அஞ்சலட்டைக் கதை
அழகியசிங்கர்

நடிகை வந்தனா போதைப் பொருள் கடத்தலில் மாட்டிக் கொண்டாள். அன்றிலிருந்து அவளுடன் நெருங்கிப் பழகிக் கொண்டிருந்த பிரபலமான பத்திரிகையின் நிருபன் கோபாலனுக்கு வயிற்றைக் கலக்கியது.
கோபாலனுக்கு அவளைப் பற்றி நிறையவும் தெரியாது. அவளுடைய நட்பு பத்திரிகை மூலம் ஏற்பட்டது. அடிக்கடி அவனைக் கூப்பிடுவாள். ஆனால் அவனுக்குத் தெரியாத விஷயம். அவள் போதைப் பொருள் கடத்துபவள் என்று.
அவள் அதற்கு அடிமை என்று. எத்தனை முறை அவளைப் போய்ப் பார்த்திருக்கிறான். ஒருமுறை கூட அவன் அவள் போதையில் இருக்கிறாளென்று கண்டு பிடிக்க முடியவில்லை.
போலீசார் அவனையும் கைது பண்ண எப்ப வேண்டுமானாலும் வரலாம்.
முதலில் ஒரு பத்திரிகையின் நிருபன் என்ற ஹோதாவில் அவன் போய்ப் பார்க்க ஆரம்பித்தான். எல்லோரையும் பார்ப்பதுபோல் அவன் பார்த்திருக்க வேண்டும். அவனுக்கு என்ன ஆயிற்று. திடீர் திடீரென்று அவனுக்கு அவள் போன் செய்வாள். அவனும்தான்.
இப்போது அவன் மாட்டிக்கொண்டான் எப்படி இதில் அவள் மாட்டிக்கொண்டாள்? அவளிடம் இது மாதிரியான ஒரு பழக்கம் இருக்கிறதென்றே அவனுக்குத் தெரியவில்லை.
அவன் மனைவி அவளைக் குத்தி குத்திக் காட்டினாள். வந்தனா என்ற உடன் பல்லைக் காட்டிக்கிட்டுப் போனீங்க. அதான் இப்படி ஆச்சு, என்றாள்.
அவன் வீட்டைப் போலீசு வந்து சோதனை செய்து பார்த்தால் எந்தப் போதைப் பொருளும் இருக்கப் போவதில்லை. அப்படி இருக்க அவன் ஏன் பயப்படணும். தனக்குள் சமாதானம் செய்து கொண்டிருந்தான்.
அவன் வெளியே தனக்குத் தெரிந்த வழக்குரைஞரைப் போய்ப் பார்க்கப் போயிருந்தான்.
அந்தத் தருணத்தில் அவன் பெயருக்கு ஒரு பார்சல் வந்தது. அவன் மனைவி வாங்கி வைத்தாள். அந்தப் பார்சல் போதைப் பொருள் என்று அவளுக்குத் தெரியாது.
