கேட்டிலும் துணிந்து நில்

        

எஸ்ஸார்சி

மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில்தான் அந்தக்கல்யாண மண்டபமநேற்றைக்குமாலையில் ஓகோவென்று  ஜானுவாசம். திருவெண்காட்டார் நாதசுவரம்.  இன்னும் என்ன என்னவோ  அமர்க்களம். வாண வேடிக்கை. புஸ்வாணம்,  பூமாலை அலங்காரம். சாரட் வண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம். பாண்டு வாத்யம்  இவற்றோடு. இலக்கண சுத்தமாய் ஜானுவாச டிபன், இரவு நிச்சயதார்த்தம் முடிந்து கச்சிதமான டின்னர்.  கும்பகோணம் நகரத்து ஆனையடி சின்ன சாட்டைதான் எல்லா சமையல் ஏற்பாடும்..

இதுவரைக்கும் சரியே. .காலை ஏழரை மணிக்கு முகூர்த்தம்.  அதிகாலை ஐந்து மணிக்குச்சரியாக மங்கள ஸ்நானம். வாத்தியார் இரவு சட்டமாய்ச் சொல்லிபிட்டுத்தான் போனார்.  மாப்பிள்ளை வீட்டார் ஜாகை கொஞ்சம் தள்ளித்தான் இருந்தது. மங்கள ஸ்நானத்திற்கு மங்கள வாத்தியத்தோடு அழைக்க  அட்சதை சந்தனம் குங்குமத்தோடு மங்களகரமாய் பெண் வீட்டார் வரவேண்டும். ஏனோ வரவில்லை. ஆமாம் வரவில்லைதான்.  எவ்வளவு நேரமாய் காத்திருப்பது..

‘என்னப்பா இதுல எதுவோ பிரச்சனை இருக்கு. நாம  அது தெரியாம இங்க  முழிச்சிட்டு நிக்குறம்’

‘ நேற்று ஜானுவாசம் நல்லா முடிஞ்சி, நிச்சயதார்த்தம் ஆனதே. இன்னைக்கு காலையில என்ன ஆச்சி’

மாப்பிள்ளையும் அவன் தந்தையும் பேசிக்கொண்டார்கள். மனம் கனக்க  கல்யாண மண்டபத்தை நோக்கி நடந்தார்கள்.. மண்டப வாசல் வெறிச்சென்று கிடந்தது. நாதசுரக்காரர்கள் கைகளைக்கட்டிக்கொண்டு  அங்கும்  இங்கும் நின்றுகொண்டிருந்தார்கள். சமையல் சின்ன சாட்டை மண்டபத்திண்ணையில் இடிந்துபோய் அமர்ந்திருந்தார்.

‘ ஏன் என்ன ஆச்சு’

தந்தையும் மகனும் மண்டபத்துக்குள்ளாக நுழைந்தனர்.

பெண்ணின் தந்தை’ சுவாமி என்ன மன்னிச்சுடுங்கோ, என்று அவன்  தந்தையின் கால்களில் விழுந்து கதறிக்கொண்டிருந்தார்.

‘ வேண்டாம் எழுந்திரிங்கோ’

‘ ‘எம் பெண்ணையும் பொண்டாட்டியையும் வெடி காத்தலா மூணு மணிலேந்து காணும்  அவா எங்கேயோ போயிட்டா’’

‘யாரு யாரு’

‘கல்யாணப்பொண்ணு அவ அம்மா அதான் எங்காத்துக்காரி ரெண்டு பேரும் எங்க போனான்னு தெரியல‘ நா நாயாய் அலஞ்சி பாத்துட்டேன். எங்கயும் காணும்’  அவரின் கண்கள் குளமாகியிருந்தன

அவனுக்குச் சட்டென்று விஷயம் விளங்க ஆரம்பித்தது. கல்யாண பெண்ணும் அவள் தாயும் ஜூட். எங்கோ தலை மறைவு ஆகிவிட்டார்கள். இந்த மனிதனுக்கு அதான் பெண்ணின் தந்தைக்குத்தெரிந்து நடந்ததோ தெரியாமல் நடந்ததோ யார் அறிவார்..

திருவெண்காட்டு தவில்காரன் ஒரு சேதி சொன்னான்’: ’ராத்திரி நடுச் சாமம்ருக்கும் ரெண்டு மூணு பேர் பொம்பளைங்க ஒரு ஜட்காவுல ஏறினாங்க. ரயில்வே ஸ்டேஷன் போறதா  குசு குசுன்னு பேசிகிட்டாங்க. அதுங்க யாரு எவுரு யார் கண்டா.  நடு ராத்திமெட்ராஸ் போற போட் மெயில் வண்டில போயி இருக்கலாம் எங்க போனாங் களோ’

பெண்ணின் தந்தை தலையில் தலையில் அடித்துக்கொண்டார். பெண் வீட்டு உறவுக்காரர்கள் பாதிக்குமேல் மண்டபத்தைக்காலி செய்து போய்க்கொண்டு இருந்தார்கள்.

‘இப்படி கழுத்த அறுக்கலாமா. இதவிட எங்கள நீங்க கொன்னு போட்டு இருக்கலாம்.  இது அவமானம் . எவ்வளவு பெரிய அவமானம்.  ஆத்துல குளத்துல எறங்கி விழுந்து செத்து போயிடலாம்’ என்றார் அவனின் தந்தை.

