க.நா.சு.வின் பெயரை../பாரதிமணி

/

.

.

2003-ல் தமிழக அரசு க.நா.சு.வின் படைப்புக்களை நாட்டுடமையாக்கி, அவரது வாரிசுகளுக்கு ரூ.3.00 லட்சம் கொடுப்பதாக அறிவித்தது. இதற்கு தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் தலைவராக இருந்த டாக்டர். மா. ராஜேந்திரன் எடுத்துக்கொண்ட முயற்சி தான் முழுமுதற்காரணம். ஒரு மாதம் முன்பே, க.நா.சு.வின் பெயரை பரிந்துரைத்ததாகவும், அமைச்சர் விரைவில் அதை சட்டசபையில் அறிவிப்பாரென்றும் மா.ரா. தகவல் சொன்னார். அதற்கான அறிவிப்பு பத்திரிகைகளில் வந்த தினம், ஐந்தாறு பிரபல எழுத்தாளர்கள் என்னை தனித்தனியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாம் எடுத்த முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்ற ‘உண்மை’யை எனக்கு விளக்கமாக எடுத்துச்சொல்லி, கட்டாயமாக என் ‘நன்றி’யையும் பிடுங்கி வாங்கிக்கொண்டார்கள்! க.நா.சு.வின் மற்றொரு வாரிசான என் மனைவி, தனக்கு இதில் எந்தப்பங்கும் தேவையில்லையென்று எழுதிக் கொடுத்து விட்டதால், மொத்தப்பணமும் க.நா.சு.வின் மனைவி ராஜிக்கே வழங்கப்பட்டது. அதே வருடம் நாட்டுடமையாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரின் பணத்துக்கு, சுமார் 25 வாரிசுகள் போட்டி போட்டதும், அதற்கான விழா நடந்த கோட்டை முதலமைச்சர் அலுவலகம் வந்தபிறகும், ஒரு ’வாரிசு’ இறந்த எழுத்தாளரை கடைசிக் காலத்தில் கவனித்துக்கொண்டதால், தனக்கு அதிகப்பங்கு வேண்டுமென்று ’தெருச்சண்டை’யாக்கியதும் பார்க்க வேடிக்கையாக இருந்தது. கடைசியில் ரூ. 3 லட்சத்தை 26 காசோலைகளாக பிரித்து பங்கு போட்டுக்கொண்டு, சந்தோஷமாக வீடு திரும்பினார்கள்!

தஞ்சாவூரில் பிறந்திருந்தாலும், க.நா.சு.வுக்கு கெட்ட வார்த்தைகள் பாடமாகவில்லை. அவர் திட்டி நான் கேட்டதேயில்லை. இ.பா.வும் அப்படித்தான். ஆனால் தி. ஜானகிராமன் இதிலும் வல்லவர்! சிலசமயம் க.நா.சு.வுடன் பேசிக்கொண்டிருக்கும் எழுத்தாள நண்பர் சக எழுத்தாளரை ‘பச்சைத்தெறியில்’ திட்டும்போது, இவர் நெளிவதை பலமுறை ரசித்திருக்கிறேன். ‘விடுய்யா’ என்று அவரை சமாதானப்படுத்துவார். தினமும் வெளியில் போய்விட்டு, வீடு திரும்பும்போது வாசலில் பேசியதற்கதிகமாக கேட்கும் தமிழ் தெரியாத ஆட்டோக்காரிடமும், என் குழந்தைகளை அவர் கண் முன்னால் அடிக்கும் என் மனைவியிடமும், அவரது அதிகபட்ச கோபத்தில் வரும் கெட்டவார்த்தை ‘Bloody Fool’ என்பது தான். வயதில் சின்னவர்களையும் அவர்கள் இல்லாதபோதும் கூட மரியாதையோடு தான் குறிப்பிடுவார். ’ராஜி! ஆதவன் வந்தாரா?’ பலதடவை அவரை மடக்கி, ‘எனக்கு ஒங்க மகன் வயசு தான் இருக்கும். ஏன் வாங்கோ….போங்கோனு படுத்தறீங்க!’ என்று கடிந்துகொண்டாலும் அவர் தன்னை மாற்றிக்கொண்டதில்லை.

எனக்கு அவரிடம் பிடித்த இன்னொரு விஷயம் அவரது அநாயாச மரணம்.எல்லோருக்கும் அந்த பாக்யம் கிட்டுவதில்லை. லேசாக ஜுரம் என்று படுத்தவர் அடுத்தநாள் அதிகாலையில் சிரமப்படாமல், மற்றவர்களை சிரமப்படுத்தாமல் போய்விட்டார். எனக்கும் அதுபோல நடக்கவேண்டுமென்று தினமும் வேண்டிக்கொள்கிறேன். அவன் சித்தம் எப்படியோ?

  • பாரதி மணி

நன்றி: காலச்சுவடு –க.நா.சு. நூற்றாண்டு விழா மலரில் வெளிவந்தது.

முகநூல் பதிவு : ஆர். கந்தசாமி