ஓஷோவின் ஞானக் கதைகள்

அவன் தன்னுடைய குருவின் ஆசிரமத்தில் தனியாக அமைக்கப்பட்டிருந்த ஒரு குடிசையில் சலனமில்லாத மனதை அடைய பயிற்சி மேற்கொண்டிருந்தான். யார் அவனைப் பார்க்க வந்தாலும் இவன் அவர்களை திரும்பிக் கூடப் பார்க்க மாட்டான்.
அவனுடைய குரு ஒருநாள் அவன் இருக்கும் குடிசைக்கு வந்தார். அவன் அவரையும் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் குரு முழு நேரமும் அங்கு உட்கார்ந்திருந்தார். மேலும் ஒரு செங்கல்லை கல்லின் மீது வைத்து தேய்த்துக் கொண்டிருந்தார்.
அவனால் இருப்புக் கொள்ள முடியவில்லை. அவன் கேட்டான்:

“நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”
குரு சொன்னார்:

“செங்கல்லை கண்ணாடியாக ஆக்கிக்
கொண்டிருக்கிறேன்!”

அவன் சொன்னான்:“செங்கல்லை கண்ணாடியாகவா?
பைத்தியம் பிடித்து விட்டதா?
வாழ்க்கை முழுதும் தேய்த்துக் கொண்டிருந்தாலும் இது கண்ணாடி ஆகாது!”

இதைக் கேட்ட குரு சிரித்தார்.தன் சீடனைத் திருப்பிக் கேட்டார்: “அப்படி என்றால் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?செங்கல் கண்ணாடியாகாது
என்றால் மனம் எப்படிக் கண்ணாடியாகும்?”