
“உடுமலை நாராயண கவிக்குப் பதினெட்டாயிரம் பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும். கவிதை எழுதுவோர்க்கு நாற்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் பாடல்கள்வரை மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும்” என்பது கவிதை எழுத வருவோர்க்குச் சுரதா காட்டும் வழிமுறை.
சுரதா எழுதிய திரைப்பாடல்கள் எண்ணிக்கையில் முப்பது. எம்ஜிஆரின் ‘என் ‘தங்கை திரைப்படத்திற்கு எழுதிய “ஆடும் ஊஞ்சலைப் போலவே அலை ஆடுதே” என்பதுதான் சுரதாவின் முதற்பாட்டு. முதல் பாடலின் முதல்வரியே உவமைதான். “அமுதும் தேனும் எதற்கு? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு, ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா, கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே” போன்ற பாடல்கள் சுரதாவினுடையவை.
“ஒரு திரைப்படத்திற்குப் பல கவிஞர்கள் பாடல் எழுத வேண்டும். ஒரே பாடலைக்கூட இரண்டு மூன்று கவிஞர்கள் சேர்ந்து எழுதலாம். தமிழ் மரபிலேயே அதற்கு எடுத்துக்காட்டு உண்டு. இரட்டைப் புலவர்கள் என்பவர் இருந்தனர். ஒருவர் முதலிரண்டு அடிகளைப் பாட மற்றவர் இறுதி இரண்டு அடிகளால் முடித்து வைப்பார். திரைப்பாடலில் ஒருவர்க்குப் பல்லவி நன்றாக வரும், இன்னொருவர்க்குச் சரணம் நன்றாக வரும். அவர்கள் இருவரும் சேர்ந்து எழுதினால் என்ன தவறு? மக்களுக்குச் சிறந்தது சென்று சேர்வதுதான் நோக்கமாக இருக்க வேண்டும்.” என்று அதிரடியாகக் கூறியவர் சுரதா.
தம் வாழ்நாள் முழுவதும் இலக்கியம், தமிழ், கவிதை சார்ந்து ஓயாது ஊக்கமுடன் இயங்கிக் கொண்டிருந்தவர் சுரதா. எழுதுபவர்களைவிடவும் பதிப்பிப்பவர்களும் இதழ் நடத்துபவர்களும் தமிழுக்குச் சிறந்த தொண்டு செய்கிறார்கள் என்று கருதினார். ”காவியம், இலக்கியம், ஊர்வலம், விண்மீன், சுரதா” ஆகிய பெயர்களில் இதழ்களை வெளிக்கொணர்ந்தார். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். சுரதாவின் கவிதைகளில் மூன்றாம்பால் கூறுகள் தூக்கலாக இருக்கும்.
புதிது புதிதாய் எதனையேனும் செய்வது அவருடைய வழக்கம். வீட்டுக்கு வீடு கவியரங்கம் என்று ஒருவகையை அறிமுகப்படுத்தினார். அவர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிஞர்கள் கவிதை படித்திருக்கின்றனர். கப்பல் கவியரங்கம், படகுக் கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம், விமானக் கவியரங்கம் என்று பலவாறு முயன்றவர். ‘கவிஞர் காலண்டர்’ ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில்கூட இருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
“எனக்குப் பொடிபோடும் பழக்கத்தைத் தவிர வேறெந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. அதனால் நான் நோயினால் சாகமாட்டேன்.” என்று உறுதியாக நம்பினார். அவர் நம்பியதற்கொப்பவே நீண்ட வாழ்க்கையை வாழ்ந்தார். தமிழ்நாட்டரசு கவிதைக்கென்று வழங்கத் தொடங்கிய பாரதிதாசன் விருதினை முதலாமவராகப் பெற்றவர் சுரதா. எண்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து சூன் 20ஆம் நாள் 2006ஆம் ஆண்டு மறைவுற்றார்.
நன்றி: விகடன்
