சுஜாதாவின் சிறுகதை – நியாயங்கள்

அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு

இந்தக் கதையை வழங்கியவர் : ராம் ஸ்ரீதர்


ஊர், மனைவி, வேலை எல்லாம் புதுசு; என் மணிக்கட்டில் கட்டியிருந்த திருமணக்கயிறுகூட. பத்து நாட்கள் கரைந்து ஹனிமூன் நாட்கள் முடிந்துவிட்டன. ஆரம்பத்தில் இருந்த சாக்லேட் கனவுகள் கரைந்து, பெங்களூரில் வீடு தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. மனைவியை விட்டுத் தற்காலிகப் பிரிவு. அவளுக்கு பொழுது போகவில்லை. தினமும் ஒரு கடுதாசி எழுதுகிறாள் ‘வீடு கிடைத்ததா, வீடு கிடைத்ததா?’ என்று. “அதிக நாள் தள்ளிப் போட்டால் ஊனமாசம் வந்துவிடும். அப்புறம் நாம் இருவரும் சேர்ந்து இருக்க முடியாமல் போய்விடும். இந்த அபலையின்…” இத்யாதி.
அபலையா? காஞ்சிபுரத்தில் இரண்டு வேளையும் சம்பிரமமாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, வருகிற தமிழ் சினிமாவையெல்லாம் பார்த்துக்கொண்டு, டி.வி. பார்த்துக்கொண்டு உல்லாசமாக இருக்கிறாள். இவள் அபலையாம்! ‘உனக்கென்ன கேடு? நான் வீட்டுத் தரகர்களின் பின்னால் அலைந்துகொண்டிருக்கிறேன்’ என்று பதில் எழுதுவதற்குப் பதில், ‘என் காதலிக்கு’ என்று தொடங்கிப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்தக் கடிதங்களை எல்லாம் என் மனைவி பத்திரமாக வைத்திருப்பாள்.
நான் என்னவோ, கிருஷ்ணப்பா என்ற வீட்டுத் தரகர் பின்னால் சுற்றிக்கொண்டே இருக்கிறேன். அழுக்கடைந்த குல்லாய், லாண்டரியே காணாத அழுக்கு கோட்டு, பை நிறையக் காகிதங்கள், மைசூர் மகாராஜாவின் போட்டோ, தட்டுச் சுற்று வேஷ்டி. எனக்கும் அவனுக்கும் மொழிப் பிரச்னை வேறு. அவர் கன்னடத்தில் பேச, நான் தமிழில் பேசுவேன். இருந்தும் அவன் என் தோளில் கை போட்டு பெங்களூரில் உள்ள அத்தனை வீடுகளும் செங்கல் செங்கல்லாக எனக்காகத்தான் கட்டப்பட்டிருப்பதுபோல், ‘நீவுபன்னி, ஸ்வாமி! நானு தோர்ஸ்தினி’ (நீங்க வாங்க, நான் காட்டுகிறேன்) என்று என்னை ராஜாஜி நகர், ஹொசஹள்ளி என்று அலைய விட்டான். இரண்டு மூன்று வாரம் அவனுடன் சுற்றிய பிற்பாடு பெங்களூரில் வீட்டுச் சொந்தக்காரர்கள் எல்லாருமே விலக்கில்லாமல் பகற்கொள்ளைக்காரர்கள் என்கிற முடிவுக்கு வந்தேன். கிருஷ்ணப்பா சளைக்காமல் வீடுகளைக் காட்டிக்கொண்டிருந்தான்.
என் மனைவி தினப்படி இரண்டு கடிதம் எழுதி அழ ஆரம்பித்துவிட்டாள். நான் ‘தனிமை’ என்ற தலைப்பில் கவிதை எழுத ஆரம்பித்தேன். வீடு என்னவோ புகைக்குள் புதைந்த கனவு போலத்தான் தென்பட்டது. சிக்கவில்லை – என் வாடகைக்கும், என் அட்வான்சுக்கும். கடைசியில் ஒரு நாள், ராத்திரி எட்டரை மணிக்குக் கிருஷ்ணப்பா என்னைத் தேடிக்கொண்டு விடுதிக்கு வந்தான். ‘பன்னி ஸ்வாமி பேக!” (விரைவில் வாருங்கள்) என்றான். “எங்கே?” “இன்னூறு ரூபாய் வாடிகே. அட்வான்ஸ் ஜாஸ்தி பேடா. ஆல் எலக்டிரிக். மூணு ரூமு.”
