
தற்காலத் தமிழ் இலக்கியம் 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றியபோதே பிரச்சனை தோன்றிவிட்டது. தமிழ்த் தற்கால இலக்கியம் தமிழின் 2000 ஆண்டு பாரம்பரியத்தைத் தொடர வேண்டுமா?. ஏதாவது ஓரிருவர் தொடங்கிய மாதிரியைப் பின்பற்ற வேண்டுமா என்ற கேள்வி பிரதாப முதலியார் சரித்திரத்தைப் பின்பற்ற வேண்டுமா? சிறுகதைகள் வ.வே.சு.ஐயரா, பாரதியா, புதுமைப்பித்தனா என்று தொடரும், விமரிசனத்தில் யாரைப் பின்பற்றுவது? நாடகத்தில் யார் இப்படி இப்படி.
அடிப்படைப் பிரச்சனை மரபை நவீன இலக்கியமாக மாற்றுவது எப்படி? இந்தக் கேள்வி தமிழில் கேட்கப்படவே இல்லை. இதற்கான காரணம் தமிழ்த்துறையினர் படைப்பு இலக்கியத்துறையில் களத்தில் இல்லை. காரணம் அவர்களுக்கு நவீன இலக்கியம் பற்றிய புரிதல் இல்லை. அதனால் நாவல்களைப் பாடமாய் வைத்தால் மாணவர்களிடம் நீங்களே படித்துக்கொள்ளுங்கள், கதைத்தானே என்றார்கள். இந்தப் பலவீனம் எங்கிருந்து வந்தது? நவீனப் பார்வை, மரபு இலக்கியத்தைக்கூட அறிய (வாசிக்க அல்ல) வேண்டும் என்ற உண்மையை அவர்கள் காணாததால்.
இந்தப் பலவீனம் போன்ற இன்னொரு பலவீனம் இருக்கிறது. அது நவீன இலக்கியப் படைப்பாசிரியர்களிடம் முதலிலிருந்தே காணப்பட்டது. வேதநாயகம் நாவலை, நாட்டுப்புறக் கதைப்பாடல் போல எழுதினார். பத்மாவதி சரித்திரம், எதார்த்த கதை முறையில் பிராமண வாழ்வைச் சித்தரித்தது. இவை இரண்டு முன்மாதிரிகள். இரண்டுமே சங்க இலக்கியத்திலிருந்து சிலப்பதிகாரம், மனோன்மணீயம், சிற்றிலக்கியம் வழி கதையை உணர்த்தும் முறை ஒன்று இருந்ததை அறியவில்லை. இரண்டையும் தாண்டிய ஒரு மூன்றாம் மாதிரியில் கதை எழுதப்படலாம் என்று அறியவில்லை என்று சொல்லலாமா?
இந்தப் பின்னணியில் என் கதைகளின் மாதிரிக்கு வருகிறேன். முதலில் 1985-இல், ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ எழுதினேன். அதை வாசித்தவர்கள் சிலர் பாராட்டினார்கள். சிலர் விமர்சித்தார்கள். ஆனால் பஞ்சாங்கம், நாச்சிமுத்து, சு.வெங்கட்ராமன், முன்னாள் துணைவேந்தர் திருமலை போன்றோர் வியந்து பாராட்டினார்கள். அதல்ல விஷயம். மேல்பாராவில் சொன்ன வேதநாயகம் பாணியிலும் முழுமையாய் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ இல்லை. மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் பாணியிலும் இல்லை. ஓரளவு – மிக – ஓரளவு, முதலாமவர் பாணியில் வந்து அதை மாற்றிய முறையில் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ எழுதினேன். ஞானக்கூத்தன் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலை வேறு ஒரு மரபில் வைக்க உதவினார். அதையும் கொஞ்சம் பேசவேண்டும். சிறுகதை சரித்திரம் பற்றிச் சொல்லும்போது மணிக்கொடி