சுமதியோடு ஒரு தொலைக்காட்சித் தொடர் விஷயமாக../John Durai Asir Chelliah

சுமதியோடு ஒரு தொலைக்காட்சித் தொடர் விஷயமாக ஃபோனில் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பட்டிமன்ற பேச்சாளர் வழக்கறிஞர் சுமதியைத்தான் சொல்கிறேன்.

சுமதியை நீங்கள் ஏராளமான பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள்.

ஒரு தொலைக்காட்சி தொடர் சம்பந்தமாக எனக்கு சில தகவல்கள் தேவைப்பட்டன. சுமதியிடம் இதை நான் சுருக்கமாக ஃபோனில் சொல்ல, அது சம்பந்தமான விரிவான விஷயங்களை வரிசையாக எடுத்து கொடுத்து, பாயிண்ட் பாயிண்டாக அடுக்கி வைத்தார் சுமதி.

சென்னை உயர்நீதிமன்றத்தின்

சீனியர் வழக்கறிஞர் ஆயிற்றே !

“இது போதுமா இன்னமும் வேண்டுமா ஜான் சார் ? இதைவிட அதிகமாக தகவல்கள் தேவை என்றால், சென்னை வரும்போது எங்கள் அலுவலகத்துக்கு வாருங்கள்.”

அலுவலகம் எங்கே இருக்கிறது என கேட்டுக் கொண்டேன்.

“ஜம்மி பில்டிங் தெரியுமா ?”

“மயிலாப்பூரில் இருக்கிறதே,

அதுதானே ?”

“அதேதான். அடுத்த முறை நீங்கள் வரும்போது அங்கிருக்கும் எங்கள் அலுவலகத்துக்கு வாருங்கள். உங்களுக்கு தேவையான விஷயங்களை நிச்சயமாக எடுத்து தருகிறேன்.”

சுமதியோடு சுமார் அரை மணி நேரம் பேசி இருப்பேன். அதற்குள் அவர் சொன்ன பல விஷயங்கள் மகத்தானவை. மனிதநேயம் மத நல்லிணக்கம் பற்றியவை.

சுமதி என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களில் என்னுடைய மனதை தொட்ட ஒரு சம்பவம்.

சில நாட்களில் அவரது மயிலாப்பூர் அலுவலக வேலைகள் இரவு வெகுநேரம்வரை நீடித்துக் கொண்டே போகுமாம்.

சக நண்பர்களோடு சேர்ந்து அமர்ந்து ஃபைல்களை பார்த்து கொண்டிருப்பாராம்.

அந்த மாதிரி நேரங்களில் ஒரு நாள் நள்ளிரவில் 12 மணிக்கு

திடீரென்று டீ சாப்பிடலாமே என்று தோன்றியதாம்.

உடனடியாக அலுவலகத்திலிருந்து நண்பர்களோடு சேர்ந்து வெளியே வந்து சாலையோர டீ கடைக்கு போனார்களாம்.

‘அப்படி நேரங்களில்தான் நான் அவர்களை தற்செயலாகப் பார்த்தேன் ஜான் சார்’ என்று சொல்லி நிறுத்தினார் சுமதி.

யார் அவர்கள் ?

தூய்மைப் பணியாளர்கள் அதாவது துப்புரவு தொழிலாளர்கள்.

நடுஇரவில் சென்னை நகர வீதிகளை சுத்தம் செய்து கார்ப்பரேஷன் லாரிகளில் குப்பைகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களையே உற்றுப் பார்த்து டீ அருந்திக் கொண்டிருந்த சுமதிக்கு திடீரென இப்படி ஒரு எண்ணம் வந்ததாம். ‘அந்த தூய்மை பணியாளர்களுடன் தானும் ஒன்றாக சேர்ந்து டீ அருந்தினால் என்ன ?’

உடனடியாக அவர்களை நோக்கி குரல் கொடுத்தாராம் சுமதி.

“அண்ணா…

அக்கா…

ப்ளீஸ்…கொஞ்சம் இங்கே வாங்களேன்.”