“எல்லி?” என்றேன்.
“ராஜாஜி நகர்.” என்னால் நம்ப முடியவில்லை. ஏதோ சூட்சுமம் இருக்கிறது. ராத்திரி வேளையில் காட்டுகிறான். உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். எதற்கும் போய்ப் பார்ப்பதில் என்ன நஷ்டம்?
வீட்டுக்காரர் சீமான் போல் பெரிதாகச் சிரித்து வரவேற்றார். இரண்டு அறை வீடு. முப்பதுக்கு நாற்பதுக்குக் கச்சிதமாகக் கட்டப்பட்ட வீடு. அவ்வளவு புதிசு இல்லை. உள்ளே ஓர் அறையில் மொஸைக் போட்டிருந்தது. அலமாரிகள் இருந்தன. ஜன்னலைத் திறந்தால் அதோ போஸ்டாபீஸ். இன்னும் கொஞ்சம் போனால் காலேஜ். கூப்பிடு தூரத்தில் கடை, கல்யாண மண்டபம். வேறு என்ன வேண்டும்? குழாயைத் திறந்து பார்த்தேன். காவேரி. இரண்டு அறையிலும் அண்ணாந்து பார்த்தேன். மின் விசிறிகள் இருந்தன. சமையல் அறையில் எட்டிப் பார்த்தேன். மின் இணைப்புகள் காணப்பட்டன. வீட்டை ஒட்டி கொஞ்சம் தோட்டம். வாழை, துளசி.
“வாடகை எவ்வளவு?”
“இருநூறு!”
“அட்வான்ஸ்?”
“உங்கள் இஷ்டம்!” என்னால் நம்ப முடியவில்லை.
“உங்களை அப்பட்டமா ஒரு கேள்வி கேட்கட்டுமா?” என்றேன்.
“ஏன் இவ்வளவு பெரிய வீட்டைக் குறைந்த வாடகைக்குக் கொடுக்கிறேன்? அதுதானே?”
“ஆம்.” சிரித்தேன்.
“எனக்கு பைசா முக்கியம் அல்ல. மனுஷாதாம் முக்கியம். உங்களைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது. எத்தனையோ ஈரானியர்கள் எழுநூறு வரை தருவதாகக் கேட்டார்கள். நான் மறுத்து விட்டேன். பணமா, பெரிசு? பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார்” என்று கூறி, ஒரு சமஸ்கிருதச் ஸ்லோகத்தைச் சொல்லி அர்த்தத்தைச் சொன்னார்.
நான் செக் புத்தகத்தைப் பிரித்தேன். “இன்றைக்குப் பணம் வேண்டாம். இருட்டின பிறகு பணம் வாங்கக் கூடாது. நீங்கள் உங்கள் மனைவியையும் கொண்டு வந்து காட்டுங்கள். எனக்கு அவசரம் இல்லை.”
“எனக்கு அவசரம். வந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது” என்றேன்.
“நான் வாக்குத் தவறமாட்டேன். வீடு உம்முடையது” என்றார் அவர்.
வெளியே வந்ததும், “கிருஷ்ணப்பா தாங்க்ஸ் என்றேன்.” “தும்ப ஒள்ளேயவரு! (ரொம்ப நல்லவர்.) என் கமிஷன்?” என்றார்.