அதற்குள்ளாக என்ன சேதி யார் சொன்னார்களோ  மாப்பிள்ளை வீட்டார் எல்லோரும் மண்டபத்துக்கு வந்து காச் மூச் என்று கத்திக்கொண்டு இருந்தார்கள்.

ஒருவர் போலீசுக்குப்போகலாம் என்றார். இன்னொருவர் அது சரியில்லை என்றார். தலைக்குத் தலை ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர்.

அவன் தாய் மயக்கம் வந்து மூலையில் சாய்ந்து படுத்துக்கொண்டிருந்தார்.

அவன் ஒரு நிமிடம் யோசித்தான். இப்போது என்ன செய்வது. இதிலிருந்து எப்படி மீள்வது  இங்குள்ள எல்லோரையும் எப்படி மீட்பது என்று மண்டையைக்குழப்பிக்கொண்டான்…

‘ ‘ இங்க டிபன் ரெடியா இருக்கு.  மதியம் சமையலுக்கு ஆக வேண்டியது தயார் ஆகி கெடக்கு. மண்டபத்தில் மேளம் நாதசுரம் புரோகிதர் எல்லோரும் ரெடியா இருக்கா. இந்தக் கல்யாண மண்டபத்துல எங்க பந்துக்கள் மொத்தமும்  இருக்கா. ஆக எங்கப்பா அம்மாவுக்கு  இந்த மண்டபத்தில அறுபது அதான் மணி விழாவ  நாம தடபுடலா பண்றம். மாட்டுப்பெண் ஆத்துக்கு வந்து நடக்கலாம்தான் இருந்தது.  ஆனா பகவான்  விருப்பம் வேறயா இருக்கு’. .

அவன் எல்லோருக்கும் பவ்யமாய் இப்படி அறிவித்துக்கொண்டு இருந்தான். ’இப்ப  இதே மண்டபத்தில் அறுபது  கல்யாணம் எங்க அப்பா அம்மாவுக்கு எல்லோரும் கலந்துகொண்டு சிறப்பிக்கணும்’ அவரவர்கள்  இனி அந்த நிகழ்ச்சிக்குத் தயார் ஆகணும்’’

‘கல்யாணத்துக்குக் கொண்டு வந்த மொத்த ரொக்கத்தையும்  கல்யாண மண்டபம், சமையல், நாதசுரம், வேலைக்காரர்கள், புரோகிதர்கள் என அவனே பங்கீடு செய்து முடித்தான்.

பெண்ணின் தந்தையிடம் போனான்’ “சுவாமி  நமஸ்காரம் இங்க எங்க அப்பா அம்மாக்கு சஷ்டி அப்த பூர்த்தி  நடடக்கறது. இனிமே மண்டபத்துல ஒத்த  நயா பைசா   நீங்கச்  செலவு பண்ணக்கூடாது. எல்லா செலவும்  நானே பாத்துகறேன். யார் யாருக்கு எவ்வளவுபாக்கியோஅது என்னோடது. வாங்கோ வந்து எங்காத்து ஃபங்கஷன நடத்திக் கொடுங்க” சொல்லி முடித்தான்.

மாப்பிள்ளை வீட்டுச்  சொந்த பந்தங்களுக்கு ரொம்ப திருப்தி. கல்யாணம் நின்னுபோச்சி. அந்தப் பொண்ணுக்கு விருப்பமில்லே.  அப்புறம் அந்த பிடிக்காத கல்யாணம் நடக்கிறதுதான் என்னத்துக்கு. ஆனா இதை  பெற்றோரின் மணிவிழாவா மாத்தின  திட்டத்தை, பொண்ண பெத்த தந்தைக்கு இந்த இக்கட்டான  நேரத்துல  ஒத்தாசையா இருந்த அவன் நல்ல குணத்தை எல்லோரும்  மனதாரப்பாராட்டினார்கள்.

பெண்ணின் தந்தை, ‘’நீ என் மகன்’ என்று அவனைக்கட்டி அணைத்துக்கொண்டார்

மணிவிழா முடிந்தது.

ஆசிபெற்றவர்களும் ஆசிர்வதித்தவர்களுமான மண்டபம்  ஏக அமர்க்களமாக இருந்தது. திருவெண்காட்டார் நாதசுரமும் தவிலும் மண்டபம் அதிரக்கேட்டுக்கொண்டு இருந்தது.

சின்ன சாட்டையின்  முகூர்த்த சாப்பாடு. திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தஉற்றாரும்உறவினரும் மகிழ்ச்சியாகத் தாம்பூலம் பெற்றுக்கலைந்தனர். திருக்கடையூர்  என்னும் திருத்தலம் மயிலாடுதுறைக்கு மிக அருகில் இருப்பதை  அவன் அறிவான்.  அது மணிவிழாத்தலம் என்கிற விஷயமும் கூடவே அறிதிருந்தான்.

அன்று  மாலையே அவன்  தனது அம்மாவையும் அப்பாவையும் முகூர்த்த மாலையோடு திருக்கடையூர்  அபிராமி  உடனுறை அமிர்தகடப் பெருமானைத் தரிசிக்க அழைத்துப்போனான்..

One Comment on “கேட்டிலும் துணிந்து நில்”

Comments are closed.