பற்றிச் சொல்வார்கள். அக்காலம் நாற்பதுகள். அக்காலகட்டத்தில் அச்சுமூலம் இலக்கியம் பல்கிப் பெருகியது. பலதட்டு, சாதிகளைச்சார்ந்த கூட்டமான மக்களுக்கு இலக்கியம் போனதால், வாசகர்கள் என்ற இலக்கியத்தைத் தீர்மானிக்கும் இன்னொரு சக்தி உருவாகிறது. இங்குத் தமிழ்மொழி துரதிருஷ்டம் செய்த மொழியாயிற்று. கன்னடம் போலவோ, மலையாளம் போலவோ, அல்லாமல் வியாபாரிகள் இலக்கியத்தை விற்பனைசெய்ய தமிழ்மொழியைச் சந்தைக்கு இழுத்துவந்தனர். பத்திரிகைத் தமிழ் என்று ஒன்று உருவாயிற்று. இதற்கு விலை இருந்தது. வாசிக்கிறவர்களைப் பெருக்கப் போட்டி நடந்தது. அதனால் விற்கிற இலக்கியமா, விற்காத இலக்கியமா என்று கேட்கக்கூடாத கேள்வி கேட்கப்பட்டது. பத்திரிக்கைத் தமிழ் உருவான கதை இதுதான். உடனே இதனை எதிர்க்க சிறுபத்திரிகைகள் 1970களில் உருவாயிற்று. உள்ளாற்றல் உள்ள கலாச்சாரத்தில் எதிர்சக்தி இருக்கும். இந்தக் கட்டத்தில் தமிழ்மொழியின் உள்சக்தி ஒருவிதமாய் அன்றி பலவிதமாய் மாறிற்று. சிலர் பத்திரிகைத் தமிழில் இலக்கியம் படைக்கலாம் என்றனர். நல்லவிதமாய் எதார்த்த நாவலை எழுதினால் போதும் என்றனர்.
இப்போது ஒரு பெரிய பாய்ச்சல், தமிழ் வாழ்க்கையில் உருவாயிற்று. அதுதான் புதுக்கவிதை. இந்தக் கட்டத்தில் தான் ஞானக்கூத்தன் பற்றி மேலேசொன்னேனே அந்த விசயம் வருகிறது.அவர் கேட்ட கேள்வி பொருத்தமாகிறது. அவர்சொன்னது இதுதான்: புதுக்கவிதை, பத்திரிகைத் தமிழை விட்டுவிட்டது. முதன்முதலில் பத்திரிகைத் தமிழில் அல்லாது வேறு வகையாய் எழுதப்பட்டது ஏற்கனவேசொல்லப்பட்ட மனிதர்கள் நாவல் என்றார் ஞானக்கூத்தன்.
அதாவது தமிழ்ப்பாரம்பரியத்தில் மனிதன் என்ற தனிநபர் இல்லை என்கிறது தொல்காப்பியம் 1. முதற்பொருளும் (காலம், இடம்) உணர்வு (பொதுஉணர்வு-2 உரிப்பொருள். அதுபோல் செடி, விலங்கு, மலை, சூழல், ஆகாசம், ஓரளவு தெய்வ அடையாளங்கள் என்று விளக்கப் படும் 3. கருப்பொருள் அதாவது உலகை – பூமிக் கிரகத்தை முழுசாய் கோட்பாடாக்கியது தொல்காப்பியம். இதுதான் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலில் மனிதன் மரத்தின் தன்மையுடன் படுத்துக் கிடக்கும் விசயம். தனிநபர் பண்புடன் இல்லாமல் கூட்டுப் பண்புடன் ஜானின் தாத்தா சித்தரிக்கத் தொல்காப்பியம் படித்ததுதான் காரணம். ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலில் பாத்திரவார்ப்பு முறை வேதநாயகம் மற்றும் மாதவையா நாவல்களிலிருந்து மாறுபட்டது. அவர்களுக்குத் தொல்காப்பியத்தைவிட அவர்கள் படித்த அரைகுறை ஆங்கில நாவல்கள் ஞாபகத்துக்கு வந்தன. அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால், ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களில் வரும் காதல் ஐந்திணைக் காதல் போன்றது.