புதுசாகக் கல்யாணம் பண்ணிக்கொண்டு குடித்தனம் துவங்குவதில் இவ்வளவு சிரமங்களா? ரேஷன் கார்டு, காஸ் சிலிண்டர் என்று அலைந்தேன். ஒரு ஸ்கூட்டர் வாங்க முன் பணம் கட்டினேன். பால் கார்டுக்கு விசாரித்தேன். ஆனால் என் மனைவி பன்னிரண்டு பெட்டிகளுடன் வந்து இறங்கியபோது, பொறுப்பாக எல்லாக் காரியங்களையும் செய்து முடித்துவிட்டதில் பெருமையாக இருந்தது. இனிமேல் நானும் என் மனைவியும் ஒரு சந்தோஷ வானவில்லின் கீழ் சதா சிரிப்புடன் இன்பத்தில் திளைக்க வேண்டியதுதான் பாக்கி.
ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்ல! மனைவி வந்து சேர்ந்து ஒரு வழியாக எல்லாம் சரி ஆகி மூன்றாவது அல்லது நாலாவது நாள் மேற்படி வானவில் கரைந்து போயிற்று. சாயங்காலம் ஆபீசிலிருந்து திரும்புகையில் வாசலில் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு மனைவி உட்கார்ந்திருந்தாள். “என்ன?”
“சரியான வீடு பார்த்து வைத்திருக்கிறீர்கள்!”
“ஏன்?”
“உங்களுக்கு என்ன? ஒரு வீடு கிடைச்சா விசாரிச்சு பார்க்க வேண்டாமா?”
“என்ன ஆச்சு? சொல்லேன்.”
“சொல்ல வேண்டாம். அப்படியே நின்னு நீங்களே கேளுங்க.”
“யாரை கேக்கணும்?”
“ஒருத்தரையும் இல்லை. சும்மா நின்னு கேளுங்க.”
கேட்டேன். ஏதாவது அழுகிற சத்தமா? எருமை மாடா? அல்லது பக்கத்து வீட்டில் ஆர்மோனியப் பெட்டி அலறலா?
“ம்ஹும். ஒன்றும் இல்லை.”
“கொஞ்சம் பொறுங்க.”
அடுத்த நிமிஷம் அந்தச் சப்தம் என்னைத் தாக்கியது! “ஐயோ! ஐயையோ! என்னை விட்டுடுங்க! ஐயோ போச்சு. முழங்கால் போச்சு! கை போச்சு! மண்டைல மட்டும் அடிக்காதீங்க, எசமான்!” ஒரே அலறல்! குரலில் அத்தனை வலியும் தென்பட்டது. அச்சம், துன்பம் எல்லாவற்றுக்கும் எல்லையாகப் பெரிய குரலில் அலறல்.
“காலையிலேயிருந்து அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவை இந்த அலறல்!” என்றாள் மனைவி.
“யாரோ யாரையோ அடிக்கிறாங்க.”
“அப்பா! கண்டுபிடிச்சுட்டீங்களே! பின் பக்கத்திலே போலீஸ் ஸ்டேஷன், அங்கே நடக்கிறது இந்தப் பூசை. வருஷம் பூரா இந்த அலறல் கேட்குமாம். இதனாலதான் இதுக்கு முன்னால இருந்தவங்க காலி செஞ்சுட்டுப் போய்ட்டாங்களாம்.”
“ஐயோ! முட்டி! முட்டி போச்சு. விட்டுடுங்க முதலாளி.”
“ஆனா இதுநாள் வரைக்கும் அந்தச் சப்தம் கேட்கலையே! பின்னால் போலீஸ் ஸ்டேஷன் இருந்தா என்ன?”
“வசுந்தரா. இங்கே வா” என்று வாசல் கேட்டில், நாங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கூப்பிட்டாள் என் மனைவி.
“வசுந்தரா, தினம் இந்தச் சத்தம் கேட்கறதா?”
“வீரபத்ரையா டியூட்டியில் இருந்தால்தான் கேட்கும். அவர்தான் அப்படி அடிப்பார்.”
“வீரபத்ரையா யாரு?”
“இன்ஸ்பெக்டர். அவர்தான் கைதிகளைப் போட்டு அடிப்பார். கொலை பண்ணிடுவார்.”
“அட பாவி!”
