அசுணத்திற்குத் துன்பம்

கம்பனைக்காண்போம்—3


ளவ. துரையன்

               

கம்பன் அவையடக்கத்தில் தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்கிறான். அசுணம் எனும் பறவை முன்பு இருந்தது. கம்பன் அதை ’மா’ எனக்கூறி விலங்கென்கிறான். அது தன் செவியில் பறையொலி போன்ற வன்மையான ஒலி கேட்டால் மிகவும் வருந்தித் துன்பப் படுமாம். அதைத் தன் அவையடக்கத்தில் கம்பன் உவமையாகக் கூறுகிறான்.

”சான்றோர் பெருமக்கள் பல துறைகளை உடைய விருத்தப்பாக்களைக் கேட்டவர்கள்; அப்படிச் சிறந்த பாக்களுக்கு உறைவிடமாக இருக்கும் அவர்தம் செவிகளுக்கு என் பாடல்களை நான் ஓதினால், யாழின் தேன் போன்ற இன்னிசையைக் கேட்டு மகிழ்ந்த அசுணத்தின் செவிக்கு வன்மையான பறையொலியைக் கேட்டது போல இருக்கும்” எனத் தன்பாடல்களைப்பற்றி இப்பாடலில் அவையடக்கத்தோடு கூறிக்கொள்கிறான் எனலாம்.

         துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
    உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
    நறை அடுத்த அசுண நல்மாச் செவிப்
    பறை அடுத்தது போலும் என்பார் அரோ”               [7] 
                                         [நறை=தேன்]