அடுத்து நான் எழுதிய “சரித்திரத்தில் படிந்த நிழல்களு”க்கு வருவோம். பாரம்பரிய அழகியல் கோட்பாடுகள் கொண்ட தமிழ்மொழியில் நாவல் இலக்கியம் வேர் தேடி இங்கிலீஷுக்கு ஏன்போகவேண்டும்? பாரம்பரியப் பின்னணியின் ஆற்றலை பரிசோதனை செய்து பார்த்திருக்க வேண்டும். இது மிகுந்த முக்கியத்துவம் கொண்ட விஷயம். ஆனால், இன்று வரை யாரும் பேசாத ஒரு விசயமல்லவா? நவீன தமிழ்ப்பண்பாடு ஏன் பாரம்பரிய ஆற்றலைப் பற்றித் தன்னுடைய நவீன இலக்கியத்தில் அதிகம் கவலைப்பட வில்லை என்பது தான் கேள்வி. ஏன் தொடர்ச்சி அறாமை இருக்கவில்லை? தொடர்ச்சியில்லாத ஞாபகம் எப்படிப்பட்டது? இதன் உளவியல் வெளிப்பாடு என்ன? சி.என். அண்ணாதுரை 1962இல் டெல்லி பாராளுமன்றத்தில் திராவிடநாடு கேட்ட பின்னணி, ஓர் இனம் இழந்துபோன உரிமைசார் பின்னணி ஆகும். தன் இனத்தின் பிளவுபட்ட ஊனத்தை – அதன் ஊனத்தை – மருந்திட்டு ஆற்ற மேற்கொண்ட முயற்சியல்லவா அது, என்ற கேள்வியும் வருகிறது. எனவே 18, 19ம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய பண்பாட்டுப் பாதிப்பால் தமிழ்ப்பண்பாட்டில் ஏற்பட்ட பெரும் சலனம் அடுத்து உருவாகும் இலக்கியத்தினால் ஏதோ ஒரு வகையில் எதிர்கொள்ளப்படவேண்டும். இந்த எதிர்கொள்ளலுக்குப் போதிய விதமான மரபு அறிவு அந்தச் சமூகத்தில் இருக்க வேண்டும். அல்லது பாரம்பரியம் பற்றிய அக்கரை இருக்கக்கூடிய தமிழ்ப் பிரிவுகளில் இருந்து தமிழ் நாவல் அல்லது புனைவு எழுந்து வந்திருக்க வேண்டும். முதல் நாவலை எப்படி எப்படி எழுதக்கூடிய சாத்தியப்பாடுகள் இருந்திருக்கலாம்? மிக முக்கியமுள்ள கேள்வி இது. இதை யாரும் கேட்டதாய் தெரியவில்லை.
இது ஒரு அறிதல் பற்றிய பிரச்சனை. அறிதல் குறையுடைய ஒரு குழுவில் – மொழி – பண்பாடு குறைப்பார்வை இருக்கும். அது படைக்கும் இலக்கியத்திலும் அக்குறை வெளிப்படத்தான் செய்யும். ஏன் தொல்காப்பியத்தில் நவீன கதையடிப்படையில் பிறந்த இலக்கிய மரபை வேர்விட வைக்க வேண்டும் என்ற குரல் எழவில்லை? அய்யப்ப பணிக்கர் ஓரளவு இந்த குரலை எழுப்பினார். பணிக்கரையும் தாண்டிபோயிருக்கத் தேவையான வகைகையில் தமிழில் பாரம்பரியம் பலம் இருந்திருக்கிறது. என் இந்த இரண்டு நாவல்கள் தமிழ் பாரம்பரியத்தையும் முதல் தமிழ் நாவலை எழுதும் பல்வேறு சாத்தியப்பாட்டுத் தேவையும் சுற்றி வந்த மனப்பயணத்தில் ஏற்பட்ட இரண்டு உதாரணங்கள். ஆங்கில அல்லது மலையாள (நீல பத்மநாபன் – தோப்பில்) மாதிரிகள்தாம் இல்லாமல், ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் போல எழுதிப் பார்போம் எப்படி நாவல் போகிறது பார்க்கலாம் என்று தொடர்ந்து பலர்செய்து பார்த்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்’ நாவலில் ஒரு பகுதி வருகிறது.
