வீட்டு விருந்தாளி

அம்பரோ தேவிலா

மூலம் : ஸ்பானிஷ் ஆங்கிலம் வழி தமிழில் : அழகியசிங்கர்

            எங்களுடன் வசிப்பதற்கு அவன் வீட்டிற்கு வந்ததை என்னால் மறக்கவே முடியாது.  ஒரு பயணத்தின் போது என் கணவர் அவனை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். 

            எங்களுக்குள் திருமணம் நடந்து 3 ஆண்டுகள் நடந்து விட்டது.  எங்களுக்கு இரு குழந்தைகள்.  என் கணவருடன் நான் மகிழ்ச்சியாக இல்லை.  என்னை என் கணவர் ஒரு மரக்கட்டையாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்.  ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பவராகவும், ஆனால், வெளியே பார்ப்பவருக்கும் ஒன்றும் அறியாதவராகவும் தென்படுவார்.  நகரத்திலிருந்து தள்ளிப்போய் ஒரு ஒதுக்குப்புறமான ஊரில் நாங்கள் குடியிருக்கிறோம்.  கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் ஊர் தன் அடையாளத்தை இழந்துகொண்டு வருகிறது.

            முதன்முறையாக அவனைப் பார்க்கும்போது என் கோபத்தை நான் சற்றும் மறைக்கவில்லை.  அவன் கடூரமானவனாகவும், மஞ்சள் நிற விழிகளுடன் கண் சிமிட்டாமல் குண்டாகவும் தென்பட்டான்.

            ஏற்கனவே உள்ள என் மோசமான வாழ்க்கைச் சூழல் இன்னும் நரகமாக மாறிற்று.  என் கணவனிடம் வேண்டிக்கொண்டேன்.  அவனை நிரந்தரமாகத் தங்குவதற்கு வீட்டிற்கு அழைத்து வந்த கொடுமையைச் செய்யாதீர்கள் என்று.  என்னால் இதைத் தடுக்க முடியவில்லை.  அவன் அவநம்பிக்கையும்,பயங்கரத்தையும் வெளிப்படுத்தியவண்ணம் இருந்தான்.  “அவன் யாருக்கும் எந்தத் தொந்தரவும்செய்யமாட்டான்,”என்றார் வித்தியாசமான முகபாவனையுடன் என் கணவர்.

            “அவன் இங்கிருப்பது உனக்குப் பழக்கமாகிவிடும்,”என்றார்.

அவனை வீட்டைவிட்டு அழைத்துப்போக என் கணவரிடம் சொல்வது முடியாததுபோல் தோன்றியது.  அவன் எங்களுடனே எங்கள் வீட்டில் தங்க ஆரம்பித்துவிட்டான்.

            அவன் இருப்பதால் நான் மட்டும் துன்பப்படவில்லை. வீட்டிலுள்ள ஒவ்வொருவரும். என் குழந்தைகள், என் வீட்டில் எனக்கு உதவிசெய்யும் பெண்மணி, அவளுடைய சிறிய பையன். என் கணவர்தான் அவன் இருப்பதை விரும்பினார்.

            முதல் நாளிலேயே என் கணவர் அவன் தங்குவதற்கு என் வீட்டுக் கோடியில் உள்ள அறையை ஏற்பாடு செய்துவிட்டார். அது ஒரு பெரிய அறை.  ஆனால் அதை நாங்கள் பயன்படுத்துவதில்லை. பொதுவாக அந்த அறை இருட்டாகவும் தேவையற்றவற்றைப் போடும் இடமாகவும் இருந்தது.  அந்த அறையில் இருப்பதே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.  இரவு வரும்வரை அவன் தூங்கிக்கொண்டிருப்பான்.  எப்போது அவன் படுக்கப்போவான் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.  

            அவன் வந்தபிறகு இந்தப் பெரிய வீட்டில் எனக்குக் கிடைத்த சிறிதளவு சந்தோஷமும் போய்விட்டது.  பகல் நேரத்தில் எல்லாம் பொழுது சாதாரணமாகப் போவதுபோல் போகும்.  நான் காலையில் சீக்கிரமாக எழுந்து குழந்தைகளைத் தயார்ப் படுத்துவேன்.  அவர்களுக்குக் காலை உணவு வழங்குவேன்.  அதற்குள் என் வேலையாள் குடலூப் வீட்டை ஒழுங்கு படுத்திவிட்டு வெளியே கடைக்குச் சென்றுவிடுவாள்.

