காவிரி துலா ஸ்நானமும், பாலதண்டாயுதபாணிக்குக் காவடியும்!/ஜெ.பாஸ்கரன்

வீட்டில் எந்த ஒரு முக்கியமான விசேஷத்திற்கும் முன்னால், சிதம்பரம் உட்பிரகரத்தில் தூணோடு ஒயிலாக கையில் வேலுடன் நின்றுகொண்டிருக்கும் பாலதண்டாயுத சுவாமிக்குப் பால்காவடி எடுப்பது எங்கள் குடும்ப வழக்கம். மேலும் சில வேண்டுதல்களுக்காகவும் காவடி எடுப்பது உண்டு.


இந்த வருடம் ஐப்பசி மாதம் எல்லோருக்கும் வசதியான ஒரு நாளில் காவடிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதிசயமாக, அது கந்த சஷ்டி அன்று அமைந்தது எங்கள் பாக்கியமே!

முதல் நாள் இரவே சிதம்பரம் சென்றுவிட்டோம். இலேசான தூறல், எப்போது பெருமழையாவேனோ என பயமுறுத்தியபடி இருந்தது. ஆருத்ராவில் அறைகள் எடுத்திருந்தோம். உடை மாற்றி, கோயிலுக்குச் சென்றோம். ஆனந்த தாண்டவம் ஆடி நிற்கும் கூத்தனுக்கு எப்போதும் கொண்டாட்டம்தான்! நல்ல கூட்டம். இரவு அர்த்தஜாமப் பூஜைக்கு அழகான மயில் வடிவில் புஷ்பப் பல்லாக்கு! சுவாமியுடன் ஊர்வலம் சென்று – அந்த நாதஸ்வரமும், தவிலும் இணைந்து ஆனந்தபைரவியையும், நீலாம்பரியையும் இழையவிடும் சுகம் – பள்ளியறையில் ஊஞ்சலில் ஆனந்த தரிசனம்! கனகசபையிலிருந்து சுவாமி பாதங்கள் கீழே இறங்கி பல்லக்குக்கு வரும் வரையில் சுத்தமத்தளத்தில் ‘சதுஸ்ர’ நடையில் வாசிப்பு; பின்னர் பல்லக்கு பள்ளியறை வரும்வரை ‘கண்ட’நடையில் வாசிப்பு! உடன் வரும் பெரிய ஜால்ராவிலும் அதே நடைகளில் வாசிப்பு. மனம் ஆனந்தக் கூத்தாடும் ஒரு மன நிலை – Ectasy என்பார்களே – பேரின்பப் பரவச நிலையில் அமிழ்வது இறைவன் அளிக்கும் வரம்! வாழ்வில் ஒரு முறையாகிலும் இந்தப் பேரானந்ததை அன்பவித்து, பிறவிப் பயனை அடைய வேண்டும்.


மறுநாள் விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி, சுமார் ஒன்றரை மணி நேர கார் பிரயாணத்தில், மயிலாடுதுறையின் ‘துலாக் கட்டம்’ சென்றோம். துலா (ஐப்பசி) மாதம், ஓடும் காவிரியில் ஸ்நானம் செய்வது விசேஷம். உலகில் உள்ள பாபங்களை எல்லாம் தன்னில் கரைத்து அருளும் கங்கை, தன் மீது படிந்துள்ள பாபக் கறைகளைப் போக்கிக்கொள்ள, காவிரியில் குளித்து புனிதம் பெற, ஐப்பசி மாதத்தில் இங்கு வருவதாக ஐதீகம்! அதனால் ‘துலா ஸ்நானம்’ விசேஷமாகக் கருதப்படுகின்றது!