“தெகிமொலாக்கள் காலத்தைச் சதுரங்கம் போன்றது என்று கருதினார்கள். சதுரங்கத்தைக் கட்டங்களாகப் பிரிப்பதுபோல் காலத்தைப் பிரித்தார்கள். அதில் மிகவும் கொடுமையான இரண்டு காலங்களை எதிரும்புதிருமாக வைத்து அவர்களது காலச்சக்கரத்தை வரைந்தார்கள்”
யாருக்கும் இது பழந்தமிழ் – தொல்காப்பிய முறைப்படியான – காலப்பாகுபாடு என்று தெரியும். பழந்தமிழ் அப்படியே இல்லை கொஞ்சம் மாற்றப்பட்டது.
“இரவுப் புணர்ச்சிகளின்போது புணர்ச்சி இலக்கணமும் காலநிலைகளும் நியமங்களும் பின்பற்றப்படாததாலும் தொடர்ந்து பிறந்தவர்கள், விசித்திர நினைவுகளுடனும் காலநிலை அற்ற விதமாகவும் பிறந்தனர்”.
இது நீண்ட சரித்திரம் கொண்ட மக்கள் கூட்டம் ஒன்று, சரித்திரத்தின் பிளவுகளை எப்படித் தங்கள் விசித்திரம் மிக்க வாழ்க்கை முறைகளால் வேறுவிதமாய் உருவாக்கம் செய்தார்கள் என விளக்குகிறது.
தமிழ் மனிதன் என்ற உருவாக்கம் மேற்கத்திய மாதிரியில் வடிவமைக்க 19, 20, 21ஆம் நூற்றாண்டுகளில் முயற்சி செய்யப்பட்டது. அதற்குமுன்பு பர்ஷிய, மொகல் சரித்திர, மராட்டிய இடையீடுகளையும் தமிழ் உள்வாங்கிற்று. அதன் கதைப்புனைவு மாதிரிகள் எப்படிப்பட்டவை? அவற்றின் சில மாதிரிகள் சமீப நாவல் சரித்திரத்தில் தமிழிலும் வருகின்றன.
நாம் தொடர்ந்து கொண்டு வரவேண்டிய சில விஷயங்களை தர்க்கமாக மாற்றப் பார்க்கிறேன்.சங்க இலக்கியத்தைக்கொண்ட அற்புதமான இனம் தமிழினம். தமிழில் பாரம்பரியமாக இருந்த என்ற ஓர்மையை முற்றிலும் ஏன் நீக்கினோம்? 2009-இல் ஈழத்தில், தமிழ்அடையாளம் பற்றிய கேள்விகள் பழம் ஞாபகத்தின் அழுத்தத்தைத் தந்ததால் சிந்தனை கட்டமைப்புகளாய் அவை வெளிப்போந்தன. கட்சிகளாய், குழுக்களாய், அரசியல் இதுதான் என்ற பெயரில் தமிழகமெங்கும் ‘தமிழன் யார்’ என்ற இளைஞர்களின் கேள்விகளுடன் நிறைய சலனம் ஏற்பட்டுள்ளது. ஒரு தமிழ் எழுத்தாளனாய், இவற்றை முற்றாய் ஒதுக்கமுனையவே மாட்டேன். இவர்களின் மொழியின் – சொல்லின் – அர்த்தம் என்ன? (மீண்டும் தொல்காப்பியம் நினைவு வருகிறதே!) என்னுடைய இரண்டாவது நாவலான ‘சரித்திரத்தில் படிந்த நிழல் -இல் வரும் இந்தத் தெகிமொலாக்கள் யார்? இந்த நாவலின் ‘இறைச்சிப்பொருள்’ எது என்று கேட்க முடியுமா? ‘உள்ளுறை உவமையாக’, நவீன குறியியல் அர்த்தங்களாக என்ன வருகிறது எனப் பார்ப்பதில் தவறில்லை. தன்னை வரலாற்றில் இழந்த ஒரு மக்கள்கூட்டம் வழிதெரியாது தவிக்கிறது.
