இனிக்கும் தமிழ் – 159/டி வி ராதாகிருஷ்ணன்

அபிராமி அந்தாதி..

நம்ம வீட்டுப் பெண்

கடவுள்

“காணுதற்கு அந்நியள் அல்லாத” பெண் அவள்.
நம்ம வீட்டு பெண் மாதிரியே இருக்கிறாள்.
அவளை முதல் முதலில் பார்த்த உடனேயே அவள் மேல் ஒரு காதல்.
காதலா அது ? இல்லை பக்தியா ? இல்லை வேறு ஏதாவது ஒன்றா ?
எல்லா உறவுக்கும் பெயர் இருக்கிறதா என்ன ?
அன்பு என்று சொல்லலாமா ?

அவள் மேல் அன்பு பிறந்ததே கூட என் முன் ஜன்ம புண்ணியம் தான்.
எத்தனையோ பேர் அவளை பார்க்கிறார்கள். எல்லோருக்குமா அவள் மேல் காதல் வருகிறது ?

எனக்கு மட்டும் தானே வந்தது..ஏதோ முன் ஜன்ம புண்ணியம்….
அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய்த புண்ணியமே
…அவள் தான் ஆதி…அவள் தான் அந்தம்.. அவளால் தான் இந்த அந்தாதி…

வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய் புண்ணியமே

பொருள்:

வாணுதற் கண்ணியை – வாள் போன்ற கூரிய நெற்றியையை உடைய பெண்ணை
விண்ணவர் யாவரும் வந்து- வானில் உள்ள தேவர்கள் யாவரும் வந்து
இறைஞ்சிப் – கெஞ்சி
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை – அவளை அரவணைத்து
காப்பாற்ற எண்ணிய
பேதை நெஞ்சில் – அவர்களுடைய பேதை நெஞ்சில்
காணுதற்கு -நேரில் காண்பதற்கு
அண்ணியள் அல்லாத கன்னியை -வேற்று ஆள் போல் அன்னியம் இல்லாத கன்னியையை காணும் -கண்ட பின் அன்பு பூணுதற்கு = அவள் மேல் அன்பு கொள்ள எண்ணிய எண்ணமன்றோ – எண்ணிய என் எண்ணம் இருக்கிறதே
முன் செய் புண்ணியமே – அது நான் முன்பு செய்த புண்ணியத்தால் எனக்கு கிடைத்தது இறைவனை அபிராமி பட்டர் காணுகிறார். நம் வீட்டு பெண் போலத்தான் இருக்கிறாளாம்.அவளைக் கண்டது அவர் முன்பு செய்த புண்ணியத்தால்தானாம்