“வீரபத்ர ஐயாவோ, சூரபத்ர ஐயாவோ, எனக்குத் தாங்கலே. ரன்னிங் காமென்டிரி மாதிரி அடி மண்டையில் படுகிறதா, முட்டியில் படுகிறதா என்று சொல்லிச் சொல்லி அலறுகிறான். ராத் தூக்கம் வராது. இந்த மாதிரி சத்தம் எனக்கு உதவாது. எனக்குத் தாங்காது. மூணே நாளில் பைத்தியம் பிடிச்சுடும்” என்றாள்.
சற்று நேரம் மௌனமாக இருந்தேன்.
“வீடு பார்க்கிறபோது இதெல்லாம் விசாரிக்க வேண்டாமோ?”
“என்ன செய்யச் சொல்றே?” என்றேன் எரிச்சலுடன்.
“வேற வீடு பார்க்கச் சொல்றேன்.” “வேற வீடா? எண்ணிப் பதினைந்து நாள் ஆகலே! மறுபடியும் கிருஷ்ணப்பாவா?”
“ஐயோ, ஐயோ!” ஐயோ, ஐயோ என்றது நான் அல்ல. பின் பக்கம்.
“என்னடா, 200 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வீடு குடுக்கிறானேன்னு யோசிக்க வேண்டாம்?”
“போச்சு. உயிர் போச்சு. என்னைய்யா இங்க போய் அடிக்கறீங்க! எம்மாடி! ஆத்தாடி! வேண்டாங்க, பெல்ட் வேண்டாங்க.”
“நம்ம வீட்டில்தான் நன்னாக் கேக்குமாம்.”
வீரபத்ரையா! பெயரிலேயே மீசை இருந்தது; தாட்டியாக, ஆஜானுபாகுவாக இருப்பார் போல, இரத்தத்தைக் கண்டு பயப்படாத வர்போல இருக்கிறது. சாதாரணமாக அண்டை வீட்டுக் கலகம், சண்டை என்றால் என்ன செய்வார்கள்? போலீஸ் நிலையத்தில் புகார் செய்வார்கள். போலீஸ் நிலையத்திலிருந்தே சத்தம் வருகிறது. யாரிடம் புகார் செய்வது, யோசிக்க வேண்டிய விஷயம். காபி டிபன் சாப்பிட்டுவிட்டு பின்புறம் சென்றேன். அடுத்த தெருவில் இருந்த போலீஸ் நிலையத்தின் பின்புறம் எங்கள் வீட்டுப் பின்புறத்துடன் ஒட்டிக்கொண்டிருந்தது. சுவர் உயரமாக இருந்தது. துணி துவைக்கிற கல்லில் ஏறி நின்று எட்டிப் பார்த்துவிட்டு உடனே இறங்கிவிட்டேன். “ஏன்? என்ன அங்கே?” என்றாள். “ஓர் ஆளுக்கு மூக்கெல்லாம் ரத்தம்.” அடுத்த தெருவுக்கு நடந்து சென்றேன். அந்தப் போலீஸ் நிலையத்தின் முகப்புத் தெரிந்தது. ஆர்க் வளையத்தில், ‘ஸி-3, போலீஸ் ஸ்டேஷன்’ என்று எழுதியிருந்தது. ரோஜாவர்ணக் குரோமஸாம் சிவப்புப் பெயிண்ட் அடித்திருந்தது. சில கான்ஸ்டபிள்கள் இருந்தார்கள். ஜீப் நின்றுகொண்டிருந்தது. வீரபத்திரையா உள்ளேதான் இருக்கவேண்டும். தோளில் சவுக்கத்தைப் போட்டுக்கொண்டு சிலர் நின்றுகொண்டிருக்க, ஒரு கான்ஸ்டபிள் என்னைப் பார்த்து “என்னையா பார்க்கறே?” என்று கேட்டார்.
‘ஏன்யா உங்களுக்கே நல்லாயிருக்கா? மாட்டை அடிக்கறாப்பல அடிக்கறீங்களே! அவன் மனுஷன் இல்லையா? உங்களுக்கெல்லாம் குழந்தை குட்டிகள் கிடையாதா?’ என்று கேட்கத் தைரியம் இல்லாமல், “ஒண்ணுமில்லே” என்று கூறி வீடு திரும்பினேன்.