நான் ஒரு கட்டுரையில் பெரியார் நம் நாட்டுப்புற மரபுகளை மதிக்கவில்லை என்று எழுதினேன். நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் – தேசிங்குராஜன் கதையிலிருந்து முத்துப்பட்டன் வழி – இன்னும் அண்ணன்மார் சுவாமி என பெரும் பரவலாக்கம் உண்டு. செவ்வியல் மரபும் சங்கம், சிலப்பதிகாரம் என்று வேறொரு ஞாபகத்தமிழ் மரபாய் இணையாக தமிழர்களை நினைவுறுத்தியபடியே இருக்கிறது.
நாட்டுப்புறக்கதையில் தேவதைக்கதை எப்போதும் உலகம் முழுதும் திருமணத்தில்தான் முடியும் என்று ஒரு மறுக்கமுடியாத கோட்பாடு உண்டு. அதாவது திருமணம், மந்திரசக்தி, விடைதெரியாக் கேள்விகள், மோதிரம் இப்படிப்பட்ட ஒவ்வொன்றும் ஓராயிரம் அர்த்தங்கள் கொண்டவை. செவ்வியலும் அப்படித்தான். குறுந்தொகையில் வரும் குறிஞ்சி என்ற புணர்ச்சி பற்றிய ஞாபகம், பத்துப்பாட்டின் குறிஞ்சிப்பாட்டில் நீண்ட கதைசொல்லலாகி, சிலப்பதிகாரத்தில் மிகப்பெரும் கதைப் பாரம்பரியமாகிறது. நாவல் பாத்திர வார்ப்பை – மேற்கின் எதார்த்தமுறையை மறுக்காமல் உலகப்பொதுக்கதைகளை நாம் ஏன் உருவாக்க முடியாது? கார்சியாஸ் மார்க்கேஷ் வந்த பிறகு தான் அப்படி எழுதவேண்டுமா?
வேடிக்கை என்னவென்றால் 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலம் வழி வந்த கிளுகிளுப்பு, மரபை முக்கியமாக்கி நம் பாரம்பரிய கதைகளை மீட்டெடுப்பதைக் கேலி பேசும் அளவுக்குப் போன மூடச்செயல்தான். மார்க்கேஷ் செய்றது அந்தச் செயல்தான். தமிழ் உரைநடையைத் தமிழ்மொழிக்கேற்ப எழுதுவதே பல சிக்கல்களைக் கொண்ட காரியம். பெஸ்கி எழுதியது உரைநடையா, நச்சினார்க்கினியர் எழுதியது தமிழ் உரைநடையா? நாம் கேள்வி கேட்டு முடிக்கவே இல்லை. முதலில் தமிழ் உளம் அங்கீகரிக்கும் – கருத்தைச் சரியாய் வெளிப்படுத்தும் உரைநடையே வரவில்லை. பின் எப்படி உரைநடைக் கலையான நாவலை எப்படி எழுதுவது என்ற பிரச்சனையைத் தீர்ப்பது?
இன்னும் ஒரு முக்கியமான விஷயம். புரிகிற எழுத்து, புரியாத எழுத்து பற்றிய பிரச்சனைக்கு வருகிறேன். பாரம்பரிய தமிழில் எல்லாமே புரியாத எழுத்துத்தான். எந்த உரையாசிரியர் புரியக்கூடிய முறையில் எழுதியிருக்கிறார்? நிகண்டு என்பதும் அகராதியும் இலக்கணமும் புரியாமையை அங்கீகரிக்கும் செயல்தானே. பழக்கமானது, பழகாதது என்றுதான் உண்டு. எல்லாம் ஏகதேசமானதுதான்.
