பூஜை வேளையில் கடவுள் நடமாடிக்கொண்டிருந்தார்/குகா

கையில் அர்ச்சனையும் அதில் பூஜை சாமானுடன் ஒருவர்;
அவரைத் தெய்வம் கடந்தது

விபூதியில் கொஞ்சம் நெற்றியும் அதில்
கொஞ்சம் குங்குமமும் வைத்து கொண்டு ஒருவர்;
அவரைத் தெய்வம் கடந்தது

கையை ஏந்தி கண்ணை மூடி வாயில் மந்திரம்
சொல்லிக்கொண்டு ஒருவர்;
அவரையும் தெய்வம் கடந்தது

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பூஜையை
கவனிக்காமல் சிறு குழந்தை எறும்புடன்
விளையாடிக்கொண்டிருந்தது.
தெய்வம் அங்கேயே நின்றுவிட்டது,
அங்கேயே பூஜையும் முடிந்துவிட்டது