            எங்கள் வீடு பெரியவீடு.  நடுவில் தோட்டத்துடன் அதைச் சுற்றிலும் அறைகள் கொண்ட வீடு.  அறைகளுக்கும் தோட்டத்திற்கும் இடையில் ரேழி. அடிக்கடி வரும் மழையாலும் காற்றாலும் அறைகள் பாதிக்கப்படாமல் காப்பாற்றப் படுகின்றன. இந்தப் பெரிய வீட்டில் காலைநேரத்தில் தோட்டத்தையும் வீட்டையும் பார்த்துக்கொள்வது என் முக்கியமான வேலை. ஆனால் என் தோட்டத்தை விரும்புகிறேன்.  நடந்து செல்லும் பாதை முழுவதும் பூக்களுடன் கூடிய செடிகள் சுற்றிலும் இருக்கும்.  ஒவ்வொரு முறையும் இந்தப் பாதை வழியாக அமர்ந்து என் குழந்தைகளின் துணிகளைத் தேய்த்துக்கொண்டிருப்பேன். போகன்வில்லா வாசனையும், இன்னும் பல நறுமணம் கலந்த வாசனையுடன் பல செடிகள் இருக்கும்.  

            தோட்டத்தில் பல நறுமணம் கலந்த செடிகளை வளர்க்கிறேன்.  செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும்போது குழந்தைகள் செடிகளில் தென்படும்  வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்கும்.  சிலசமயம் தோட்டத்திலேயே பொழுதைக் கழிக்கும்.  அந்தத் தருணத்தில் அமைதியாகவும் தீவிரமாகவும் இருக்கும்.  சிலசமயம் ஹோஸ் குழாயிலிருந்து கொட்டும் நீரைப் பிடித்து விளையாடும்.

            கோடி அறையில் என்ன நடக்கிறது என்பதை நான் கவனிக்காமல் இருக்க மாட்டேன். பெரும்பாலான நேரம் அவன் தூங்கிக்கொண்டிருந்தாலும் அதை நிச்சயமாக என்னால் அனுமானிக்காமல் இருக்க முடியாது.  மதிய நேரத்தில் நான் சமையல் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று அவன் நிழல் உருவம் விறகு அடுப்பின்மீது படர்வதை உணர முடிகிறது.  என் பின்னால் அவன் நிற்பதை அறியவும் முடிகிறது.  கையில் எதை வைத்துக்கொண்டிருந்தாலும் ஒரு பைத்தியக்காரி மாதிரி போட்டுவிட்டு ஓடிவிடுவேன்.  ஒன்றும் நடக்காத மாதிரி அவனும் அவன் அறைக்குச் சென்றுவிடுவான்.

            நான் நினைக்கிறேன்.  என் பணியாள் குடலூப் பற்றி ஒன்றும் தெரியாது என்று.  அவளை அவன் பார்த்ததும் கிடையாது, துரத்தியதும் கிடையாது என்று நினைக்கிறேன்.  அதேபோல் என் குழந்தைகளையும்.  ஆனால் என்னைத்தான் அவன் தொடர்ந்து கொண்டிருக்கிறான். 

            அவன் அறையை விட்டு வெளியே வந்தவுடன், ஒரு மோசமான கனவு ஏற்படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்துவான்.  என் படுக்கை அறையில் உள்ள மறைவு இடத்தில் நின்று கொண்டிருப்பான்.  அதனால் நான் படுக்கை அறையிலிருந்து வெளிவருவதை நிறுத்தி விட்டான்.  பலசமயம் அவன் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்துக்கொள்வேன்.  சமையலறையில் என் குழந்தைகளுக்குக் காலை உணவு தயாரித்துக் கொண்டிருப்பேன்.  அதேபோல் நடைபாதை இருட்டு மூலையில்

அவனிருப்பதை பூந்தொட்டி அருகில் சென்று கவனிப்பேன்.

