கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு பின்புறம்…/சோ.தர்மன்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு பின்புறம் ஒரு சூப் கடை உள்ளது.இயற்கை உணவுக் கடை.தினமும் மாலை சுமார் ஏழு மணிக்கு அங்கே போய் ஏதாவது ஒரு சூப் சாப்பிடுவது வழக்கம்.பிரபலங்கள் நிறையப் பேர் வருவார்கள்.
அங்கே டேபிள் கிளீனராக வேலை பார்க்கிற ஒரு வயோதிக அம்மா என்னை உற்றுப் பார்ப்பதும் ஏதோ சொல்ல நினைப்பதும் அப்புறம் போய் விடுவதும் நான் இரண்டு மூன்று நாட்களாக கவனித்தேன்.அப்புறம் நானே கேட்டு விட்டேன்.அந்த அம்மா சொன்னார்கள்.தன் குடும்பக் கஷ்டங்களையெல்லாம் சொல்லி விட்டு தான் ஒரு மெஸ்ஸில் ஒன்பது மாதங்கள் வேலை பார்த்ததாகவும் அதன் பின் தான் இங்கே வந்ததாகவும் அந்த ஒன்பது மாதத்திற்கு எனக்கு போனஸ் தரமுடியாது என்று சொல்வதாகவும் சொல்லி அழுதார்.
என்னிடம் எப்படி சொல்லத் தோன்றியது என்று கேட்டேன்.பெரிய பெரிய ஆட்களெல்லாம் சர்வ சாதாரணமாக உங்களிடம் பேசுகிறார்கள்.நீங்களும் ஒரு பெரிய புள்ளியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து உங்களிடம் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு மூசு மூசென்று அழத் தொடங்கினார்.
அந்த அம்மாவின் பெயர் மற்ற விபரங்களை வாங்கி விட்டு போய்விட்டேன்.அதற்கப்புறம் தீபாவளி என் மகன் திருமணம் அப்புறம் நான் சென்னையில் ஒரு வாரம் இருந்து விட்டு வந்தேன்.ஏறத்தாழ அந்தக் கடைக்கு ஒரு மாசமாக போகவில்லை.இன்று அங்கே போனேன்.அந்த அம்மா நன்றிப் பெருக்குடன் என் முன் நின்றார்.
“ஐயா முதலாளியே கூப்பிட்டு ஐந்தாயிரம் போனஸ் கொடுத்தார்.திரும்பவும்அங்கேயே வேலைக்கு வருமாறு அழைத்தார் ஐயா.உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுனே தெரியலையா”என்றார்.
நன்றி சொல்லிவிட்டு நான் எனக்கும் அந்த முதலாளிக்கும் நடந்த உரையாடலை நினைத்து சிரித்துக் கொண்டேன்.அதை இங்கே பதிவிட முடியாது.ஐந்தே நிமிடங்களில் காரியம் முடிந்து விட்டது.