நான் என் வாழ்நாளில் அதுவரைக்கும் போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்தது கிடையாது. ஸ்ரீரங்கத்தில் என் நண்பனின் சைக்கிளில் விளக்கு இல்லாமல் போனதற்காக ஒரு தடவை ஒரு போலீஸ்காரர் காற்றைப் பிடுங்கி விட்டதுடன் சரி. சட்டத்துக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் ஏற்படவில்லை. இப்போது போலீஸுக்கு எதிராகப் புகார் செய்யத் திராணியில்லை எனக்கு.
இருந்தும் என் மனைவி சொன்னபடி அந்தச் சத்தம் சகிக்க முடியவில்லை. பல நாட்கள் இராத்திரி இரண்டு மணிக்கு திடீரென்று அலறல் கேட்கும். இந்த வீரபத்ரையாவுக்கு ஒரு கால அட்டவணை கிடையாதோ? எந்த வேளையில் நிமிர்த்திக் கட்டுவது என்று ஒரு விவஸ்தை வேண்டாமா? ‘இன்னிக்கு வியாழக்கிழமை. இந்த வீரபத்ரையா யாரையும் அடிக்கமாட்டார். நிம்மதியாகத் தூங்கலாம்’ என்று சொல்ல முடியாது. எப்போது வேண்டுமானாலும் அலறல் கேட்கும்.
வீரபத்ரையாவைப் பார்க்காமலேயே அவர் மேல் வெறுப்பு அதிகமாயிற்று. என்ன மனுஷன்? இப்படியா அடிப்பது? மனிதாபி மானம், மனிதத்தன்மை இதெல்லாம் கூட வேண்டாம்; ஆனால் கருணை?
“யாரும் இந்த வீட்டில் மூணு மாசத்துக்கு மேல் இருந்ததில்லையாம். மூணு மாசம் அவா எப்படி இருந்தான்னு ஆச்சரியமா இருக்கு.”
“இரு சாவித்திரி, அதற்கு ஒரு வழி பண்றேன்.”
“ஒரே வழி வீட்டைக் காலி பண்றது. போலீசுடன் நம்மால் மன்றாடி கொண்டிருக்க முடியாது.”
“பார்க்கலாம்” என்றேன்.
யாராவது கழுத்தில் மணி கட்ட வேண்டாமா? எல்லாரும் காலி பண்ணிக்கொண்டிருந்தால் எப்படி? இந்த அராஜகத்தை எப்படி நிறுத்துவது? எனக்கென்னவோ போலீசுக்கு அப்படி அடிக்க உரிமை கிடையாது என்று தோன்றியது. அப்படி அடிப்பது சட்ட விரோதமானது, குரூரமானது. சட்டக் காவலர்களே சட்டத்தை மீறினால்?
என் நண்பன் வக்கீல் கணேஷிடம் கேட்டேன். “கேஸ் போட முடியாது. போலீஸ் சூப்ரெண்டுக்குப் புகார் லெட்டர் எழுதலாம்” என்றான்.
“சரி, போட்டுடலாம், கணேஷ்.”
“ஆனா அதில் ஒரு அபாயம் இருக்கு. அந்த இன்ஸ்பெக்டர் குறுக்கட்டிண்டு ஒரு நாள் உன்னையும் அது மாதிரி உதைச்சாத் தாங்குமா உனக்கு? இந்த ஆளை மாத்திடலாம். ஆனா இன்னொரு சஞ்சப்பா வருவார். அவங்களுக்குள்ளே ஒத்துமை ஜாஸ்தி. டின் கட்டிவிடுவான் உன்னை!”
“சத்தியமாத் தாங்காது, வேண்டாம்.”
“ஒண்ணு செய்யேன். வேற பேரில் ஹிந்து / எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதிப் போடு. அவங்க பிரசுரிச்சா இத விசாரிப்பாங்க. கொஞ்சம் சலசலப்பு ஏற்படும்.”
“என்ன செய்வாங்க?”