இருள் பிரிந்து வானம் வெளுக்கும் நேரம், மேகங்கள் வேறு சூழ்ந்துகொண்டு மழை பொழியக் காத்திருந்தன. அந்த நேரத்திலேயே உள்ளூர்வாசிகள் காவிரியில் குளித்துக்கொண்டிருந்தார்கள்! ஒரு வேன், இரண்டு கார்களில் மக்கள் ஸ்நானத்திற்கு வந்துகொண்டிருந்தார்கள். ‘சில்’ லென்ற காற்றும், காவிரியின் சலசலப்பும், அந்த விடியற்காலையை மிகவும் ரம்யமாக ஆக்கியிருந்தன. ஒரு வினாடியில் கவிதை எழுதிவிடும் அபாயம் இருந்தது! கரையின் ஏதோ ஒரு மூலையில் தி.ஜா. அமர்ந்து ரசித்து எழுதிக்கொண்டிருக்கக்கூடும் என மனதில் எண்ணம் ஓடியது. வெள்ளையும் காவியும் அடிக்கப்பட்ட படித்துறை காவிரியின் ஓட்டத்தில் தன் அழகைப் பார்த்து மகிழ்ந்திருந்தது! பெரிய மரம் காவிரியின் மேல் தன் நிழல் விழும் அளவிற்குச் சாய்ந்து அரைத் தூக்கத்தில் அசையாமல் நின்றுக்கொண்டிருந்தது. கீழே மரத்தைச் சுற்றி நாகதேவதைகள், பரிவாரங்களுடன் எண்ணை கறைபடிந்த வஸ்திரங்களுடன் நின்று கொண்டிருந்தன – அவைகளும் துலா ஸ்நானத்திற்குக் காத்திருக்கின்றனவோ என்னவோ! இன்னொரு ஓரத்தில் ஶ்ரீ கேதாரநாதர் ஆலயம் இருந்தது – ஏஆர்சி காமாட்சி ஜுவல்லர்ஸ் போர்டுடன்!

காவிரியின் நடுவில் நாலுகால் மண்டபமும், கோயில் கோபுரங்களும், ஓட்டு வீடுகளும், படித்துறைகளும், தூரத்தே காவிரியின் குறுக்கே பாலமும், கரைகளில் பெரிய மரங்களும் மனதில் ஓர் உயிரோட்டமுடன் கூடிய ஓவியம் போலத் தெரிந்தது! காவிரி பாயும் திசைக்கு எதிரே குளிர்ந்த நீரில் சுகமாக மூழ்கி எழுந்தோம்! கரையில் பெண்கள் வெற்றிலை பாக்கு மஞ்சள் பழம் கொடுத்து மகிழ்ந்தார்கள்! காவிரிக்கரையின் கலாச்சார, பாரம்பரியப் பண்புகள் இன்னும் உயிர்த்துடிப்புடன் இருப்பது, மனதுக்கு நிறைவாக இருந்தது!

இருபுறமும் பச்சைப் பசேல் என்று பரந்து கிடக்கும் வயல்கள், கண்ணுக்குக் குளிர்ச்சி! வரும் வழியில் வைதீஸ்வரன்கோயில் கோபுர தரிசனம் – எதிரே பிஸியாக இருந்த கடையில் சூடான காப்பி (கண்ணாடித் தம்ளர்களில்) பிளாட்ஃபாரத்தில் நின்றபடி குடித்தோம்! விரைவாகச் சிதம்பரம் திரும்பினோம் – அலங்காரக் காவடிகள் காத்திருக்கின்றனவே!

