11 11 2022 அன்று விருட்சம் க,தைஞர்கள் கூட்டத்தில் பேசிய ‘ஆசை’ என்னும் சிறுகதை பற்றி
எழுதி இருப்பவர் திரு விழி.பா. இதய வேந்தன். 2022, ஜூலையில் அன்னார் காலமாகிவிட்டார். அவரது ஆன்மா சாந்தி அடைவதாக.
இந்தக் கதை வறுமையையும் ஏழ்மையையும் பற்றிய கதை. கதையின் போக்கு எப்படி இருக்கும் என்று தொடக்கத்திலேயே அவர் கோடி காட்டி விடுகிறார்.
வானம் அரசல் புரசலாக வெளிறி கொண்டிருந்தது. மூன்று மின்கம்பங்களில் ஒன்று மட்டும் மினுக்மினுக் என்று எரிந்து கொண்டிருக்க, அருகில் இரு மின்கம்பங்களும் நமக்கேன் வம்பு என்று பேசாமல் அணைந்திருந்தன.
குடிசை வீடு திண்ணையில் அழுக்கு மூட்டை ,பசியுடன் காத்திருக்கும் மூன்று குழந்தைகள். முதல் நாள் இரவு வைத்த கஞ்சியின் மீதத்தை காலையில் சாப்பிட்டு இருக்கிறார்கள் அதையே நீராகாரமாக செய்து அம்மாவும் அப்பாவும் துணி துவைக்க சென்று இருக்கிறார்கள்.
குடும்பத்தின் அதீத வறுமை காரணமாக பொதி சுமக்கும் கழுதையை விற்றுவிட்டு அப்பாவும் அம்மாவும் மூத்த பெண்ணும் அழுக்குத் துணிகளையும் துவைத்து காய்ந்த துணிகளையும் முதுகில் சுமந்து எடுத்து வரும் அவலம்.
சுமை தாங்கியே கூன லாகிய முதுகுடன் நிமிர்ந்து பார்க்க முடியாமல் கல்லிலும்,முள்ளிலும் வெயிலிலும் நடக்கும் அப்பாவை பின் தொடர்ந்து அம்மாவும் மூத்த மகளும் பொதி
சுமந்து செல்கிறார்கள்.
அந்தப் பெண் குழந்தைக்கு அவளை ஒத்த சிறுவர்கள் பள்ளிக்கூடம் போவது போல நானும் போக வேண்டும் ஷூ போட்டு நடக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை இருக்கிறது. ஆனால் அப்பாவோ,”பொ ட்ட படிப்பதெற்கு”இன்று தன் தொழிலில் அவளையும் ஈடுபடுத்தி விட்டார். அவளது இரு தம்பிகளும் நான்காம் வகுப்பு ஒன்றாம் வகுப்பு படிக்கிறார்கள். இவளுக்கு இஸ்திரி பெட்டி பற்ற வைக்கவும் மடித்து வைக்கவும் துவைத்த துணிகளை உலர வைத்து எடுத்து வரவும் வீட்டு வேலைகள் செய்யவும் மட்டுமே அந்த குடும்பத்தில் அனுமதி உள்ளது.
கதை தொடங்குகையில் குழந்தைகள் காலையில் சாப்பிட்ட கஞ்சியுடன் வயிற்று பசியுடன் அம்மாவிற்காக காத்திருக்கிறார்கள். அருகில் இருக்கும் வீட்டில் ஒரு குழந்தை மாம்பழம் சாப்பிடுவதை சிறு பையன் ஆசையோடு பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்பா ஒரே ஒரு நாள் முனியாண்டி விலாசில் வாங்கிக் கொடுத்த அசைவ சாப்பாடு, லீவுக்கு மாமா வீட்டிற்கு போகும்போது வாராவாரம் அவர்கள் செய்யும் மீன் குழம்பு, மீன் பொரியல் எல்லாம் நினைவில் வந்து பசியை மீண்டும் தூண்டுகிறது.
மாமா வீட்டில் எத்தனை வகையான மீன்கள்-சங்கரா, கிழங்கான், வவ்வால், சுறா, ராம பாரை, கொடுவா, கானாங் கொளுத்தி, நெத்திலி, சென்னாவரை.
அம்மா வந்து விட்டாள். மடியில் இருந்த அரிசியை முறத்தில் கொட்டினா, சட்டியில் கவளை என்ற கைவிரல் மொ த்தம் உள்ள மீன்களைப் போடும்போது அது கவிச்சி நாற்றம் அடித்தாலும் குழந்தைகளுக்கு இன்றைக்கு மீன் குழம்பு என்று மிக ஆவலாக இருக்கிறது.