“அடிக்கிறதை நிறுத்த மாட்டாங்க. ஆனா போலீஸ் ஸ்டேஷன ரெஸிடன்ஷியல் ஏரியாவிலிருந்து தள்ளி வேற இடத்துக்கு மாத்தலாம்.”
கணேஷ் யோசனைப்படி எழுதப்பட்ட என் பிரசித்தி பெற்ற கடிதம் செப்டம்பர் 18ஆம் தேதி பிரசுரமாகியது.
‘அன்புள்ள ஐயா, பெங்களூர் போலீசுக்குக் குற்றவாளிகளிடமிருந்து உண்மையை வரவழைக்க எவ்வளவோ முறைகள் இருக்கலாம். ஆனால் ராஜாஜி நகர் ஸி-3 போலீஸ் நிலையத்தின் முறை எல்லாவற்றுக்கும் சிகரம். நிலையத்துக்குள் செல்பவர்கள் அடிபட்டு அலறும் அலறலில் திடுக்கிட்டு விழித்து எழுந்த அக்கம்பக்கத்தினர்கள் ஏராளம். போலீஸ் தன் முறைகளை மாற்றிக்கொள்ளும் என்று தோன்றவில்லை. இடத்தையாவது மாற்றிக் கொள்ளக்கூடாதா? இப்படிக்குத் தங்கள் தூக்கம் இல்லாத ஜே.வி. வர்மா.’
ஜே. வி. வர்மா என்பவன் என்னுடன் எஸ். எஸ். எல்.சி. படித்தவன். இப்போது அமெரிக்காவில் இருக்கிறான். கடிதம் பிரசுரமான மூன்றாவது நாள் மாலை, என் வீட்டு வாசலில் போலீஸ்காரர் ஒருவர் வந்து நின்றார். எனக்கு வயிற்றுக்குள் புளி கரைத்தது. என் மனைவி வெலவெலத்துப் போனாள்.
“வேண்டாம், வேண்டாம்னு சொன்னேன். பேசாமல் வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிருக்கலாம்.”
“இரு, நான்தான் எழுதினேன் என்று யாராலும் நிரூபிக்க முடியாது.”
“சீக்கிரம் வாங்க” என்று கான்ஸ்டபிள் அதட்டினான்.
எதற்கும் கணேஷுக்குப் போன் பண்ணிவிடலாமே என்று தோன்றியது. என் வாழ்க்கையில் முதல் முறையாகப் போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்தேன். வாசல்புறம் சைக்கிள் இருந்தது. மரமேஜை இருந்தது. ஆயுதங்களை சுவரோரம் சாய்த்து வைத்திருந்தனர். ஈட்டி ஈட்டியாகக் கம்பி தெரிந்தது. இடது பக்கத்து அறைக்கு இழுத்துச் சென்றார்கள்.
அங்கே இளவயசாக ஒரு போலீஸ் அதிகாரி உட்கார்ந்திருந்தார். மேஜைமேல் ஜே.வீரபத்ரையா என்று எழுதிய சிறிய பிளாஸ்டிக் போர்டு இருந்தது. இவரா? இன்ஸ்பெக்டருக்கு இருபத்தாறு வயசுதான் இருக்கும். நறுக்கின மீசை. நன்றாக வெட்டி விடப்பட்ட கிராப். கண்களில் மென்மையும், நளினமும் தெரிந்தன. துல்லியமாக உடை அணிந்திருந்தார். என்னைப் பார்த்துச் சிரித்த பற்கள் ஒழுங்காக இருந்தன.
“வாங்க, உட்காருங்க!” என்று எதிர் நாற்காலியைக் காட்டினார். அவர் கைத்தடி பளபளவென இருந்தது. அதை உருட்டிக்கொண்டிருந்தார். என்னையே கூர்மையாகப் பார்த்தார். மேஜைமேல் எக்ஸ்பிரஸ் விரித்திருந்தது. அதை எடுத்து, “போலீஸ் தன் முறைகளை மாற்றிக்கொள்ளும் என்று தோன்றவில்லை. இடத்தையாவது மாற்றிக் கொள்ளக்கூடாதா?” என்று வாசித்து,
“சரியா உட்காருங்க, மிஸ்டர் வர்மா” என்றார்.
