
விரையும் சைக்கிளின்
பின்னே
தவறி விழுந்த
மீன்காரரின்
பசித்துண்டினை…
கவ்விக்கொண்டு பறக்கிறது
ஒரு காக்கையின் பசி.
உயரப் பறத்தலில்
மண்ணைத் தழுவிய காக்கையின்
பசியை…
தூக்கிக் கொண்டோடுகிறது
ஒரு நாயின் பசி.
எச்சிலில் வடிந்து நீளுகிற
நாயின் பசியை…
பதுக்கப் பார்க்கிறது
ஒரு எறும்பின் பசி.
எறும்பொதுக்கும் அதன் பசியை
அரித்துத்
தின்ன முந்துகிறது…
கரையானின் பசி.
குத்தும் பசியைக் கொத்திப்
புணறும் பசியின்
மீதம் தானே
நாமும் கூட.
_