கீழவீதியில் தீட்சிதர் வீட்டில் காவடிகள் அலங்கரிக்கப்பட்டு – சிறு மண் குடங்களில் பால், சந்தனம் நிரப்பி இரண்டு பக்கங்களிலும் கட்டப்படும். காவடிக்கு பூமாலைகள் சுற்றப்பட்டு, சந்தனம், குங்குமம் இட்டு அலங்காரம்; சில காவடிகளில் மயிலிறகுகள் தோகை போலக் கட்டப்படும் (மயில் காவடி) – பூஜை செய்யப்படும். தூப தீப ஆரத்திகளுக்குப் பிறகு, அவரவர் காவடியைத் தோளில் சுமந்து கொண்டு, முருகன் சன்னதிக்கு ஊர்வலமாகச் செல்ல வேண்டும். நாதஸ்வரம், தவில் மங்கள வாத்தியம் முழங்க, காவடிச் சிந்து பாடி, ஆடியபடி, முருகனை தரிசிக்கச் செல்ல வேண்டும். சிலருக்கு முருக பக்தியின் உச்சமாகத் தனை மறந்து ஆடுகின்ற பாக்கியமும் கிட்டும்.
உட்பிரகாரத் தூணில் – புண்டரீகவல்லித் தாயார் சன்னதிக்குப் பக்கத்தில், துஜஸ்தம்பம் தாண்டி தெற்கு பார்த்த நிலையில் – எழுந்தருளியுள்ள பால முருகன் அவ்வளவு அழகு! தூணிலிருந்து முருகன் வெளியே வருவது போலத் தோன்றும். தூணைச் சுற்றி கம்பிகளால் அமைக்கப்பட்ட தனி சன்னதி, தரையிலிருந்து எட்டிலிருந்து பத்து அடி உயரத்தில் இருக்கும். சன்னதியைச் சுற்றி வர ஒரு பிரகாரமும் இருக்கும்.

முருகன் சன்னதியில் காவடியை இறக்கி வைத்து, மனம் உருகி வேண்டிக்கொண்டு, காவடியில் எடுத்துச் சென்ற பால், சந்தனம், விபூதி என முருகனுக்கு அபிஷேகம் செய்து, அலங்கார ஆராதனைகள் செய்வது மரபு.
அன்று கந்தர் சஷ்டி, சூர சம்ஹாரம் என முக்கியமான நாளானபடியால், நிறைய காவடிகள்! தீட்சதர் ஒருவர் நாக்கில் அலகு குத்தி, காவடி ஏந்தி வந்தார். அவருடன் வந்த பெண்கள் மயில் காவடி ஏந்தி வந்தனர். 108 முறை சன்னதியை வலம் வந்து, காவடியை இறக்கி வைத்து, பாலமுருகன் சேவடி தொழுது, அலகினை எடுத்து, கண்ணீர் மல்க உடல் குலுங்கிய போது, நாங்கள் சிலிர்த்துதான் போனோம்!

அபிஷேகம் முடிந்து, தங்கக் கவசம் அணிந்து அலங்காரமாய்க் காட்சி கொடுத்த பாலமுருகன் – கையில் வேலுடன், ஒயிலாக மயில்மீது சாய்ந்து நின்று கொண்டிருந்த குழந்தையைப் பார்க்கப் பார்க்கப் பரவசம். கே.பி.சுந்தராமபாள் பாடிய ‘காவடி ஆடி வந்தால், கந்தா என மனமுருகி’ காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது!
மூன்று தலைமுறைகள் காவடி எடுக்கும் வைபவத்தைப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றவன் நான். இம்முறையும், பழைய நினைவுகள் மனதில் நிழலாட, நிரந்தரமாக அங்கு நின்றுகொண்டிருக்கும் பாலமுருகனை கைகூப்பி வணங்கினேன்.

கல்கண்டு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், பஞ்சாமிர்தம், அபிஷேகப் பால் எல்லாம் அக்கிருந்த பக்தர்களுக்கு விநியோகம் செய்தோம். தீட்சதர் வீட்டில் மதிய உணவு முடித்து, பாண்டி, திண்டிவனம் வழியே சென்னை வந்தடைந்தோம்.

காவிரி துலா ஸ்நானமும், கந்தர் சஷ்டி காவடியும் பல நாட்களுக்கு மனதில் மகிழ்ச்சியையும், அமைதியையும் அளித்துக்கொண்டிருக்கும் என்பது நிச்சயம்.

One Comment on “காவிரி துலா ஸ்நானமும், பாலதண்டாயுதபாணிக்குக் காவடியும்!/ஜெ.பாஸ்கரன்”

Comments are closed.