போர்வை…/முருகு

அப்போதெல்லாம் போர்வை
அம்மாவின் சேலை தான்!

இழுத்துப் போர்த்தி அம்மாவை
இறுக்கி அணைத்துக் கொள்ள…

கருவறைக்குள் இருந்தது போல்
கதகதப்பு மீண்டும் கூடும்!

தனித் தலையணை போர்வை தருகையில் தனிக் கர்வம் வரும்!

அடைமழை, கோடை, குளிர்
அதற்கேற்ப பல போர்வைகள்…

அன்பாய், ஆதரவாய்,
ஆதுரமாய், அன்னையாய்…

காது வரை கம்பளிப் போர்வை!
காய்ச்சல் வரும் போதெல்லாம்…

உதடு துடிக்கும் கூதல் காக்கும்
உற்ற தோழனாய் ஒரு சில போர்வைகள்…

கட்டாந்தரையில் படுத்தாலும்
கட்டாயம் தேவை ஒரு போர்வை!

தேவையற்ற போதும் தலைமாட்டில் – ஒரு
போர்வை தனி சுகம், துணை, பலம்

ஒருவர் இருவரானதும்…
ஒரு போர்வைக்குள் இருவராவதும்…

ஒருவருக்கொருவர் போர்வையாவதும்…
இருவர் மூவரானதும்…

ஒரே போர்வையை இருபுறமும் இழுத்து
சிறு யுத்தம் மூள்வதும்…

பிறந்தவை பறந்ததும் தனிப் பறவையாய்…
போர்வைக் கூட்டுக்குள் மீண்டும்

முடங்குவதும் உறங்குவதுமாய்
முடிவில்லா போர்வைக் கதைகள்…

எத்தனை போர்வைகள்!!! எத்தனையெத்தனை ஓர்மைகள்…

அத்தனையும் ஈடாகுமா?
அம்மாவின் சேலைக்கு…