், நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் அனைத்திலும்!) மாட்டிக்கொண்டு முழிப்பது ‘டிமென்ஷியா’ என்னும் மறதி வியாதி. ‘அல்ஷைமர்ஸ்’ பெயரும் அல்லோலகல்லோலப் படுகிறது! நல்ல வேளை நாணு டிமென்ஷியாவை காமெடிக்காக ‘கொஞ்சூண்டு’ தொட்டுக்கொண்டிருக்கிறார். முழு நாடகமும் என்றால் காத்தாடிக்கு வேலையே இருந்திருக்காது – கை வைத்த பனியனுடன், மேடையின் மேல் தொங்கும் விளக்கைப் பார்த்தவாறு அமர்ந்திருக்க வேண்டியதுதான்!
ஒரு சின்ன சஸ்பென்சுடன், இப்போது ‘வாடகைத் தாய்’ படும் அவஸ்தையைத் தவிர்த்து, ‘தத்து’ எடுத்துக்கொள்வதை மையப்படுத்தி ஒரு ஆரோக்கியமான நகைச்சுவை நாடகத்தைத் தந்துள்ள நாணுவுக்கு பாராட்டுகள்.


பேரனோ பெயர்த்தியோ பெற்றுத் தரவேண்டும் எனப் பிடிவாதம் பிடிக்கும் தாய் (கீதா நாராயண் எப்போதும்போல் வசனம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறப்பு), ‘தத்து’ எடுத்துக்கொள்வோம், பெற்றுக்கொள்ள மாட்டோம் என்ற முடிவுடன் இருக்கும் பிள்ளையும் (சாய்பிரசாத்), மருமகளும், வழக்கமான அசட்டுத்தனங்களுடன், சங்கீதப் பிரியராக எல்லாவற்றையும் குழப்பும் ஒரு சம்பந்தி (ஶ்ரீநிவாஸ் அமர்க்களம்!), செட் அப் செய்யப்பட்ட ஜோஸியர்(கணபதி சங்கர்), மருமகளின் ‘டென்ஷன்’ பாஸ் (வெங்கி – வெகு இயல்பு), மனைவி குழந்தைகளுடன் சிங்கப்பூர் போக, அவருடைய அப்பா(காத்தாடி) – டிமென்ஷியாவுடன் – இந்த வீட்டில் தங்க, அவரைப் பற்றி எல்லாம் தெரிந்த அவருடைய நண்பர் (நாணு – சபாஷ்!) அவ்வப்போது வந்துபோக – போதுமா ஜுகல்பந்திக்கான கலைஞர்கள்? வீட்டில் தங்க வந்தவருக்கு ஒரு ரகசியம் தெரிய, அதை வைத்துக்கொண்டு எல்லோரும் அவருக்கவர் தங்கள் சுருதியில் வாசிக்கும் காமெடி மெலடிதான் ‘ஜுகல்பந்தி’!
ஒரு குடும்பத்தில் எதுவும் வெளிப்படையாகப் பேசித் தீர்க்கப்பட வேண்டும். மூடி மறைத்து வைக்கப்படும் விஷயங்கள், ஒரு சமயத்தில் குடும்ப மகிழ்ச்சிக்கே வினையாய் முடியும் – சுரபேதம் இருந்தாலும், எல்லோரும் கலந்து பேசி – ஜுகல்பந்தி போல – ஒரு இனிய இசையாய் வாழ்ந்திட வேண்டும் என்பதை நகைச்சுவையாகச் சொல்கிறது இந்த நாடகம்.
மேடையையும், நம் மனங்களையும் கலகலக்க வைக்கிறார் காத்தாடி. இந்த வயதிலும், வசனங்களைத் தடையின்றி, டைமிங்குடன், தேவைக்கேற்ற மாடுலேஷனுடன் அவர் பேசுவது வியப்பளிக்கிறது. அவரது நடிப்பில்,அரங்கம் அதிர்கிறது! இன்றைய மேடை நாடகத்தின் பிதாமகர், நகைச்சுவை நாடகத்தின் ‘சூப்பர் ஸ்டார்’ என்றெல்லாம் சொல்லத் தோன்றுகின்றது. அந்த வீட்டின் மகனும், மருமகளும் ஏதோ ஒரு ரகசியம் பற்றிப் பேச, தூரத்திலிருக்கும் காத்தாடி கொடுக்கும் அந்த ‘ரீயாக்‌ஷன்’ – அவரது டிமென்ஷியா பற்றிய ரகசியத்தைச் சொல்லுகிறது! சபாஷ்! வைணவ சம்பிரதாயப்படி, ‘இன்னும் ஒரு நூற்றாண்டிரும்!’.
பாபு வின் லைட்டிங், சைதை குமாரின் செட், உறுத்தாத இசை என எல்லாம் கனகச்சிதம்.
ஒரு நல்ல நாடகத்தை மேடையேற்றியதற்காக, JB கிரியேஷன்ஸ் ஜெபியும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
90 நிமிடங்கள் மனம் விட்டுச் சிரித்து மகிழலாம்!