            “அவன் அங்கிருக்கிறான், குடலூப்,” என்று வெறுப்புடன் கத்துவேன்.

            குடலூப்பும், நானும் அவன் பெயர் சொல்லி கூப்பிட்டதில்லை.  அந்த நிழல் மனிதனின் பெயரைச் சொல்லி கூப்பிடாமலிருப்பதுதான் சிறந்த வழி.

            “அவன் அங்கிருக்கிறான்.  வெளியில் வருகிறான்..தூங்கிக்கொண்டிருக்கிறான்…அவன்…அவன்.”

            இருமுறைதான் அவன் உணவு உட்கொள்கிறான். அவன் எழுந்துகொள்ளும்போது ஒரு முறை.  இன்னொரு முறை காலை நேரத்தில் தூங்குவதற்குப் போவதற்கு முன்.  குடலூப்தான் அவனுக்கு உணவு கொண்டு வந்து கொடுப்பாள்.  அந்த ஏழைப்பெண் பறந்துகொண்டுதான் அவனுக்கு உணவு கொண்டு செல்வாள்.  என்னைப்போல அவளும் பதட்டமாக இருப்பாள்.  அவன் மாமிசத்தைத் தவிர எதையும் சாப்பிட மாட்டான்.

            குழந்தைகள் எல்லாம் தூங்கப்போனபின் குடலூப் எனக்கும் உணவு எடுத்துக்கொண்டு வருவாள்.  அவன் எழுந்துகொண்டான்  என்பதைத் தெரிந்து கொண்டேனென்றால் குழந்தைகளைத் தனியாக விடமாட்டேன்.  குடலூப் தன் வேலைகைளை எல்லாம் முடித்தக்கொண்டு தன் பையனுடன் தூங்கப் போவாள் என்னையும் தனியாக விட்டு.  என்னுடைய படுக்கை அறை எப்போதும் மூடாமல் இருக்கும்.  எனக்குத் தூங்குவதற்குப் போகவே தைரியம் இருக்காத. ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் அவன் வந்து எங்களையெல்லாம் தாக்குவானென்று தோன்றும்.  என் கணவர் தாமதமாக விட்டிற்கு வருவதால் என் படுக்கறையை சாத்துவதில்லை.  படுக்கயறை சாத்தியிருந்தால் தாமதமாக வரும் கணவர் எதையாவது நினைத்துக்கொண்டு விடுவார்.  வேலை கடுமையாக இருப்பதால் தாமதமாகத்தான் வருவார்.  அவருக்கு வேலையைத் தவிர மற்ற விஷயங்கள் எல்லாம் பொழுதுபோக்காகத்தான் இருக்கும்.  

            ஒருநாள் கிட்டத்தட்ட 2 மணி வரை விழித்திருந்தேன்.  நான் திடீரென்று விழித்துக்கொண்டபோது என் படுக்கைக்கு அருகில் அவன் என்னை வெறித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.  உடனே படுக்கையில் அருகில் இருந்த காசேலேன் விளக்கை அவனிடம் வீசினேன்.  அது ஒன்றுதான் இரவு முழுவதும் எரிந்து கொண்டிருந்தது.  இந்த ஊரில் மின்சாரம் இல்லை.  இருட்டை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியவில்லை.  விளக்கை கையால் தடுத்துவிட்டு அறையைவிட்டுப் போய்விட்டான்.  தரையில் விளக்கு விழுந்து எரிந்தது.  நான் கத்தியதைக் கேட்டு குடலூப் வரவில்லை என்றால், தீ வீடு முழுவதும் எரிந்து விட்டிருக்கும். 

            என் கணவருக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை அறிந்துகொள்ள நேரமில்லை.  வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்கு அக்கறையும் இல்லை.  நாங்கள் எது அவசியமோ அது மட்டும் பேசுவோம்.  எங்களிடையே எந்த அன்பும் இல்லை.

            இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு திரும்பவும் நான் கடுப்பாகி விட்டேன்.  குடலூப் கடைக்குச் சென்றுவிட்டாள்.  அவளுûடிடய குழந்தை மார்டினை படுக்கையில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள்.  பகல் முழுவதும் அப்படித்தான் விட்டுவிடுவாள். ஒவ்வொரு நாளும் பலமுறை பார்த்துக்கொண்டிருப்பேன்.  அவன் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருப்பான்.   ஒருநாள் மதிய நேரம் நான் என் குழந்தையின் தலைமயிரை வாரிக்கொண்டிருந்தபோது, மார்டின் கத்திக்கொண்டிருந்தான்.  நான் வெளியில் வந்து பார்த்தபோது அந்தச் சிறுவனை அவன் அடித்துக்கொண்டிருந்தான்.  அந்தப் பையனை அவனிடமிருந்து காப்பதற்கு கையில் இருந்ததை வைத்து அடித்தேன்.  நானும் மயக்கமாகி விழுந்து விட்டேன்.  குடலூப் கடைக்குப் போய்விட்டு வீடு திரும்பும்போது நான் மயக்கமாகிக் கிடைப்பதைப் பார்த்தாள்.  அவளுடைய பையன் நன்றாக அடிப்பட்டிருந்தான்.  கையெல்லாம் சிராய்ப்பு.  அவளுடைய கோபமும் வலியும் மோசமாக இருந்தன.  நல்லகாலம் அவள் பையன் இறந்துவிடவில்லை.  கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்குத் திரும்பிவிட்டான்.  

நான் பயந்துகொண்டிருந்தேன்.  குடலூப் என்னை விட்டுப் போய்விடுவாள் என்று.  நல்லகாலம்.  போகவில்லை.  அவள் தைரியமானவள்.  அத்தோடல்லாமல் என் குழந்தைகள் மீது அன்பு கொண்டவள்.  ஆனால் பழிவாங்கும் எண்ணம் அவளிடம் ஏற்படாமல் இல்லை.  

            என் கணவரிடம் என்ன நடந்தது என்பது பற்றிக் கூறினேன்.  அவனை வெளியே அனுப்பும்படி வற்புறுத்தினேன்.  மார்டினுக்கு நடந்ததுபோல் நம் குழந்தைகளுக்கும் நடக்குமென்றேன்.  

            “நீ அவனைப் பற்றி மோசமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாய்.   எனக்கே உன்னை இப்படிப் பார்ப்பது வெறுப்பாக உள்ளது.  பலமுறை உனக்குச் சொல்லியாயிற்று அவனால் உனக்கு எந்த ஆபத்தும் வராது என்று.ýü

            அந்த நிமிடம் எனக்குத் தோன்றியது.  இந்த வீட்டை விட்டு, கணவனை விட்டு, அவனைவிட்டு எங்காவது போய்விடலாமென்று.  ஆனால் என்னிடம் பணமில்லை.  யாரிடமும் தொடர்புகொள்வது எளிதானதல்ல.  எனக்கு உதவிசெய்ய நண்பர்களும், குடும்பமும் இல்லை.  நான் தனி ஆளாக இருப்பதாகப் படுகிறது.  

            என் குழந்தைகளும் பயப்பட        ஆரம்பித்தார்கள்.  தோட்டத்தில் விளையாடுவதை நிறுத்தி விட்டார்கள்.  நான் இருக்குமிடத்தை விட்டு அவர்கள் நகர்வதே இல்லை.  குடலூப் மார்க்கட்டுக்குப் போகும்போது நான் குழந்தைகளுடன் என் அறையில் இருப்பேன்.  

            ஒருநாள் குடலூப்பிடம் பேசும்போது, “இந்த நிலை இப்படியே நீடிக்காது,”என்றேன்.

            சீக்கிரமாக எதாவது செய்யவேண்டும்.  

            “நாமிருவரும் தனியாக ஒண்ணும் பண்ண முடியாது?”

            “இப்படி வெறுப்புடன் தனியாக இருப்பவனைப் பற்றி..”

            அவளிடம் ரகசியமான புன்னகை ஏற்பட்டது.  

