எனது ஒய்வுபெற்ற நண்பன் வேய்க்கு/தூ பூ
Tu Fu

தமிழில் : க மோகனரங்கன்

காலை மாலை நட்சத்திரங்களைப் போல
நண்பர்கள் சந்தித்துக் கொள்வது
கிட்டத் தட்ட கடினமானது.
ஆதலால் இன்றிரவு அரிதானது.
கொஞ்ச காலத்திற்கு முன் இளமையாக இருந்த,
இப்போது காதோரம் நரைத்துப் போன
நண்பர்களிருவர் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
கூடுகிறோம்.
எம் நண்பர்களில் பாதிபேர் மரித்துவிட்டார்கள்
என்பது எங்களைத் துணுக்குற வைத்தது;
எமது இதயத்தை துயரத்தால் எரியச்செய்தது.
நாம் கணித்தோம்,
கடைசியாக உன்னை நான் கண்டது
இருபது வருடங்களுக்கு முன்பாக.
அப்போது நீ மணமாகாத இளைஞன்.
இப்போதோ வரிசையாய் நிற்கும்
இச் சிறுவர்களும் சிறுமியர்களும்,
தங்களுடைய தந்தையின் பழைய
நண்பரிடத்து
பரிவு காட்டுகிறார்கள்.
எனது பயணத்தில்
எங்கெல்லாம் சென்றிருந்தேன்
என வினவுகிறார்கள்.
சிறிது நேரம் அளவளாவிய பிறகு
அவர்கள் எனக்கு ஒயினும் உணவும்
கொணர்ந்தார்கள்.
எனக்காக வேண்டி
இம் மழையிரவில் வெட்டப்பட்ட
வெங்காயப்
பூண்டும் பழுப்பு அரிசியும்
விசேஷமாக சமைக்கப்பட்டிருந்தன.
என்னை உபசரித்தவன் இதைத்
திருவிழா என்றான்,
பத்துக் குவளைகளாவது நான்
பருகவேண்டுமெனத் தூண்டினான்.
எப்போதும் உன் அன்பால்
என்னிதயம் நிரம்பிவழிகையில்,
இந்தப் பத்து குவளைகள்
எப்படி என்னை போதையில்
ஆழ்த்தவியலும்?
நாளை இம் மலைகள்
எம்மை பிரித்துவிடும்;
நாளை மறுநாளைப் பற்றி
யார் சொல்ல முடியும்?