
தெருவில்
புழுதியைக் கிளப்பியபடி
சுழற் காற்று
சுற்றி சுற்றி அடிக்கிறது!
காகிதங்களும்
சருகுகளும்
காற்றின் சுழற்சியில்
மேலெழுந்து பறக்கின்றன!
புழுதிப் படலத்தில்
காட்சிகள் மறைய
என் நடையின்
திசை மாறிப் போக
கண்ணில் விழுந்த தூசியால்
இன்னும் அற்றுப் போனது
பயணம்!
முகத்தில் மோதிய காற்றில்
தடுமாறியது பார்வை!
காற்றின் ஊளைச் சத்தம்
காதைத் துளைக்க
அணிந்த தொப்பி
காற்றில் பறக்க
முன்னேற முடியாமல்
நின்று போனேன் ஓரிடத்தில்!
ஏன் நிற்கிறாயென
என்னை துரத்தித் தள்ளியது
காற்றின் வேகம்!
முடியாமல்
கடினமாக எடுத்து வைத்த
ஒவ்வொரு அடியிலும்
பாடம் புகட்டியது
காற்று!
வெல்லும் வழி
யாதென அறியாமல்
தூசி விழுந்த
கண்களை உயர்த்தி
வானத்தைப் பார்த்தேன் !
சூல் கொண்ட மேகங்கள்
பல் நூறு உருவங்களை
வரைந்தபடி
நகர்ந்து கொண்டிருந்தது!
மழையில் நனைய
ஆவலின் நுணியில்
மனம் ஏங்கி நின்றது!
எப்போது ஓயும்
இந்த சுழல்!
எப்போது வரும்
குளிர்விக்கும் மழை!
வருணணின் அசரீரியாய்
விண்ணில் முழங்கியது
இடி!
அதற்குமுன்
வெட்டிச்சென்ற மின்னல்
ஏன் என் கண்ணில்
படவில்லை!
ஆம்
தூசி விழுந்த கண்ணிற்கு
மின்னல் எப்படி தெரியும்!
நம் கண்ணில் படாத
ஆச்சர்யங்கள் எத்தனையோ!
அதில் இதுவும் ஒன்று!
17-11-2022
*

👌🏽👏🏼👏🏼 நல்ல கவிதை