வெயில் சுடும் பகல் தெரியவில்லை
துயில் புதையும் சுவடு புலப்படவில்லை
நூறு கோடி
கால் நனைத்தாலும்
இல்லாமல்
நின்றாலும்
தவக் கண் விலகாமல்
தனித்து வழியும் இருதுளி தொட்டு
தொப்புள் கொடியாக நீள்கிறது
கரை.
உப்பிட்டவரை உள்ளளவெலாம் நிறைத்து,
அதி வெளியில்
பொங்கி எழுகிறது தொடுவான்.
அலைமேல்
அலை பெருக்கி
ஆதிமடி சாய விழைந்து வரும்
கடலின் மனசு
துடிப்பது
இந்தப் பிறவியின் எந்தப் புலரியில்.
கேள்..ஆழக்கேள், கூட
துடித்து.
