
இந்த மழை பாடாய்ப்
படுத்தி எடுக்கிறது.
அணிலுக்கு அரிசி
போட முடியவில்லை.
காக்கைக்குச் சோறிட
முடியவில்லை.
துணிகள் காயாமல்
சின்னக்குழந்தைகள் போலச்
சிணுங்கி
அடம் பிடிக்கின்றன.
வாசலில் வீசி எறியப்பட்ட இன்றைய
நாளிதழ் நனைந்து அழுகிறது.
திருவிழாவில் பெற்றோரைத் தொலைத்த சிறுவனாய்
தெருநாய் இடம் தேடுகிறது.
அட்டைகளும்
சின்னஞ்சிறு மரவட்டைகளும்
அரசாட்சி நடத்தப்
பவனி வருகின்றன.
தெருவோரப் பூக்காரி
இன்று தண்டல் பணம்
கட்ட முடியாது.
நடு நடுவே வளரும்
பயிர்களுக்கு இது
நல்ல மழை என்று
விவசாயி மகிழ்கிறார்.
ஆமாம்.
வேப்பம்பூப் பச்சடியில்
சிறிது வெல்லம்.