            நாங்கள் கொஞ்சங்கூட எதிர்பாராத சந்தர்ப்பம் ஏற்பட்டது.  வியாபார விஷயமாக என் கணவர் வேறு இடத்திற்குச் சென்று விட்டார்.  ஒரு 20 நாட்கள் ஆகும் வெளியிலிருந்து திரும்பி வர என்று தெரியப்படுத்தினார்.  

            வெளியூருக்குக் கணவர் சென்றுவிட்டார் என்பது அவனுக்குத் தெரியுமா என்பதை யூகிக்கமுடியவில்லை.  ஆனால் அந்த நாட்களில் அவன் சீக்கிரமாக விழித்துக்கொண்டு என் அறையின் வாசலில் நின்று கொண்டிருந்தான்.  குடலூப்பும் அவள் குழந்தையும் என் அறையில் படுத்துக்கொண்டார்கள்.  முதன் முறையாக என் அறையைப் பூட்டினேன்.  

            குடலூப்பும் நானும் இரவு முழுவதும் விழித்திருந்து திட்டம் தீட்டிக் கொண்டிருந்தோம். 

குழந்தைகள் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தன.  ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவன் அறைக் கதவைத் தட்டிக்கொண்டிருப்பான்.  வேகமாகவும் அடிப்பான்.

            மூன்று குழந்தைகளுக்குக் காலை உணவை அளித்துவிட்டோம்.  எங்கள் திட்டப்படி அவர்கள் தொந்தரவு இல்லாதபடி யோசனை செய்து கொண்டிருந்தோம்.  சாப்பிடக்கூட நேரம் ஒதுக்காமல் வேகமாகச் செயல்பட நானும் குடலூப்பும் தயாரானோம்.

            குடலூப் நீளமான கனமான கம்பளிகளை வைத்திருந்தாள்.   நானோ கோடரியையும், ஆணிகளையும் தயார் செய்து வைத்துக்கொண்டிருந்தேன்.  நாங்கள் அமைதியாகக் கோடியில் இருக்கும் அறைக்குச் சென்றேன்.  அந்த அறையைச் சார்த்தி சுத்தியால் கதவைத் தட்டி முழுவதும் அடைத்துவிட்டோம்.  இதைச் செய்யும்போது வேர்த்து விறுவிறுத்துப்போனோம்.  அவன் எந்தச் சலனத்தையும் காட்டவில்லை.  நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான்.  இதை முடித்தபின் நானும் குடலூப்பும் அழுதபடி கட்டித் தழுவிக்கொண்டோம்.  

            மற்ற நாட்கள் எல்லாம் கடினமானவை.  அவன் அந்த அறையில் வெகு நேரமாகக் காற்று இல்லாமலும், உணவு இல்லாமலும், விளக்கு இல்லாமலும் கிடந்தான்.  முதலில் அவன் பலமாகக் கதவைத் தட்டினான்.   பெரிதாகச் சத்தம் போட்டான்.  குடலூப்பும், நானும் தூங்கவுமில்லை, சாப்பிடவுமில்லை.  அவனுடைய கத்தல் தாங்க முடியாமலிருந்தது.  சிலசமயம் நாங்கள் பயந்துகொண்டிருந்தோம்.  அவன் இறந்துபோவதற்கு முன்னலயே வந்துவிடுவாரோ என்று.  நான் நினைக்கிறேன்.  இரண்டு வாரங்கள் இந்த நிலையிலேயே அவன் இருந்தான்.

            ஒருநாள் எந்தச் சத்தமும் கேட்கவில்லை.  முனகல் கூட இல்லை.  இருந்தாலும் கதவைத் திறப்பதற்கு முன் நாங்கள் இன்னும் இரண்டு நாட்கள் காத்திருந்தோம்.  

            என் கணவர் திரும்பி வந்தபோது நாங்கள் மகிழ்ச்சியுடன் அந்தச் செய்தியைக் கூறினோம்.  அவருடைய விருந்தாளி எதிர்பாராதவிதமாய் மோசமாக இறந்து விட்டதாக.

3 Comments on “வீட்டு விருந்தாளி”

Comments are closed.