பெண்ணை உலை வைக்க சொல்லிவிட்டு அம்மா அருவாமனையில் தலை வால் இரண்டையும் பிடித்துக் கொண்டு வளையம் வளையமாக மீன் செதில்களை நீக்குகிறாள். மீனின் தலையை கண்ணிற்கு கீழே பாதியாக வெட்டி செவில்கள் , குடல் என்று அவள் வெளியே போட போட குழந்தைகளின் உற்சாகம் ஏறி ஏறி போகிறது. எண்ணெய் இல்லாத நேரத்தில் கையில் இருக்கும் மூன்று ரூபாயை கொடுத்து பெண்ணை இரண்டு ரூபாய்க்கு எண்ணெயும் ஒரு ரூபாய்க்கு தேங்காய் பத்தையும் வாங்கி வரச் சொல்கிறாள். ஆனால் ஐந்து ரூபாய்க்குத்தான் எண்ணெய் தர முடியும் என்று அவர் சொல்லிவிடவே கனகா என்பவரிடம் பேசிப் பேசி இரண்டு ரூபாய் வாங்கி தேங்காயே இல்லாமல் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் உப்பு எண்ணை அரிந்த மீன் ஆகியவற்றை புளி யுடன் சேர்த்து அம்மா வைக்கும் மீன் குழம்பு அதிக வாசமாக இருக்கிறது.
அந்தக் கவிச்சி வாசனைக்கு கருப்பு நாய் ஒன்று சுற்றி சுற்றி வருகிறது.
அப்பா இன்னும் வரவில்லை. பெட்டிக்கடை வைக்க இஸ்திரி பெட்டி வாங்க உதவாத அரசாங்கம் சாராயக்கடையை மட்டும் திறந்து வைத்திருப்பதை அம்மா ஒரு நொடிப்பாக சொல்கிறாள்.
அவர் தள்ளாடிக் கொண்டே வந்து சோத்த போடேண்டி எனும்போது குழந்தைகளும் ஆவலாக ஆகிறார்கள்
தட்டையும் சோத்துக்குண்டானையும் தான் எடுத்து வைத்துவிட்டு கொதித்தது போதும் குழம்பு சட்டியை எடுத்து வா என்று பெண்ணிடம் ஆணை இடுகிறாள் அம்மா.
கரித்துணியை காணோம். அந்தக் குழந்தை தன் பாவாடையால் இறக்குகையில் நழுவி கொதிக்கும் குழம்பு அவள் காலில் விழுகிறது. கீழே விழுந்து பரவுகிறது குழம்பு.பொறுக்க முடியாத சூடு அந்த வலி அதனுடன் அம்மா அடிப்பாள் என்ற பயம்.
அம்மா துரத்தி துரத்தி அடிக்கிறாள் ரெண்டு நாள் குழம்பை வேஸ்ட் பண்ணிட்டியே என்று திட்டுகிறாள். நொண்டிக்கொண்டே பெண் வெளியே ஓடுகிறாள்.
குழந்தைகள் துரத்தியும் போதையில் இருந்த அப்பா விரட்டியும் போகாத நாய் மீன் துண்டங்களை லபக் லபக் என்று சாப்பிடுகிறது.
அம்மா வந்து கல்லால் அதை விரட்டுகிறாள். வெறும் சோற்றில் உப்பும் தண்ணீரும் இட்டு சாப்பிட வைக்கிறாள். கீழே விழுந்த சட்டித் துண்டுகளை குப்பை கூடையில் போட்டுவிட்டு வருமாறு பையனை அனுப்புகிறாள். அவன் வரத் தாமதமாக மூத்தவன் சொல்ல இவள் போய் பார்க்கிறாள். உடைந்த சட்டி உள்பகுதியை அந்தச் சிறுவன் நக்கிக் கொண்டிருக்கிறான். அடிக்க கை ஓங்கியவள் அணைத்துக் கொண்டு நாளைக்கு மீன் குழம்பு செஞ்சு தரேன் என்கிறாள்.
கதை ஒரு மாலை இரவில் ஏழ்மை வறுமை நிறைந்த குடும்பத்தில் ஏற்படும் மீன் குழம்பு ஆசை நிராசையாகப் போவதையும் எரியாத மின் கம்பங்கள் சமூக நிர்வாக அலட்சியத்தையும் பெண்ணிற்கு படிப்பெ தற்கு என்பது புரையோடிப் போன சிந்தனைகளையும் சிறிதும் பிரச்சார தொனி இல்லாமல் எளிய வாக்கியங்களாl சொல்கிறது.
உலகம் முழுதும் உடல் uழைப்பு செய்பவர்கள் இரண்டாம் தரமாகத்தான் கருதப்படுகிறார்கள். அதிலும் பெண்களின் நிலை இன்னமும் தாழ்ந்தது.
மிக இயல்பான ஒருநடைமுறை வாழ்க்கையை, அதாவது ஆசை நிராசை ஆவதை கதாசிரியர் சிறப்பாக எழுதியுள்ளார்.