“என் பெயர் பிரகாஷ்” என்றேன்.
“ஆனா ஜே. வி. வர்மாங்கற பேர்ல லெட்டர் எழுதுவீங்க இல்லையா?”
“இது நான் எழுதியதில்லை.”
“இது நீங்க எழுதினதுதான்.”
“என்ன ஆதாரத்தின் பேரில் சொல்றீங்க?”
“போலீஸை நீங்க தப்பா எடை போடறீங்க, மிஸ்டர் பிரகாஷ்! இந்த ஸ்டேஷன்லே அடி வாங்கறவங்க கூச்சல் போடறது உங்கள் வீட்டில மட்டுந்தான் அதிகமாகக் கேக்கும். மற்ற வீடுகள் எல்லாம் கொஞ்சம் தள்ளியே இருக்கின்றன. எதிர்த்தாப்பல ஸ்டேஷன். பின் பக்கம் உங்க வீடு. அதனால் இந்த லெட்டர் எழுதினதுக்கு முதல் ஸஸ்பெக்ட் நீங்கதான்.”
“நான் எழுதலே.”
“உங்க கை நடுங்கறதிலிருந்தே தெரிஞ்சு போச்சு நீங்கதான்னு. என்னால அதை ஊர்ஜிதம் செய்ய முடியும். உங்க கையெழுத்தை வச்சுக்கிட்டு… ரொம்பச் சுலபம்.”
எனக்கு வேர்த்துவிட்டது. கணேஷ் சொன்னபடி கடிதத்தை டைப் அடித்து அனுப்பி இருக்கவேண்டும்.
“பரவாயில்லை. நீங்க லெட்டர் எழுதினது குத்தம் இல்லை. அதுக்காக உங்களை நாங்க ஒண்ணும் செய்திட முடியாது. கருத்துச் சுதந்தரம் இருக்கு எல்லோருக்கும். லெட்டர் எழுதினதுக்காக உங்களைக் கண்டிக்கக் கூப்பிடல்லே.”
“பின்னே?”
“மிஸ்டர் பிரகாஷ், உங்க வீட்டிலே நிதம் கூச்சல் கேட்குதா?”
“ஆமாம். பெரிய தொந்தரவு. ஒரு மனுஷன் அந்த அளவுக்கா அடிக்கிறது? மனிதத் தன்மையற்ற செயல்.”
“ஒத்துக்கறேன், மிஸ்டர்!”
“உங்களுக்கு, அவ்வளவு அடிக்கறதுக்குச் சட்டம் உரிமை தரதான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு.”
“சட்டப்படி எனக்கு அடிக்க உரிமை கிடையாது. ஒப்புக்கறேன்.”
“அதை மீறி அடிக்கிறீர்களே!”
“ஆமா.”
“பின்னால வருத்தப்பட மாட்டீங்களா அதுக்கு?”
“இல்லை மிஸ்டர் பிரகாஷ். அப்படி இல்லை. நான் எல்லா கைதிகளையும் அடிக்கறதில்லே. ஒருசிலரை மட்டும்தான்.”
“ஒருத்தரையும் அடிக்கவே கூடாது, தண்டிக்கறதுக்குச் சட்டம் இருக்கிறபோது…”
“அப்படியா? சட்டத்தில் உள்ள தண்டனை போதவில்லையென்றால்?”
“அப்படிக்கூடக் கேஸ் இருக்கா, என்ன?”
“இருக்கு. மிஸ்டர் பிரகாஷ். உங்களுக்குத் தெரியாது. ஆனா உங்க வீட்டுல இந்தக் கைதிகள் சத்தம் போடறது கேட்டுத் தொந்தரவு ஏற்படறதுக்கு வருத்தப்படறேன். ஒரு சுவர் கட்டுவதற்கு அனுமதி கேட்டிருக்கேன். இன்னும் ரெண்டு மாசமானா இவ்வளவு சத்தம் கேட்காது. ஒண்ணு ரெண்டு பெரிய அலறல் கேட்கும். அது உங்களுக்குப் பழகிவிடும், எனக்குப் பழகிவிட்டாற்போல.” நான் இன்ஸ்பெக்டரை முறைத்தேன்.