செவ்வியல் கதைகளான நெடுநல்வாடை போன்றவற்றில் வரும் பாத்திரங்களான அரசன், அரசி போன்றோரின் இடங்கள் அசைவதில்லை. அரசி படுக்கையோடு காட்சி தருவாள். அரசன் பாசறையோடு காட்சி தருவான் அல்லது முல்லைப்பாட்டில் அரசன் தேரில் வந்து கொண்டிருப்பான்.இடஅசைவு ((Move)) கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ‘சரித்திரத்தில் படிந்த நிழல் களில்’ பச்சை ராஜன், பாக்கியத்தாய், மலைமீது ஒளி, அம்மிக்குழவி, மொழித்துறையினர், சர்க்கஸ் கோமாளி இவர்களின் இடங்களும் இடஅசைவுகளும் ((Move)) கூட கட்டுப்படுத்தப்பட்ட அசைவுகளுக்கு உட்பட்டவை.இந்த இரண்டு தமிழ்ப்பாரம்பரிய நாவல்களின் மூலம் தமிழ் புத்திலக்கிய அரங்கு திறப்பைச்செய்தது. நாவல்களைத் தமிழ்த்துறையினர் தம் மாணவர்களுக்குப் பாடமாய் வைத்து இரண்டாயிரம் ஆண்டு தொடர்ச்சி பெற்ற இனம் நம்முடையது என்று மெய்சிலிர்த்திருக்க வாய்ப்பிருந்தது அல்லவா?
இதுபோல், எதார்த்தபாணி கதைசொல்லலில் அல்லது உளவியல்பாணி கதைசொல்லலின் பாத்திர வார்ப்பைவிட நாட்டுப்பறவியல் கதைசொல்லலில் சமூக கதையாடல் நடக்கிறது. ஏனெனில் உளவியல் கதையாடலில் தனிநபர் சமூகம் வருகிறது. நாட்டுப்பறக் கதையின் பாத்திரங்கள் நாய்கள் மனிதர்களாவதுண்டு. ஒரு ஊரில் ஒரு நாய்க்கு இரண்டு பெண்கள் பிறந்தனர். இரு அரசகுமாரர்கள் மூத்தவளையும் இளையவளையும் திருமணம் செய்தபின்பு தாய் – நாய் மூத்த மகளிடம் வருகிறது. வெந்நீர் ஊற்றி விரட்டுகிறாள் மூத்தவள். இளயவள் நாயை உணவு கொடுத்து பாதுகாக்கிறாள் என்பது போன்ற கதை கேட்டிருப்பீர்கள். மனித – விலங்கு இணைவு ஏற்படுவதோடு பாத்திரங்கள் சமூக மாதிரிகளாகின்றன. காஃகாவின் கதையில் கரப்பானாக மாறுவான் ஒருவன். நாட்டுப்புறக்கதையில் இறந்த நாய் இளையவளுக்கு தங்கக்கட்டியாக மாறி உதவும். மூத்தவள் வெந்நீர் ஊற்றியதால் வெறும் புழுவாய் தன் உடம்பை நாய் மாற்றித் தண்டனை கொடுக்கும். தண்டனையும் பரிசளிப்பும் என்ற கருத்தாக்கம் கதையின் அமைப்பாகிறது. இங்கு, கதைமை என்பது கருத்தமைவு என்று வடிவம் கொள்வதாகும். சரித்திரத்தில் படிந்த நிழல்களில், பச்சைராஜனுக்கும் பாக்கியத்தாய்க்கும் ஏற்படும் பல்வேறு ‘கதை இடஅசைவுகள்’ கருத்து + அமைவு = புனைவு என்று புதுவித அர்த்த உருவாக்கமாகிறது. தமிழ்ச்சமூகம் சினிமாவைத் தனக்குள்ளே வடிவமைத்த செயல் நம் கதைமுறை வேறுபட்டது என்பதைத்தான் விளக்குகிறது.
