அதிசயங்கள்/க நா சு

எத்தனை அதிசயங்கள்
எத்தனை எத்தனையோ?

தாகமெடுக்கிறது
தண்ணீர் குடிக்கிறேன்
திருப்தி ஏற்படுகிறது
இது அதிசயமில்லாமல் வேறு என்ன?

மெல்லிய நாதஸ்வரம்
காற்றிலே மிதந்து வருகிறது.
கேட்டபடியே சிந்தனை எதுவுமில்லாமல்
இரண்டு நிமிஷங்கள் கழிக்கிறேன்
இதுவும் அதிசயமே.

பக்கத்து வீட்டில் ஏதோ
அல்ப சந்தோஷம்
பேரக்குழந்தை பிறந்ததோ
லாட்டரியில் பரிசு விழுந்ததோ
மூத்த மகனுக்கு வேலைதான் கிடைத்ததோ
எனக்கு எதுவும் நிச்சயமாகத் தெரியாது
ஆனால் அந்த ஆனந்தம்
என் கண்களைக் குளமாக
நிரப்புவதும் அதிசயம்தான்.

காலையிலும் மாலையிலும்
தில்லைத் திருச்சபையிலே
நடனமிடும் ராஜனைக் காணச்
சென்று வருகிறேன் – பக்தி
ஏதுமில்லாமலே – ஆனால்
அதிலே எத்தனை தொல்லைகள்
எப்படியோ மறைகின்றன.

எங்கோ எவனோ
தன்னைத் துப்பாக்கி எடுத்துச் சுட்டவனை
‘ராம ராம – மன்னித்துவிடு’
என்று சொல்லிவிட்டுச் சாகிறான்.
உலகம் அவனை மன்னிப்பதில்லைதான்
என்றாலும் அந்த வார்த்தைகளாலேயே
உலகமே உயர்ந்தமாதிரித் தோன்றுவதும்
அதிசயம் தானே!

என்ன புழுக்கம்
என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே
இரண்டு தூற்றல் போட்டு
உடலையும் உள்ளத்தையும்
குளிர்விக்கிறது
அதுவும் அதிசயம்தானே!

எத்தனை அதிசயங்கள்
எத்தனை எத்தனையோ