நேற்று/ஆர்.கந்தசாமி

வானம் இருண்ட தோற்றம்
வான்மழை வருமோ என்று
ஐயம் கொண்ட நானும்
அயராது நடைபயிற்சி தொடக்கம்

வருண பகவான் வந்து
கருணை அதிகம் காட்ட
இடையில் மாட்டிக் கொண்டேன்
விடாது அடைமழை பெய்யுது

ஒண்ட இடமும் தேடி
அண்டினேன் பழைய வீடு
பூட்டாமல மூடிய கதவு
ஆட்கள் வசிக்க வில்லை

திண்ணையில் அமர்ந்து கொள்ள
வண்ண மயமாய் வயல்கள்
கொக்குகள் மழையில் நனையுது
அகவும் மயில்கள் சப்தம்

விட்டது மழையென்று நானும்
எட்டி நடையைப் போட்டேன்
மீண்டும் மழையும் கொட்ட
வேண்டிய மட்டும் நனைந்தேன்

கடையில் மீண்டும் ஒதுங்கி
வடைகள் இரண்டு உண்டேன்
கொஞ்சம் மழையும் குறைய
மிஞ்சிய தூரத்தைக் கடந்தேன்

முழுதாய் நனைந்து விட்டேன்
அழுதது வானம் தொடர்ந்து
வந்து சேர்ந்தேன் வீட்டிற்கு
இந்த அனுபவம் இனிது