யாரை இவர் அழைக்கிறார் என்பது தெரியாமல் துப்புரவு தொழிலாளர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்து நின்றார்களாம்.

தங்களைத்தான் அண்ணா எனவும் அக்கா எனவும் இவர் கூப்பிடுவதை தாமதமாக உணர்ந்து கொண்ட தூய்மைப் பணியாளர்கள் தயக்கத்துடனே

சுமதி நின்று கொண்டிருக்கும் இடத்தின் அருகே வந்தார்களாம்.

‘அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒரு கப் டீ கொடுங்கள்’ என்று சுமதி டீ கடைக்காரரிடம் சொல்ல,

சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார்களாம் அந்த தூய்மைப் பணியாளர்கள்.

நடுங்கும் கரங்களால் டீ டம்ளர்களை பற்றிக்கொண்டு

சந்தோஷம் கண்களில் மின்ன மின்ன, அந்த தேநீரை உறிஞ்சி குடித்து மகிழ்ந்தார்களாம்.

இதை என்னிடம் சொல்லும் போதே சுமதியின் குரலில் சந்தோஷமும் நிறைவும் பொங்கி வழிந்தது.

“அந்த மாதிரி நேரங்களில் அவர்களின் முகங்களை பார்க்கவேண்டுமே ஜான் சார். அவர்களுக்கு நாங்கள் வாங்கிக் கொடுத்த அந்த ஒரு கப் டீயோ அதன் விலையோ, பெரிய விஷயம் அல்ல.

ஆனால் தங்களையும் சக மனிதர்களை போல மதித்து நாங்கள் நடந்து கொண்ட அந்த சரி சமமான விஷயம்தான் அவர்களுக்கு அளவுகடந்த ஆனந்தத்தை தந்தது.

உண்மையைச் சொல்லப்போனால் இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில்தான்

நம் வாழ்க்கையின் எல்லை இல்லாத சந்தோஷங்கள் நிரம்பியிருக்கின்றன.”

சிரித்தபடி இதைச் சொல்லி முடித்தார் சுமதி.

சத்தம் எதுவும் இல்லாமல் சின்ன சின்னதாக நிறைய

மனிதநேய சேவைகளை செய்து கொண்டிருக்கிறார்.

சுமதியின் மனதுக்குள் இன்னொரு சின்ன சின்ன ஆசையும் இருக்கிறது.

என்ன அது ?

“எல்லா மதங்களிலும் பிரிவினை வாதங்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. நம்முடைய எதிர்கால குழந்தைகளாவது மதக் கலவரங்கள் இல்லாமல் நிம்மதியாக வாழ ஒரு இயக்கத்தை நாம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.”

ஆம். மத நல்லிணக்கத்தையும் மனித நேயத்தையும் முன்னிலைப்படுத்தி அதை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்பது சுமதியின் நீண்ட நாள் கனவு.

இதற்காக எங்களால் என்னென்ன செய்ய முடியுமோ, அனைத்தையும் செய்ய ஆவலோடு காத்திருக்கிறோம்

என்பதை எடுத்துச் சொன்னேன்.

நல்லவர் லட்சியம்

வெல்வது நிச்சயம்

உயர்வான உங்கள்லட்சியம்

சீக்கிரத்திலேயே

நிறைவேறும் சுமதி.

இன்று பிறந்தநாள் காணும்

சுமதி அவர்களுக்கு

இனிய நல்

வாழ்த்துகள் !

John Durai Asir Chelliah

One Comment on “சுமதியோடு ஒரு தொலைக்காட்சித் தொடர் விஷயமாக../John Durai Asir Chelliah

  1. சுமதி மேடம் செஞ்சது சின்ன விஷயமில்லை. அது தான் மனிதம்.அவரிம் உள்ள அந்த மனிதநேய உணர்வு அன்று வெளிப்பட்டுள்ளது.அவரின் எண்ணம் நிச்சயம் ஓர் நாள் கைகூடும்.எல்லாவற்றையும் கடந்த மனதர்கள் ஒன்று சேர்வர்.நடக்கும் என்ற நம்பிக்கையில் நானும் உங்களுடன்.

Comments are closed.