‘என்ன மாதிரி மூர்க்கன் இவன்?’ எழுந்தேன்.
“மிஸ்டர் பிரகாஷ், போவதற்கு முன் இதைக் கேளுங்கள். நான் எல்லா கைதிகளையும் அடிப்பதில்லை. ஒரு சிலரைத்தான் அடிக்கிறேன். ஏன் அடிக்கிறேன் என்று சொல்கிறேன்… த்ரி எய்ட் ஸெவன், அந்த ரத்னத்தைக் கொண்டுவா.”
பின் பக்கத்துத் தற்காலிகச் சிறையிலிருந்து கதவைத் திறந்து ஒரு முறைப்பான கறுப்பான ஆசாமியைக் கான்ஸ்டபிள் அழைத்து வந்தார். அவன் முகம் அடிபட்டு வீங்கியிருந்தது.
“மிஸ்டர் பிரகாஷ், இவனைத்தான் நேற்று ராத்திரி அடித்தேன். நன்றாகவே அடித்தேன்.”
“கேட்டது” என்றேன்.
அவன் அலறிய அலறல்கள் இன்னும் என் காதுகளில் ரீங்கரிக்கின்றன.
“என்ன செய்தான், சொல்லட்டுமா? பஸ் ஸ்டாண்டில் திருடினான், அவ்வளவுதான். என்ன திருடினான்? ஒரு நகையை, அவ்வளவுதான். நகை எங்கே இருந்தது? ஒரு பெண்ணின் காதில், அவள் தோடு. எப்படித் திருடினான்? ஒரு கத்தியால் அவள் காதை அறுத்தான்.”
“ஐயோ! அப்படியா?”
“திருடி ஓடிப்போய்த் தடுக்கி விழுந்து பிடிபட்டிருக்கிறான், மிஸ்டர் பிரகாஷ். அவனை ராத்திரி கொண்டு வந்தார்கள். அந்தப் பெண் காது பூரா ரத்தம். அவள் காது தனியாக நகையுடன் அப்படியே துண்டாக இருக்கிறது, பார்க்கிறீர்களா?” சரக்கென்று மேஜை டிராயரைத் திறந்து எடுத்துக் காட்டினார். அப்படியே உப்பி வீங்கிப் போய் ஒரு கரு நீல ரத்தக் குதறலின் நடுவில் ஒரு மினுமினுப்பு. பார்க்கவே கண்றாவியாய் இருந்தது.
“வேண்டாம்! வேண்டாம்! உள்ளே வைத்துவிடுங்கள்.”
“நிஜ வைரம் கூட இல்லை, அந்தத்தோடு. அதன் மொத்த மதிப்பு எட்டு ரூபாய்தான்! சொல்லுங்க, இந்தக் குத்தத்துக்கு நீதிபதி அளிக்கும் தண்டனை என்னவா இருக்கும்? சிறை. வேளா வேளைக்குச் சாப்பாடு. சோப்புக் கட்டி. இப்படி வசதி. போதுமா? அந்தப் பெண் கதறித் துடிச்சாளே? எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்! எதுக்காக? பஸ்ஸுக்குக் காத்திருந்ததற்காகவா? இல்லை, எட்டு ரூபாய்க்குப் பளபளப்பான நகை போட்டுக்கொண்டிருந்தாளே, அதுக்கா? எதுக்காக அவளுக்கு அந்த தண்டனை? அவள் கூக்குரலை யார் கேட்பது? அவளுக்கு அத்தனை வேதனை கொடுத்த இவனுக்கு வலி என்றால் என்னன்னு தெரிய வேண்டாமா? எப்படி வலிக்கும்னு இவன் அனுபவிக்க வேண்டாமா? சொல்லுங்க! இவனை அடிச்சு நொறுக்காமல் விட்டுடறதா? சொல்லுங்க, மிஸ்டர் பிரகாஷ்” என்றார் இன்ஸ்பெக்டர்.