கார்ல்மார்க்ஸ் “British Rule in India” என்று ஒரு கட்டுரை 1853-ல் எழுதியது பலவித விவாதங்களை உருவாக்கியது. இந்தியா போன்ற சமூகத்தின் தேக்கத்தைப் பிரிட்டிஷ் அரசு உடைத்து ரயில், தனிச்சொத்து, அறிவியல், தொடர்பியல் போன்றவற்றைத் தந்தது என்பார் மார்க்ஸ். உடனே மார்க்ஸும் ஒரு வெள்ளை மனம் கொண்டவர் தான் என்று விமரிசித்தனர். ஆனால் மார்க்ஸ் சொன்னது ஒரு உண்மை. அதாவது நாட்டுப்புறவியல் இடஅசைவின் அடிப்படையில் இயங்கும் சமூகம், இந்தியாவில் செயல்படுகிறது என்று அவர் கூறியதாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது தமிழர்களின் சரித்திரம் ஐரோப்பிய சரித்திரம் போன்றதல்ல என்று தமிழ் அறிதல்வழி மார்க்ஸை அணுகுவதற்கு இங்கு முயலவேண்டும். தமிழ்க் கதையாடல் (Tamil Narration) ஒன்றை, நாம் உருவாக்கும் முகமாக, மார்க்ஸ் மேற்குறித்தக் கட்டுரையில் சிந்தனை விதைகளை அறிமுகப்படுத்துகிறார். நம் சரித்திரம் பிராந்திய அசைவு கொண்டது.ஹெகலிய சரித்திரம் அனைத்துலக அசைவு கொண்டது. ஹெகலியம் அனைத்துலக ஒற்றைப் பார்வையை முன்வைத்தபோது அதன் பெறுபேறாக உருவான நம் இந்தியஇடதுசாரிப் பார்வைகள் மாறவேண்டும் என்பதும் இங்கு உணர்த்தப்படுகிறது. “சரித்திரத்தில் படிந்த நிழல்கள்” இத்தகைய நாட்டுப்புறவியல் /தமிழ் அறிதல் கொள்கைசார் கதையாடல் முறையை விரிவாய் சர்ச்சை செய்யும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது. கதையைப்பாருங்கள்:
“இன்னொரு விஷயத்திலும் ராணியின் வார்த்தைவழி பிறந்த மைந்தன் தெகிமொலாக்களின் இரண்டுபட்ட மனத்துடன் நடந்துகொண்டான். அவன் பனிக்காலத்தில் ஒரு காலும் கோடைகாலத்தில் இன்னொரு காலும் வைத்துக் காலத்தின் தடைகளைத் தாண்டினான். அதுபோலவே அவன் அரச சபையில் வளர்வதற்குப் பதிலாக மக்களின் சபைகளிலும் அதுபோல் கவிதைப்பிரியர்களான தெகிமொலாக்களின் மனங்களிலும் ஒரே நேரத்தில் இருந்தான்” (பக்.19)
இவ்விதம் நாவல் கதையாடலில் வரும் இடஅசைவு என்பது நாட்டுப்புறக் கதைகளில் இருந்து எடுக்கப்பட்டு இங்கு வேறுமுறையில் கற்பனை செய்யப்படுவதை அறியவேண்டும். மையக்கதைப் பாத்திரம், நாட்டுப்புறக்கதையில் தனது குறிக்கோளான யாருக்கும் செய்யமுடியாத செயலைச் (பகைவனைத் தோற்கடிப்பது, மந்திரத்தைக் கற்பது, மாயமோதிரத்தைப் பெறுவது என்பதுபோல்) செய்யும் வழியில் முன்னேறுகிறது. அப்படி அவன், இன்னொரு உபகதைவழி அவனுடைய எதிர்கால மனைவியைச் சந்திப்பான் அல்லது தன் நண்பனைச் சந்திப்பான். இப்படி உபகதை கிளை பிரியும் இடத்தை “இடஅசைவு” என்பார்கள். சரித்திரத்தில் படிந்த நிழல்கள் நாவலில் இது வியாக்கியானம் / மறு வடிவாக்கம் பெற்று ஒரு பாத்திரம் ‘இரண்டுபட்ட மனத்துடன்’ அல்லது ‘பனிக்காலத்தில் ஒரு காலும் கோடைக்காலத்தில் ஒரு காலும்’ கொண்டுவிளங்கும். அல்லது மக்களின் சபைகளிலும் தெகிமாலாக்களின் மனங் களிலும் “ஒரே நேரத்தில்” இருக்கிறான். இதுபோல பல உத்திகள் சரித்திரத்தில் படிந்த நிழல்கள் நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
(நவீன விருட்சம் 120 வது இதழில் வந்த கட்டுரை. )
